திருப்பூரில் நடந்த இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்கள்

*கைது நடவடிக்கையின்போது சிதறி ஓடினர்

திருப்பூர் : திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் தடையை மீறி இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர். இதற்காக மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் 18 வயது கூட நிறைவு பெறாத சிறுவர்கள் அழைத்து வரப்பட்டனர். சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வரக்கூடாது என்ற விதிமுறையை மீறி ஆபத்தை உணராமல் சிறுவர்களை அழைத்து வந்தனர்.

முன்னதாக சிறுவர்கள் வாகனத்தின் மேற்பகுதியில் கொடியுடன் பெரிய குச்சிகளை பிடித்தவாறு ஆபத்தான முறையில் அழைத்து வரப்பட்டனர். அப்போது கொங்கு மெயின் ரோடு பகுதியில் இருந்த மின் ஒயர்கள் மீது குச்சிகள் உரசியதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் போனது. சிலர் இருசக்கர வாகனங்களில் சாலை விதிகளை மீறியவாறு ஹெல்மெட் அணியாமலும் 3 பேர் வரை அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய வகையில் அதிக ஒலி எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். கோஷங்கள் எழுப்பிய நிலையில் காவல்துறை சார்பில் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கைது செய்ய துவங்கியவுடன் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்கள் மங்களம் சாலை, புது மார்க்கெட் வீதி, மாநகராட்சி சாலை, பூங்கா சாலை என 4 புறங்களிலும் சிதறி ஓடினர். இதனை கண்ட இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறையினர் பயன்படுத்தக்கூடிய டிவைடர்களை சாலையில் அமைத்து சிறுவர்களை தடுத்தனர்.

தப்பி சென்ற சிறுவர்களை இந்து முன்னணியினர் மிரட்டி மீண்டும் அழைத்து வந்தனர். சிறுவர்களை அழைத்து வந்தது மட்டுமல்லாமல் அவர்களை குச்சியால் மிரட்டி கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்தனர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். அதிக எண்ணிக்கையில், கைது செய்யப்பட்டதாக கணக்கு காட்ட சிறுவர்களை அழைத்து வந்த இந்து முன்னணியினர் தப்பி ஓடிய சிறுவர்கள் பேருந்து வசதி செய்யாததால் சென்றதாக மழுப்பலாக தெரிவித்தனர்.

The post திருப்பூரில் நடந்த இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: