கன மழையால் 4வது நாளாக குந்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

மஞ்சூர் : தொடர் ந்து பெய்து வரும் கன மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதை தொடர்ந்து குந்தா அணையில் இருந்து 4வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக ப்பர்பவானி,அவலாஞ்சி,எமரால்டு,போர்த்திமந்து உள்பட நீர்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்கிறது.

இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இதன் காரணமாக குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. மஞ்சூர் அருகே உள்ள பிகுளி,தொட்டஹள்ளா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதால் குந்தா அணைக்கு நீர்வரத்து பல மடங்கு உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 89அடியை எட்டியதை தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன் குந்தா அணையின் இரு மதகுகளும் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த இரு தினங்களாக அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 500கனஅடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. நேற்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்ததால் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து வௌியேற்றும் நீரின் அளவு குறைக்கப்பட்டு வினாடிக்கு 300 கனஅடியாக நீர் வெளியேற்றப்பட்டது.

4வது நாளாக தொடர்ந்து குந்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் மின்வாரிய தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. குந்தா அணை திறந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கெத்தை அணையின் நீர் மட்டம் மள,மளவென உயர்ந்து வருகிறது. மேலும் குந்தா,கெத்தை, பரளி மின்நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கன மழையால் 4வது நாளாக குந்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: