300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட, 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள வணிக கட்டிடங்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அறிவிப்பு செய்தமைக்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது:
தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கக் கூடிய கடைகளுக்கு சீல் வைக்கக்கூடிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு இதில் தேவையான நடவடிக்கை எடுத்து வணிகர்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் யானைகள் வழித்தடத்தை உடனடியாக அமைக்க வேண்டும். இதனால் கடைகளை சீக்கிரமாக பூட்ட வேண்டிய நிலை இருக்கிறது. ஊட்டி வர்க்கிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு கொடுத்துள்ளது. அதை தமிழக முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றோம்.
தமிழகத்தில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். படிப்படியாக விரைவில் அனைத்து பெயர் பலகைகளும் தமிழில் கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் உள்ள 80 சதவீத வியாபாரிகள் தமிழில் பெயர் பலகை வைத்திருக்கிறார்கள். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் ஆங்கிலத்திலும், பிற மொழியிலும் பெயர் பலகைகளை வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் இந்தியில் கூட பெயர் பலகை வைக்கிறார்கள். இந்த ஆபத்தை உணர்ந்துதான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். தமிழகத்தில் போக்கிரிகள், ரவுடிகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதற்கு என்ன மாதிரியான ஒத்துழைப்பு தேவையோ அதை வணிகர்கள் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post அனைத்து கடைகளின் பெயர் பலகைகளும் படிப்படியாக தமிழில் கொண்டு வரப்படும் appeared first on Dinakaran.