குருந்தன்கோடு மற்றும் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இரட்டைக்கரை கால்வாய் விளங்குகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வில்லுக்குறி, நுள்ளிவிளை, பேயன்குழி, காரங்காடு, செருப்பங்கோடு, ஆலன்விளை வழியாக பாய்ந்து குருந்தன்கோட்டில் இருந்து முட்டம் மற்றும் ராஜாக்கமங்கலம் கிளை கால்வாயாக பிரிந்து செல்கிறது.
இதன் மூலம் குளங்கள், கிணறுகள் நிரம்பி நிலத்தடி நீர் பெருகி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இரட்டைக்கரை கால்வாயை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர். கோடை காலத்தில் இந்த கால்வாய் தூர்வாரப்படுவது உண்டு.
இரட்டைக் கரை கால்வாய் வில்லுக்குறியில் இருந்து குருந்தன்கோடு வரை தண்ணீர் பாய்ந்து ஓட முடியாமல் சேறும் சகதியும் குவிந்து, புதர் மண்டி கிடக்கிறது. கால்வாயை தூர்வார விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இருந்தும் கால்வாயை தூர்வார நீர்வளத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் காரங்காடு பகுதியில் குவிந்து கிடக்கும் சகதி மற்றும் புதர்களை கத்தோலிக்க சங்கத்தினர் அகற்ற முடிவு செய்தனர். இந்த தூர்வாரும் பணி நேற்று நடந்தது. காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய கத்தோலிக்க சங்க தலைவர் மரிய உபால்ட், செயலாளர் மரிய சிலுவை, பொருளாளர் சுதாகர், காரங்காடு மறை வட்ட கத்தோலிக்க சங்க துணைச் செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
பங்குத்தந்தையும் கத்தோலிக்க சங்க இயக்குனருமான சுஜின் தொடங்கி வைத்தார். பங்குப்பேரவை நிர்வாகி சேவியர் ஜார்ஜ், கட்டிமாங்கோடு ஊராட்சி உறுப்பினர்கள் டெல்பின், மங்கள மேரி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜஸ்டின் உட்பட கத்தோலிக்க சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர். தன்னார்வலர்கள் சார்பில் டீ, பிஸ்கட் மற்றும் மதிய உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாக்கில் இறைச்சி கழிவுகள்
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது: கால்வாயில் தூர் வாரும் போது தண்ணீரில் கிடந்த கழிவுகள் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இறைச்சி கழிவுகளை சாக்கில் கட்டி போட்டுள்ளார்கள்.
அதில் குடல், கொழுப்பு, எலும்பு உட்பட்ட கழிவுகள் அழுகி புழு பிடித்து இருந்தது. இதை நாங்கள் கைகளால் அகற்றினோம்.
இன்னும் சொல்லக் கூடாத பலவும் கிடந்தது கிழிந்த பழைய உள்ளாடைகள், சேலைகள், தலையணைகள், மெத்தைகள், லுங்கிகள், பாய்கள், பெட்சீட்கள், உடைந்த உடையாத பாட்டில்கள், ஆஸ்பத்திரி கழிவுகள், சிறிஞ்ச் உள்ளிட்டவை கிடந்தன. இவை அனைத்தையும் அகற்றியுள்ளோம். சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற இது போன்றவற்றை கால்வாயில் வீச எப்படித்தான் மனம் வருகிறதோ. இனியாவது மக்கள் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற இதுபோன்ற செயல்களை செய்யாமல் இருக்க வேண்டும் என்றனர்.
கரையோரம் குப்பை
இரட்டைக் கரை கால்வாய் கரையோரம் கழிவுகளை கொட்டும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக வில்லுக்குறி பேரூராட்சி மற்றும் நுள்ளிவிளை, கட்டிமாங்கோடு, நெட்டாங்கோடு, குருந்தன்கோடு ஊராட்சி நிர்வாகம் இந்த கழிவுகளை அகற்றுவதுடன் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
The post காரங்காட்டில் இரட்டைக் கரை கால்வாயை தூர்வாரிய கத்தோலிக்க சங்கத்தினர் appeared first on Dinakaran.