அண்ணாமலை வெளிநாடு செல்ல மோடி அனுமதி தமிழக பாஜ தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்? மோடி முடிவால் பரபரப்பு

சென்னை: அண்ணாமலை வெளிநாடு செல்ல, பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து தமிழக பாஜவுக்கு புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை நியமிக்க முடிவு செய்துள்ளதால் கட்சிக்குள் பரபரப்பு எழுந்துள்ளது. தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு பரபரப்பு அரசியலை தொடங்கினார். இதனால் அவரது நடவடிக்கைகளால், கட்சியிலும் சரி அரசியலிலும் சரி புதிய பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது நடவடிக்கைகள் திடீரென திசை மாறின.

கட்சியினரைப் பற்றி அவரது ஆட்களே ஆபாச வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதிமுகவுடன் கூட்டணி சேருவதை திட்டமிட்டு அண்ணாமலை எதிர்க்கத் தொடங்கினார். இதனால் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து கடும் விமர்சனங்களை வைத்தார். அவர் நினைத்ததுபோல கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. ஆர்.எஸ்.எஸ்., ஒரு நபரை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், பல தலைவர்களை முன்னிலைப்படுத்தத் தொடங்குவார்கள்.

அதேபோல, மோடிக்கு மாற்றாக இளைய தலைமுறையினரை வளர்க்கத் தொடங்கியது. அதன்படிதான், உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத், தமிழகத்தில் அண்ணாமலை, கர்நாடகாவில் சூர்யா, வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த அனுராக் தாக்கூர் ஆகியோரை வளர்க்கத் தொடங்கியது. ஆனால் இவர்கள் ஒவ்வொருவராக பாஜகவின் ஒரு பிரிவினரால் காலி செய்யப்பட்டனர். அதன் ஒரு கட்டமாகத்தான் அண்ணாமலையும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட வாய்ப்புகள் உருவாகின.

தான் ஓரங்கட்டப்படுவது தெரிந்ததும், வெளிநாடு சென்று படிக்க விரும்புவதாக அண்ணாமலை தலைமைக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்துக்கு அனுமதி அளிக்காமல் இருந்த பிரதமர் மோடி, திடீரென்று தற்போது அனுமதி அளித்துள்ளனர். இதன் மூலம் அண்ணாமலை வெளிநாடு செல்வது உறுதியாகிவிட்டது. அவர் 6 மாதத்துக்கு தமிழகம் வரமாட்டார் என்பதால், கட்சியை நடத்த தற்காலிகமாக ஒரு தலைவரை நியமிக்க மோலிடிம் முடிவு செய்துள்ளது.

இதற்காக மூத்த தலைவர்களிடம் மோடி, அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தி வந்தனர். அதன்படி தமிழக பாஜவின் மூத்த தலைவரும், சட்டமன்றக் கட்சித் தலைவருமான நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தமாதம் அண்ணாமலை வெளிநாடு சென்றதும், இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயினார் நியமிக்கப்பட்டால், பல கட்சிகளுடன் மோதல் போக்கை கைவிட்டு, பழையபடி கூட்டணியை உருவாக்க பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் 6 மாதத்திற்குப் பிறகு அண்ணாமலை தமிழகம் திரும்பும்போது அவருக்கு தேசிய அளவில் ஒரு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு, வேறு மாநில மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post அண்ணாமலை வெளிநாடு செல்ல மோடி அனுமதி தமிழக பாஜ தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்? மோடி முடிவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: