ஓரிக்கையில் இருந்து செவிலிமேடு வரை 4 வழி பாலம் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் இருந்து செவிலிமேடு வரை அமைக்கப்படும் நான்கு வழி பாலம் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கமலநாதன் தலைமையில் குடியிருப்புவாசிகள், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் இருந்து செவிலிமேடு வரை 3 கிலோ மீட்டர் தொலைவு நான்கு வழி சாலை மற்றும் 90 மீட்டர் தொலைவில் பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், இந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம்.

ஏற்கனவே, 2020ம் ஆண்டு சாலை விரிவாக்கம் செய்வதற்காக இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், தங்கள் நிலங்களை மிக குறைந்த விலைக்கு கொடுத்துள்ளனர். இவ்வாறு, சாலை விரிவாக்கத்திற்காக கொடுத்த இடங்களில் அவரவர்கள் தங்கள் கட்டிடங்களை இடித்து, இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. அதற்குள் மேற்கொண்ட பகுதியில் நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டுவது என்றால், இந்த பகுதியில் உள்ள சாலை ஓரம் குடியிருப்புகள், குடியிருப்பு வாசிகள் மற்றும் சிறு வணிகர்கள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். எனவே, குடியிருப்பு வாசிகள் கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நான்கு வழி சாலை பாலம் அமைக்கும் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

 

The post ஓரிக்கையில் இருந்து செவிலிமேடு வரை 4 வழி பாலம் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: