பார்வையற்றோருக்கு உதவுவதே எனது வாழ்நாள் லட்சியம்!

நன்றி குங்குமம் தோழி

சமூக சேவகி அம்பிகா ராஜ்

‘‘பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது” என்கிற குறள் நெறிக்கேற்ப தன்னலம் கருதாது பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்காக தனது பதினெட்டு வயது முதல் தொடர்ந்து உதவி வருபவர் சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வரும் அம்பிகா ராஜ். இவர் சென்னையில் விழியிழந்தோருக்கு உதவுவதற்காகவே ‘அகல் ஃபவுண்டேஷன்’ என்கிற அமைப்பினை உருவாக்கி பல்வேறு நலத்திட்ட உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பார்வையிழந்த மாணவர்களுக்கு பல உதவிகளை இவர் செய்து வருகிறார்.

‘‘சராசரியற்ற மாணவர்களை போல் இல்லை விழியிழந்த மாணவர்களின் நிலை. அவர்களால் பிரைல் கொண்டு படிக்க முடியுமே தவிர அதனை எழுத முடியாது. அதனால் தேர்வில் கூட உதவியாளர் துணையுடன்தான் அவர்கள் பதில் எழுதுவார்கள். உதவியாளர் கேள்வித்தாளில் உள்ள கேள்வியினை படித்து காண்பிப்பார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் பதிலை உதவியாளர் விடைத்தாளில் எழுத வேண்டும். தாங்கள் சொன்னதைத்தான் உதவியாளர் எழுதுகிறாரா என்பதைக்கூட இவர்களால் அறிந்துகொள்ள முடியாது. அத்தகைய சவால்கள் நிறைந்ததுதான் பார்வையற்றவர்கள் உலகம்’’ என ஆதங்கத்துடன் சொல்கிறார் அம்பிகா ராஜ்.

‘‘எனது சொந்த ஊர் தஞ்சாவூர். வறுமையான சூழல் காரணமாக எனக்கு சிறுவயதிலேயே பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில் திருமணம் ஆகிவிட்டது. பெரிய கனவுகளுடன் வலம் வந்த எனக்கு மேற்படிப்பை அப்போது தொடர முடியாமல் போய்விட்டது என்பது ஆகப்பெரும் வருத்தமாக இருந்தது. வெறும் குடும்பத் தலைவியாக மட்டுமே இருப்பதில் எனக்கு ஆர்வமில்லை. வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற லட்சிய வெறி மட்டும் மனதுக்குள் நிறைய இருந்தது. அதன் செயல் வடிவம்தான் இந்த விழியிழந்தோருக்கான அறக்கட்டளை.

நான் திருமணமாகி சென்னைக்கு வந்த பிறகு அவ்வப்போது பார்வையற்றோருக்கு ஸ்கிரைப்பாக செயல்பட்டு வந்தேன். அவர்களுக்கு தேர்வு எழுதி உதவிகள் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் அவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு அவர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்னைகள், சவால்கள் இருப்பதும் புரிந்தது. அதன் பிறகு அவர்களுக்காக ஏதேனும் உதவிகள் செய்து விட வேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் தோன்றிக் கொண்ேட இருந்தது.

என்னால் தனிப்பட்ட முறையில் உதவி செய்ய முடியாது என்பதால், அதனை ஒரு அமைப்பாக அமைத்து அதன் மூலம் செயல்படுத்த விரும்பினேன். அப்படித்தான் அகல் ஃபவுண்டேஷன் துவங்கி செயல்பட துவங்கினேன். அதன் மூலம் இன்று விழியிழந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை நிலையிலுள்ள ஆதரவற்ற பெண்கள் என பலருக்கும் தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம்’’ என்றவர் பார்வையற்றோருக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து விவரித்தார்.

‘‘கடந்த எட்டு வருடங்களாக எங்களின் அமைப்பு மூலம் பார்வையற்றோருக்கும், ஆதரவற்றோருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். எங்களது அறக்கட்டளையில் 1000 பேருக்கு மேல் வாலண்டியர்ஸாக இருக்கிறார்கள். அதே போன்று பார்வையற்றோருக்கு தேர்வு எழுத இதுவரை ஏராளமானோர் ஸ்கிரைப்பாக வந்துள்ளனர். இதனை தவிர அவர்களுக்கு புத்தகங்களை படித்து சொல்வது, இசைப் பணி, விளையாட்டு என பல துறை சார்ந்து பல்வேறு உதவிகளையும், ஊக்கங்களையும் அளித்து வருகிறோம். எங்களின் அறக்கட்டளை மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் அவர்களுக்கான தேர்வெழுத ஸ்கிரைப்களையும் ஏற்பாடு செய்து தருகிறோம். இவர்களுக்காக, போட்டித் தேர்வுகளுக்கு 2500 ஆடியோ பதிவு புத்தகங்கள் தயார் செய்து தந்துள்ளோம். அந்த ஆடியோ புத்தகங்களை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் அவர்கள் மனதில் பாடங்கள் எளிதாக பதிந்து அவர்கள் தேர்வெழுத வசதியாக இருக்கிறது.

எங்களால் முடிந்த உதவிகளை நாங்க செய்கிறோம். ஆனால் சமூகத்தின் முழு ஒத்துழைப்பு கிடைத்தால் இவர்களுக்கு நிறைய நலத்திட்டங்களை அமைத்து தர முடியும். தற்போது வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட விழியிழந்தோருக்கு நிறைய உதவ முன் வருகிறார்கள். இவர்கள் நன்கொடைகள் தருவதோடு ஆடியோ புத்தகங்கள் தயாரித்தும் தருகிறார்கள். தற்போது இவர்களுக்கு தேர்வு எழுத உதவி செய்ய ‘ஸ்கிரைப்கள்’ தேவைப்படுகிறார்கள்.

பதினெட்டு வயது முதல் 80 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் ஸ்கிரைப்பாக வரலாம். அதே போன்று இவர்களது கல்விக்கு மற்றும் தேர்வுகளுக்கு உதவும் வகையில் புத்தகங்கள் படித்து உதவ முன்வந்தாலும் அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நாங்க பார்வையற்றவர்களுக்கு மட்டுமில்லாமல் கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள், வேலையற்ற ஒற்றை பெற்றோர், திருநங்கைகள் மற்றும் ஆட்டிசம் உள்ள குழந்தைகள் என பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைப்படும் அத்தியாவசியமான மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறோம். கோவிட் காலத்தில் பலருக்கும் சுகாதார கிட்களையும் வழங்கினோம். இதுவரை எங்களது அறக்கட்டளையின் மூலம் 90 லட்சம் ரூபாய் அளவிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்’’ என்றவர் பார்வையற்றோர் தங்களின் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களைப் பற்றி குறிப்பிட்டார்.

‘‘வாழ்க்கையில் பார்வையற்றோருக்கு பல்வேறு சவால்கள் இருப்பது உண்மை தான். அதில் முதன்மையானது அவர்களுக்கான வேலை வாய்ப்பு. அவர்கள் உயர் கல்வி படித்திருந்தாலும், டாக்டர் பட்டமே வாங்கியிருந்தாலும் அவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது பெரிய சவாலாகத் தான் இருக்கிறது. அடுத்து திருமணம். விழியிழந்த பெண்ணுக்கு அதே குறைபாட்டுள்ள ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ளும் நிலைதான் இன்றும் இருக்கிறது. இது நடைமுறை வாழ்வில் பெரும் சவால்கள் மற்றும் சிக்கல்கள் ஏற்படுத்தும்.

இந்த நிலை மாற வேண்டும். இவர்களை குறித்து சமூகத்தின் பார்வையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. அதே போன்று பார்வையற்றோர் என்றாலே பிச்சைக்காரர்கள், பாட்டு பாடி பிழைப்பு நடத்துபவர்கள், படிக்காதவர்கள் என்கிற ஏளன பார்வையை தவிர்க்க வேண்டும். அவர்களும் நம்மை போன்றவர்கள் என்கிற எண்ணம் ஏற்பட வேண்டும். இவர்கள் இதனை செய்ய காரணம் வேலைவாய்ப்பின்மை என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய பலரும் முன்வந்தால் அவர்கள் வாழ்வு வளமாகும். பொது இடங்களில் அவர்களுக்கான இருக்கை வசதிகள், ரயில் மற்றும் பேருந்துகளில் ஏறி இறங்கும் வசதிகள் என முன்னுரிமை அளித்தால் நன்றாக இருக்கும்.

பல்வேறு தேர்வுகள் பெரும்பாலும் சென்னையில்தான் நடைபெறுகிறது. அதற்காக தமிழகமெங்கிருந்தும் சென்னைக்கு வரும் பார்வையற்ற மாணவ, மாணவிகளை தங்க வைக்க எங்களிடம் போதுமான விடுதி வசதிகள் இல்லை. தனியார் விடுதிகளுக்கு நாங்கள் கட்டணம் செலுத்தி அவர்களை அங்கு தங்க வைக்கிறோம். எங்களது அறக்கட்டளை மூலம் சொந்தமான விடுதியை கட்ட வேண்டும் என்பதே என்னுடைய அடுத்த லட்சியம்.

அதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். கூடிய விரைவில் சொந்த விடுதியை அமைத்து அதில் இவர்கள் இலவசமாக தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்வேன். இவர்களுக்கு பார்வைத்திறன் குறைவாக இருந்தாலும், அவர்களுக்கு கேட்கும் திறன் மற்றும் கைகளும் உறுதியாக இருக்கும். அதனால் அவர்களுக்கு ஃபுட் மசாஜ் தெரபிகளை கற்றுக் கொடுத்து அதன் மூலம் நிரந்தர வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்கான முயற்சிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இது குறித்து முறையான அறிவிப்பினை செய்து இத்திட்டங்களை துவக்க இருக்கிறோம். இன்னும் நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்த இருக்கிறோம்.

முதலில் விழியிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை நமது அன்பும் அரவணைப்பும்தானே தவிர, பரிதாப பார்வையில்லை. அவர்களும் நம்மைப் போல நல்ல திறமைசாலிகள்தான். அவர்களுக்கான வாய்ப்புகள் சரிவர கிடைக்கும் பட்சத்தில் தங்கள் திறமையினை வெளிப்படுத்தி நல்ல நிலைக்கு வருவார்கள். நாம் அவர்களுக்காக நமது நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கினாலே போதும்’’ என்று கூறும் அம்பிகா ராஜ், சிறந்த பெண் சாதனையாளர், பாரதி கண்ட புதுமைப் பெண், வீரமங்கை வேலு நாச்சியார், அப்துல் கலாம் விருது, சிங்கப்பெண் என பல விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: தனுஜா

The post பார்வையற்றோருக்கு உதவுவதே எனது வாழ்நாள் லட்சியம்! appeared first on Dinakaran.

Related Stories: