×

அரசு பேருந்தை சிறைபிடித்த கிராமமக்கள்

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு – திருவள்ளூர் வழித்தடத்தில், தடம் எண் 82சி அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து, சிங்கபெருமாள் கோவில் – ஸ்ரீ பெரும்புதூர் சாலையில் முக்கிய கிராமங்களில் மட்டும் நின்று செல்லும். இந்தநிலையில் நேற்று மாலை செங்கப்பட்டில் இருந்து இந்த பேருந்தில் ஏறிய சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பயணிகள் சேந்தமங்கலம் கிராமத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளனர். சேந்தமங்கலம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என நடத்துனர் கூறியதால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பேருந்தில் வந்த பயணியர் செல்போன் மூலம் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சேந்தமங்கலம் வந்தபோது 50க்கும் மேற்பட்டோர் அந்த பேருந்தை நிறுத்தி சிறை பிடித்தனர். ஏன் பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றீர்கள் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பாலூர் போலீசார் கிராம மக்களை சமாதானம் செய்து அரசுப் பேருந்தை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சேந்தமங்கலம் கிராம மக்கள் கூறுகையில், ‘இந்த தடத்தல் ஒரகடம் – சிங்கபெருமாள் கோவில் இடையே உள்ள எந்த பேருந்து நிறுத்தத்திலும் அரசுப் பேருந்துகள் முறையாக நின்று செல்வதில்லை. அரசு பேருந்து டிரைவர்கள் இந்த தடத்தில் செல்லும் தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக செயல்படுகின்னறர்.

சேந்தமங்கலத்துக்கு டிக்கெட் கேட்டு அரசுப் பேருந்தில் ஏறினால் பின்னால் தனியார் பேருந்து வரும் எனக் கூறி இறக்கி விடுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் அதிக கட்டணம் கொடுத்து ஷேர் ஆட்டோக்களிலும், லிப்ட் கேட்டும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் அரசுப் பேருந்து நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post அரசு பேருந்தை சிறைபிடித்த கிராமமக்கள் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Thiruvallur ,Singaperumal Temple ,Sri Perumputur road ,Sengapat ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக...