திருமழிசை, விச்சூர் தொழிற்பேட்டைகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை: கலெக்டர் நேரில் ஆய்வு

திருவள்ளூர்: திருமழிசை, விச்சூர் தொழிற்பேட்டைகளில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் மழைக் காலங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக திருமழிசை தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளை வைத்துள்ள தொழில் முனைவோர்கள், அரசு அலுவலர்கள், நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் தொழிற் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். சென்னை மாநகராட்சி (வடக்கு) வட்டார துணை ஆணையர் கட்டா ரவிதேஜா முன்னிலை வகித்தனர். இந்த தொழிற்பேட்டையில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள், அதை தடுப்பதற்கு குறுகிய காலத்திட்டங்கள் மற்றும் நீண்ட கால திட்டங்கள் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளை விரைவில் அமல்படுத்தப் போவதாக தமிழ்நாடு அரசின் சார்பாக தொழில் முனைவோர்களுக்கு தெரிவித்தனர். சென்ற ஆண்டு வடகிழக்கு பருவமழை, மிக்ஜாம் புயல் காரணமாக ஒரே நாளில் 30 சென்டி மீட்டர் அளவுக்கு அதிக அளவில் மழை பெய்தது. அதே அளவு மழை இந்தாண்டு வடகிழக்கு பருவமழையில் பெய்தாலும் அந்த தாக்கத்தை தடுப்பதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டு எடுக்கக்கூடிய சிறப்பான முயற்சிகள் மூலம் தொழிற்பேட்டையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த முறை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட தொழிற்சாலைகளுக்கு அவர்களின் காப்பீட்டு திட்ட நிதிகளை பொறுத்து நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொழில் முனைவோர்களுக்கு எளிமையான முறையில் அரசின் குறைந்த வட்டியில் தொழில் கடன்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டை பொறுத்தவரை பொருள் சேதங்களை குறைப்பதற்கும், உயிர் சேதங்கள் முற்றிலும் ஏற்படாத வண்ணமும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. திருமழிசை தொழிற்பேட்டை செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி 3.6 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த தொழில்பேட்டை செம்பரம்பாக்கம் ஏரியை விட 5 மீட்டர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக நீர் வரத்து அதிகமாகி நீர்மட்டம் உயரும்போது தாமாகவே நிலத்தடி நீர் இயற்கையிலே அதிகமாகவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. மேலும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் எங்கெல்லாம் நடைபெற்று இருக்கிறதோ அது உடனடியாக சீர் செய்யப்படும்.

தேவையான இடங்களில் மழை நீரை வெளியேற்றுவதற்காக கால்வாய்களும் அமைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ்குப்தா, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம், பேருராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.ஜெயகுமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், பூந்தமல்லி வட்டாட்சியர் ஆர்.கோவிந்தராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் க.வெங்கடேசன், திருமழிசை பேருராட்சி தலைவர் ஜெ.மகாதேவன், செயல் அலுவலர் ம.வெங்கடேஷ், செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து விச்சூர் தொழிற்பேட்டைக்கு செல்லும் வடிகால்வாயை பார்வையிட்டு உடனே கால்வாயினை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தினார். பொன்னேரி சப் – கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவானன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post திருமழிசை, விச்சூர் தொழிற்பேட்டைகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை: கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: