திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் திருப்பணி வேலைகள் முறையாக நடக்கிறதா?: அமைச்சர்கள் ஆய்வு

திருவெறும்பூர்: திருவெறும்பூரில் உள்ள மலைக்கோயில் என்று அழைக்கப்படும் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் ஆலயத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளி கல்லூரி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கோவிலில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகவும், காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஏழாவது தலமாகவும் உள்ள சிறப்புமிக்க பழமை வாய்ந்த நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் ஆலயம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அமைந்துள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் 1998 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பிறகு குடமுழுக்கு நடைபெறாமல் இதுவரை உள்ளது. இந்த நிலையில் குடமுழுக்கு பணிகள் நடைபெற வேண்டுமென அப்பகுதி மக்கள் பக்தர்களும் கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டது.

தொடர்ந்து குடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் இதுவரை அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் நடைபெறாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலை துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருச்சிக்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் எறும்பீஸ்வரர் ஆலயத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஆலயத்தில் அடிவாரத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தை பார்வையிட்டு பின் 128 படிகள் ஏறி மலைமேல் சென்று சிவபெருமான் வழிபட்டனர். தொடர்ந்து அங்கு நடைபெறக்கூடிய கோவில் திருப்பணிகள் குறித்து இரு அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது. கோயில் திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெறவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் எந்த அளவில் நடைபெறுகிறது என்பது குறித்தும் அதேபோல் அனுமதிக்காத பணிகளுக்கு தொல்லியல் துறையிடம் அனுமதி பெறுதல் குறித்தும், தெப்பக்குளம் பராமரிப்பு, விநாயகர் சன்னதி புதுப்பித்தல், முன் மண்டபம் சீரமைத்தல் ,உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைவுப்படுத்த வேண்டி இந்து சமய அறநிலைத்துறையிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இன்று இந்த ஆய்வானது நடைபெற்றது.

கூடிய விரைவில் அமைச்சர், மாவட்ட கலெக்டர் தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆகியோரை அழைத்து ஒரு ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம், அதில் என்னென்ன பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, என்னென்ன பணிகள் எந்த நிலையில் உள்ளன, அனுமதிக்காத பணிகளுக்கு அனுமதி பெறுதல், நிதி ஒதுக்கீடு செய்தல் ஆகியவை குறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்படும். விரைவில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையில் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் 26 கோயில்கள் உள்ளன. இதில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்த தமிழக அரசு மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு விண்ணப்பித்து உள்ளது. அவர்களும் படிப்படியாக திருப்பணிகள் செய்து வருகின்றனர். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொல்லியல் துறைக்கு அழுத்தம் கொடுத்து ஆறு கோவில்களை குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

ஏனைய கோவில்களில் குடமுழுக்கு நடத்த தொல்லியல் துறைக்கு இந்து சமய அறநிலைத்துறை தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்கும் என்றார். இந்த ஆய்வின்போது மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட இணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமணன், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் வித்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் திருப்பணி வேலைகள் முறையாக நடக்கிறதா?: அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: