1982ல் கலைஞரால் மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட இன்றைய திமுக தலைவர், தன் இடைவிடா உழைப்பின் மூலம் திமுக இளைஞர் அணியை வலிமை வாய்ந்த ஆற்றல்மிக்க அணியாக உருவாக்கினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து, திமுகவினரின் வேண்டுகோளின்படியும் தலைமைக் கழகத்தின் முடிவின்படியும் அதே ஆண்டு ஜூலை 4 அன்று மாநில இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பேற்றேன்.
இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சிப் பாசறை கூட்டங்களை நடத்தினோம். அன்று, நாம் எதிர்க்கட்சி என்றபோதிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கைவிடப்பட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டோம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் முதல், நீட் தேர்வை ஒழிக்க கையெழுத்து இயக்கம் வரையிலான போராட்ட செயற்பாடுகளை முன்னெடுத்தோம். இணையத்தில் திமுகவின் மீது சுமத்தப்படும் அவதூறுகளை முறியடிக்க, சமூகவலைத்தளத் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தோம்.
இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று என்னும் உலகளாவிய நெருக்கடி. ஆனாலும், கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்கள் துயர் துடைத்தோம். தொகுதிதோறும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம், வாசிப்பை விரிவுபடுத்த சட்டமன்ற தொகுதிதோறும் `கலைஞர் நூலகம்’, `முரசொலி பாசறைப் பக்கம்’, `முத்தமிழறிஞர் பதிப்பகம்’ என்று ஏராளமான பணிகளை முன்னெடுத்திருக்கிறோம்.
குறிப்பாக, 2007ல் இன்றைய திமுக தலைவரால் நெல்லையில் நடந்த இளைஞர் அணியின் முதல் மாநில மாநாட்டின் தொடர்ச்சியாக, 2024ல் சேலத்தில் இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை எழுச்சியுடன் நடத்திக்காட்டினோம். தலைவரின் வழிகாட்டுதலும் இளைஞர் அணி தோழர்களின் உற்சாகமும் ஒத்துழைப்புமே இவற்றைச் சாதித்துக்காட்டின. கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி, ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் வாரியாக திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறோம்.
இப்படி திமுக இளைஞர் அணி ஆற்றிய பணிகள் ஏராளம் என்றாலும், காத்திருக்கும் பணிகளும் ஏராளம். மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. ஆனால், கல்வி, தொழில்வளர்ச்சி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு பெற்ற வளர்ச்சியைச் சீர்குலைக்க வேண்டும், மக்களைப் பிளவுபடுத்தி, மதவாத, சாதியவாத வெறியூட்டி அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று ஒருபுறம் பாசிச சக்திகள் காத்திருக்கிறார்கள்.
இன்னொருபுறம், திமுக எதிர்ப்பை மட்டுமே முதன்மை இலக்காகக் கொண்டு திமுகவின் மீதும் திராவிட இயக்க முன்னோடிகள் மீதும் திராவிட மாடல் ஆட்சியின் மீதும், அவதூறுகளையும் பொய்ச்செய்திகளையும் பரப்புவதன் மூலம் திமுகவை வீழ்த்த முடியும் என்று நினைக்கும் கயவர்களும் காத்திருக்கிறார்கள். நமக்கோ 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது.
தொடர் வெற்றிகளை குவித்துவரும் திமுக தலைவரின் தலைமையில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அதன்மூலம் தமிழர்கள் வளம் பெற்று தமிழ்நாடு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும். இத்தகைய மாபெரும் கடமையை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு திமுக இளைஞர் அணிக்கு இருக்கிறது. சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை, மீண்டும் 2026ல் அமைக்க இளைஞர் அணியின் 45ம் ஆண்டு விழாவில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திமுக இளைஞர் அணியின் 45ம் ஆண்டு விழா சாதனை ஆட்சியை மீண்டும் 2026ல் அமைக்க உறுதியேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை appeared first on Dinakaran.