கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.30 வரை விற்பனையான தக்காளி கடந்த 2 நாட்களில் ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் சென்னையின் பல்வேறு இடங்களிலும் உள்ள சிறு காய்கறி மார்க்கெட்டுகள், சிறு சிறு கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனையானது. தக்காளியின் திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மேலும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், என்று பொதுமக்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் நேற்று காலை ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து 32 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்தது. தக்காளி விலை மேலும் உயருமோ, என்று சிறு வியாபாரிகளும், பொதுமக்கள் கலக்கம் அடைந்த நிலையில், மேலும், கூடுதலாக 8 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது.
இதனால் தக்காளியின் விலை பாதியாக குறைந்து, ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையானது. தக்காளி விலை குறைந்ததால் சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். ஆர்வத்துடன் தக்காளியை வாங்கிச் சென்றனர். இதேபோல் சிறு காய்கறி மார்க்கெட்கள், கடைகளிலும் தக்காளி ஒரு கிலோ ரூ.45க்கு விற்பனையானது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனை: இல்லத்தரசிகள் நிம்மதி appeared first on Dinakaran.