மின் கட்டண உயர்வை தொடர்ந்து புதிய மின் இணைப்பு, சேவை கட்டணம் உயர்வு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

சென்னை: புதிய மின் இணைப்பு, சேவை கட்டணம் மற்றும் மீட்டர் கட்டண வைப்புத்தொகை ஆகியவற்றை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்கட்டணம் கடந்த 1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்து ஒரு யூனிட்டுக்கு 20 காசு முதல் 55 காசு வரை உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது. அதன்படி 101 முதல் 400 யூனிட் வரை 20 காசு, 401 முதல் 500 யூனிட் வரை 30 காசு, 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை 40 காசு, 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை 45 காசு, 801 யூனிட் முதல் 1,000 யூனிட் வரை 50 காசு, 1,000க்கும் மேல் 55 காசு என கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய இணைப்பு மற்றும் மீட்டர் கட்டணங்கள் (வைப்புத் தொகை), பதிவுக் கட்டணங்கள், மேம்பாட்டுக் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கான சேவை கட்டணங்களும் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான ஒருமுனை இணைப்புக்கு (சிங்கிள் பேஸ்) கட்டணம் ரூ.1,020ல் இருந்து ரூ.1070ஆகவும், மும்முனை இணைப்பு (3 பேஸ்) கட்டணம் ரூ.1,535லிருந்து ரூ.1,610 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மீட்டர் பிணையத் தொகையாக ஒருமுனை இணைப்புக்கு ரூ.765லிருந்து ரூ.800 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.2,045லிருந்து ரூ.2,145 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மறு இணைப்பு கட்டணமாக ஒருமுனை இணைப்புக்கு ரூ.125 முதல் ரூ.510 வரை வசூலிக்கப்பட்டது. தற்போது புதிய கட்டணமாக ரூ.130 முதல் ரூ.635 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்திற்கு ரூ.615லிருந்து ரூ.645ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மின் மீட்டரை மாற்றுவதற்கு ஒரு முனை இணைப்புக்கு ரூ.1,020ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.1,535 ஆகவும் இருந்தது. தற்போது ஒருமுனை இணைப்புக்கு ரூ.1070ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.1510 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

The post மின் கட்டண உயர்வை தொடர்ந்து புதிய மின் இணைப்பு, சேவை கட்டணம் உயர்வு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: