தண்ணீர் இணைப்பு சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி மூதாட்டியை ஏமாற்றி 43 பவுன் நகை கொள்ளை

 

வில்லியனூர், ஜூலை 22: வில்லியனூர் அருகே தண்ணீர் இணைப்பு சோதனை செய்ய வேண்டும் என கூறி மூதாட்டியை ஏமாற்றி வீட்டில் இருந்த 43 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வில்லியனூர் அருகே உறுவையாறு ராமச்சந்திரா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் மனைவி விமலா (40). இவர் கணவர், பிள்ளைகள், மாமியார், கொழுந்தனாருடன் ஒரே வீட்டில் இருந்து வருகிறார்.

தனியார் கல்லூரி அலுவலகத்தில் பணிபுரியும் இவர் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றுவிட்டார். பிள்ளைகள் பள்ளிகளுக்கும், மற்றவர்கள் வேலைக்கும் சென்றுவிட்டனர். வீட்டில் மாமியார் சந்திரா மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனிடையே காலை 2 மர்ம நபர்கள் விமலா வீட்டுக்கு பைக்கில் வந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சந்திராவிடம் கொம்யூன் பஞ்சாயத்தில் இருந்து வந்துள்ளோம். தண்ணீர் இணைப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதனை நம்பி சந்திரா வீட்டின் கதவை திறந்துள்ளார். பிறகு இருவரும் மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டியை பார்த்துள்ளனர். அவருடன் சந்திராவும் சென்றுள்ளார். பிறகு இருவரும் வேகமாக கீழே வந்துள்ளனர். சந்திரா மெதுவாக இறங்கி வந்துள்ளார். அதற்குள் இருவரும் வீட்டில் இருந்த நகையை கொள்ளை அடித்துக்கொண்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். பிறகு சிறிது நேரம் கழித்து சந்திரா வீட்டின் உள்ளே சென்றபோது பீரோவின்மேல் வைத்திருந்த நகை பையை காணவில்லை.

அதிர்ச்சியடைந்த அவர் விமலாவுக்குபோன் தகவல் தெரிவித்துள்ளார். அந்த பையில் நெக்லஸ், கமல், மோதிரம், செயின் உள்ளிட்ட ரூ.12 லட்சம் மதிப்புள்ள 43 பவுன் தங்க நகைகள் இருந்தது. இதுகுறித்து விமலா மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தண்ணீர் இணைப்பு சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி மூதாட்டியை ஏமாற்றி 43 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: