ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை: ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டம் பொதுமக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார். இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசுவாமி சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வீட்டு வசதி துறையில் ஆய்வின்போது பல நடவடிக்கை எடுத்துள்ளோம். கட்டிட அனுமதி கொடுப்பதில் பல சிக்கல்கள் இருந்ததன் அடிப்படையில் அதை பல வகையில் முதல்வர் ஆலோசனைப்படி சுலபமாக்கி இருக்கிறோம். மிக முக்கியமாக பெரிய அளவிலே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில், இன்றைக்கு முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டுள்ள 2400 சதுர அடி வைத்துள்ளவர்கள் 3400 சதுர அடி கட்டிடம் கட்டுவதற்காக அனுமதி கேட்டு காலதாமதம் ஆகிறது என்று பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது.

அதிகாரிகளுக்கும் நிறைய மனுக்கள் வரும் காரணத்தினால் அவர்களுக்கும் வேலைப்பளுவால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்துதான் முதல்வரால் சாதாரண மக்கள் அவர்கள் குடியிருப்பதற்காக கட்டுகின்ற மக்களுக்கு சுயசான்று அடிப்படையிலேயே கால தாமதம் செய்யாமல் மனு அளித்த உடன் கிடைக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தை சொல்லி அந்த அடிப்படையில்தான் முதல்வர் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அதேபோல் வீடுகளை கட்டி தரும் பொறியாளர்களையும் வழிநடத்தி உரிய அனுமதி பிரகாரம் வீடுகள் கட்டி தரப்படுகிறதா? ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை அவர்களே பார்த்துவிட்டு ஆன்லைனில் மனுவை அளித்துவிட்டு அவர்களே கட்டிக் கொள்ளலாம் என்பது தான் இந்த திட்டம்.

தமிழகத்தில் எங்கு வீடு கட்டினாலும் அதற்கு அனுமதி கொடுப்பதற்காக இந்த ஆன்லைன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. கட்டிடம் கட்டும் பொறியாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம். எந்தவித பிரச்னையும் இல்லாமல் கட்டிடத்தை தரமாக கட்டித் தர வேண்டும். ஏனென்றால் ஏற்கனவே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து பல உத்தரவுகள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: