பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 2025ல் இருந்து 2 சதவீத இடஒதுக்கீடு: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக வளாகத்தில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி நேற்று தொடங்கி வைத்தார் உயர்க்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக ஆணையர் ஆபிரகாம், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் உடனிருந்தனர். தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி: இந்த ஆண்டு மொத்தம் 433 கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 91 இடங்கள் உள்ளன. 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 பேர் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். முதல் நாளில் சிறப்பு பிரிவினர்களாக உள்ள மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகளில் அரசு பள்ளிகளில் படித்த என இரண்டு தகுதியும் உள்ள 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கியது.

மொத்தம் 713 இடங்களுக்கு 404 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்யவுள்ளனர். தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கான இரண்டு சதவிகித இடங்களில் 3,596 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் கலந்தாய்வு இல்லாமல் ஒற்றை சாளர முறையில் நேரடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது குறித்து வரும் ஆண்டில் பரிசீலிக்கப்படும். மேலும் விளையாட்டு பிரிவில் சேர்வதற்கு அதிக மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார்கள், இதனை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு முதல்வரிடம் பேசி, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு 2% ஒதுக்கீடு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை இணையதளங்களில் வெளியிடுவது போல் தன்னாட்சி பெற்ற கல்லூரி முடிவுகளையும் அடுத்த ஆண்டு முதல் இணையதளங்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும். பொறியியல் படிப்பிற்கான கட்டணம் உயர்த்தப்படாது. கடந்த ஆண்டு இருந்த கட்டணம் தான் இந்தாண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நேற்று தொடங்கிய அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து, பொதுப் பிரிவில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-27ம் தேதி வரையிலும், அதேபோல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29 முதல் செப்டம்பர் 3ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

The post பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 2025ல் இருந்து 2 சதவீத இடஒதுக்கீடு: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: