சிறுகதை-மனதில் என்ன நினைவுகளோ?

நன்றி குங்குமம் தோழி

“என்னம்மா இது? ஃப்ளாஸ்க்ல பால் அப்படியே இருக்கு. பழங்களை கூடத் தொடலே! இப்படி இருந்தா உடம்பு எப்படி குணமாகும்?” முப்பது வயது
இளைஞனொருவன் ஆதங்கமாய் கேட்டான்.“பிடிக்கலே ராகவா… வாய்க்கு சரிப்படலே”… அந்த ஆயாசத்தில் பெருமிதம் கலந்திருந்தது அந்த பெண்மணிக்கு.“பிடிக்கலைன்னா… சாப்பிடாம இருந்திடறதா? என்னங்க… அந்த பார்சலைப் பிரிங்க” என்ற மருமகள் வயர் கூடையிலிருந்து ஸ்டீல் தட்டை எடுத்தாள்.

கணவன் தந்த பார்சலிலிருந்து இடியாப்பத்தை எடுத்து தட்டில் வைத்து பால் ஊற்றி மாமியாருக்கு ஊட்டத் தொடங்கினாள்.
“வேண்டாம் ருக்கு…
சாப்பிடப் பிடிக்கலேம்மா”…
“இன்னும் ஒரு வாரத்தில் ஆபரேஷன்… உடம்புல சக்தி வேண்டாமா? சாப்பிடுங்க அத்தை!”

ஏக்கத்துடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த விஜயா, அதற்கு மேல் பார்க்க திராணியின்றி மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.
கண்களின் உப்பு நீர்… காது மடலை நோக்கி இறங்கியது.நரையோடிய அலையலையான கூந்தலும், களைப்பை மீறிய களையான முகமும், முன்பு எப்போதோ சாப்பிட்ட சத்துள்ள உணவின் வனப்பும்… வாழ்ந்து கெட்டவள் என்பதை அப்பட்டமாய் காண்பித்தது.

அது… அரசு மருத்துவமனை!

நீளமான வராண்டாவில் எதிரும் புதிருமாக நாற்பது படுக்கைகள். எவ்வளவுதான் அரசாங்கமும், ஹாஸ்பிடலும், சுத்தம்… சுத்தம் என்று சுகாதாரத்தை வலியுறுத்தியிருந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால், கட்டடத்தின் புதிய சுவர்கள் வெற்றிலை குதப்பிய எச்சிலால்.. அவமானம் பூசி நின்றன. டெட்டால் வாசத்தை மீறி மூத்திர வாடை சுமந்து வந்தது காற்று!
பதினேழு வயது மகளை வீல் சேரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தாள் பரமேஸ்வரி.

மகளை சிரமத்துடன் குழந்தையைப் போல் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவளைப் பார்த்தாலே… உழைத்துக் கலைத்த உடலும்,உடையும்…முகமுமாய் வறுமையின் கோட்டையில் வசிப்பவள் என்று சொல்லாமல் சொல்லியது. நான்கைந்து வீடுகளில் வீட்டு வேலை செய்பவள். கணவன் வயிறு முட்ட குடித்து உயிர் விட்டதால் ஒரே மகளின் வயிறு காயாமல், படிக்க வைத்து… ஃபுட்பால் பிளேயராக தேசிய அளவில் நான்காம் இடத்தில் அமர்த்தியிருப்பதில் அசத்தலான அவளின் உழைப்பு இருக்கிறது. மகளை இந்த அளவிற்கு உயர்த்த, வாடகைத் தாயாகவும் இருந்திருக்கிறாள்.

‘‘கால்ல ஆபரேஷன் பண்ணிய புள்ளைய எதுக்கு பாத்ரூமுக்கெல்லாம் அழைச்சிட்டு போறே? பெட்லயே…” அக்கறையோடு கேட்டாள் பக்கத்து கட்டிலிலிருந்த விஜயா.
‘‘இல்லே பாட்டி…சும்மாவே படுத்த இடத்திலேயே சூச்சூல்லாம் போயிட்டிருந்தா… எப்ப எழுந்து நடக்கிறதாம்?”‘‘டைமாச்சுடி காவ்யா… அம்மா கிளம்பட்டா? சீக்கிரம் வந்துருவேன்!”‘‘சரிம்மா!” என்றாள் காவ்யா. பயிற்சியின்போது கால் முட்டியில் அடிபட்டு, ரத்தம் உறைந்து நடக்க முடியாமல், ஆபரேஷன்வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது.‘‘ஒரு ஆத்திர அவசரத்துக்கு பக்கத்துல நீ இருந்தா தானே?” சில நாட்கள் பழகிய உரிமையில் சொன்னாள் விஜயா.

‘‘புரியுதும்மா… ஒரு மனிதாபிமானத்துக்கு ரெண்டு மூணு நாளுக்கு அவங்களே பார்த்துப்பாங்க. அதுக்கும் மேல அவங்களால முடியாதில்லேம்மா… நான் வேலை செய்யற வீடெல்லாம், வயசானவங்க, வேலைக்கு போறவங்கன்னு இருக்கிறவங்க. முடியலன்னுதானே வேலைக்கு வச்சிருக்காங்க? ஒரேடியா லீவு போட்டா வேற ஆளை தேடிப்பாங்க. இப்பல்லாம் வீட்டு வேலை கூட கிடைக்கிறது கஷ்டமா இருக்கும்மா… கொஞ்சம் பாத்துக்கம்மா!”

‘‘அம்மா… பாட்டியையே நான்தான் பார்த்துக்கிறேன்… போவியா?”என்றாள் கிண்டலாய்.‘‘பாரேன்… ரொம்ப வாய்டி உனக்கு!” சிரித்தபடி கிளம்பினாள் பரமேஸ்வரி.
போகும் அம்மாவையே பார்த்திருந்த காவ்யாவின் விழிகளில் நீர் பளபளத்தது.

‘‘ஏம்மா அழறே காவ்யா? கால் வலிக்குதா?”பதட்டமாய் கேட்டாள் விஜயா.‘‘அதெல்லாம் இல்லே. அம்மா ரொம்ப பாவம் பாட்டி! நான் சீக்கிரம் சரியாகி… நல்லா விளையாடி ஸ்டேட் லெவல்ல ஜெயிப்பேன். கவர்மென்ட்ல நல்ல வேலைக்கு சேர்ந்து எங்கம்மாவை நல்லா பார்த்துக்கணும் பாட்டி!”கன்னத்தில் உருண்டு வந்த முத்துக்களில் வைராக்கியம் மின்னியது.

அந்த சிறுமியை பெருமிதமாய் பார்த்தாள் விஜயா.விஜயாவின் அறுபத்தைந்து வயது சரித்திரத்தில் அரசாங்க மருத்துவமனைக்கு முதன்முறையாக வந்திருக்கிறாள். தவறு… தவறு, அனுப்பி வைக்கப்பட்டாள்.ஆள், படை என்று ஏகபோகமாய் வாழ்ந்தவள்தான் விஜயா. கணவர் நாகேந்திரன் எந்த தொழிலைத் தொடங்கினாலும் பணமாய் கொட்டியது. பணம் சேர சேர நல்ல குணங்கள் விலக ஆரம்பித்தன.இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும்! எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

செருக்கு மாமனிதர்களையும் மட்டமானவர்களாக ஆக்கும். இதை அறியாதாலோ என்னவோ, நாகேந்திரனின் வியாபாரத்தில் பெரும் சறுக்கல் ஏற்பட்டது. ஒரு வழியில் வந்த பணம் பல வழிகளில் வெளியேறியது. கடன் நெருக்கியது. மிச்சம் இருந்த வீடுகள், சொத்துக்களை மூன்று பிள்ளைகளுக்கும் எழுதிக்கொடுத்துவிட்டு கடன்காரர்களுக்கு பட்டை நாமம் போட்டனர்.செல்லாக் காசாகி போன செல்வாக்கு, நாகேந்திரனை வெகுநாள் உயிரோடு வைக்கவில்லை. அவர் போன பின்பு விஜயாவின் நிலைமை இன்னும் மோசமானது. பலவித உடல் உபாதைகள் வாட்டி எடுத்தது. காச நோயும், இதய கோளாறும் அவளை உருக்குலைத்தது.

எங்கே அவளின் காசநோய் தன் பிள்ளைகளை அணைத்துக் கொள்ளுமோ என்று பயந்த மருமகள் வலிய சண்டைப் போட்டு அவளை வீட்டை விட்டு வெளியேறச் செய்தாள். மகன் வாய்மூடி நின்றான்.மகள்களை தேடிச் செல்ல பிரியப்படாத விஜயா, தங்கை கமலாவிடம் அடைக்கலமானாள்.இளம் வயதிலேயே விதவையான கமலா அக்காவை தாய் உள்ளத்துடன் அரவணைத்துக் கொண்டாள். விஜயாவின் இதயத்தில் மூன்று வால்வுகளும் அடைபட்டிருந்தது. சர்ஜரி பண்ணியாக வேண்டும். அவள் பெற்ற செல்வங்களிடம் சொன்னபோது… பணமில்லை என்று கைவிரித்து விட்டனர். வேறு வழியின்றி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டாள் கமலா.

எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்த கமலா அக்காவுடன் ஹாஸ்பிடலில் தங்கி காலையில் சென்று விடுவாள். கமலாவால் அன்பையும்,அரவணைப்பை முகம் மட்டுமே தர முடியும்.அவள் கெப்பாஸிட்டி அவ்வளவுதான்!விஜயா மூன்று வேளையும் ஹாஸ்பிடலில் தரும் உணவை சாப்பிட்டு வந்தாள்.அம்மாவை, மகனும், மகள்களும் ஒரே ஒருநாள் வந்து பார்த்தனர். அதோடு சரி. இன்னும் இரண்டு நாட்களில் ஆபரேஷன். அதில் பிழைப்போம் என்ற நம்பிக்கை அதிகமாய் இல்லை. ஆனால் அதற்குள் தன் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பார்த்து விட வேண்டும் என்று ஏக்கப்பட்டாள்.

கமலா…போன் பண்ணி இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் கண்டிப்பாக நாளை வருவார்கள் என்றும் சொன்னாள்.அந்த வார்டில் ஒவ்வொரு கட்டிலைச் சுற்றியும் உறவுக்காரர்கள் கூட்டம் இருந்தது.‘என்னை பார்க்க வருவார்களா? இதோ இவர்களைப் போல் ஏன் என் பிள்ளைகள் இல்லை? பாசம் என்பதெல்லாம் பொய்யா? நான் வசதியாய் இருந்தபோது… கமலாவுக்கு சிறு துரும்புகூட கொடுத்ததில்லை. ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி அவள் காட்டும் அன்பில் சிறு அளவுகூட என் பிள்ளைகள் காட்டவில்லையே! காற்றைத் தராத கல் மரங்
களால் யாருக்கென்ன லாபம்?’ நினைத்து வருந்தியவளுக்கு நெஞ்சு அடைத்தது… கண்ணீர் எட்டிப் பார்க்க முயன்றது.

அப்போதுதான்…

பெரும் இரைச்சல்… கூக்குரல்கள்.‘‘தீ…தீ… தீப்பிடிச்சுக்கிச்சு… எல்லோரும் வெளியே ஓடுங்க… ஓடுங்க!”கும்பல் கும்பலாய் மனிதர்கள்! முகத்தில் பீதி… ஓட்டத்தில் புயல்.
‘‘எங்கே… எங்கே?”‘‘பக்கத்துல லேப்ல கரன்ட் பத்திகிட்டு எரியுது, சீக்கிரம்… சீக்கிரம்!”தீ வேகமாய் அடுத்தடுத்த வார்டுகளுக்கும் பரவிக்கொண்டிருக்க…‘‘ஐயோ… அம்மா… சீக்கிரம் ஓடு!”கையில் கிடைத்ததை அள்ளிக் கொண்டும், நோயாளிகளை தூக்கிக் கொண்டும் உயிரை காப்பாற்றிக்கொள்ள முண்டியடித்து ஓடிக்கொண்டிருந்தனர்.

‘‘ரமேசு, தீபா… எங்கே இருக்கீங்க?”
எங்கும் குரல்கள்… பயம்… பீதி…புற்றீசல்களாய் வாசலை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தனர். நெருக்கடியில் சிக்கி, காலடியில் நசுங்கி, உயிர்கள் நசுக்கப்பட்டன.
விஜயா அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். நடக்கவே சிரமப்பட்டாள். ஆனாலும் நடந்தாள்.‘கடவுளே… கடைசியா என் பிள்ளைகளைப் பார்க்கும் வரையு மாவது என்னை உயிரோடு வைத்திரு.’
திடீர் அதிர்ச்சி… அவள் இதயத்தை பிசைவது போன்ற வலியைத் தந்தது, மூச்சடைத்தது. அவ்வளவு கூட்டத்தில் முண்டியடித்து ஓட முடியவில்லை.

அப்போதுதான்…‘‘பாட்டீ…”என்ற குரல் கேட்டது.திரும்பிப் பார்த்தவளின் உடம்பு உதறியது.காவியா கைகள் இரண்டையும் தூக்கி அபய குரல் எழுப்பிக் கொண்டிருந்தாள்.
‘‘பாட்டி… என்னை யாரையாவது விட்டு தூக்கிட்டு போக சொல்லுங்க… எனக்கு பயமாயிருக்கு… என்னை காப்பாத்த சொல்லுங்க… அம்மா… அம்மா….!”
‘‘தம்பி… அந்தப் பொண்ணை காப்பாத்துங்களேன்…. அவளால் நடக்க முடியாது…!” எதிர்பட்டவர்களிடம் கெஞ்சினாள் விஜயா.

அவரவர் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாய் இருக்க…‘‘மொதல்ல நீ ஓடி உன் உயிரை காப்பாத்திக்க…. அதோ அடுத்த வார்டு வரைக்கும் நெருப்பு பத்திக்கிச்சு…டேய்…செழியா…ஓடு…ஓடு…!”முன்னே சென்ற சிறுவனைத் தொடர்ந்து ஓடினான் அந்த வாலிபன். விஜயாவின் வேண்டுகோளை யாரும் ஏற்கவில்லை.

செவி சாய்க்கவுமில்லை.விஜயா காவ்யாவை நோக்கி ஓடினாள். தன் மனதை உறுதிப்படுத்திக் கொண்டு அவளை தூக்கினாள். கனமாய் இருந்தாள். தூக்கிக்கொண்டு நடக்க சிரமமாய் இருந்தது… ஆனாலும் நடக்காமல் ஓடினாள்.

மூச்சு வாங்கியது… கண்களை இருட்டிக் கொண்டு வந்தது… கால்கள் பின்னின. ஆனாலும் வாசலை நோக்கி ஓடினாள்.‘நல்ல வேலைக்கு சேர்ந்து எங்கம்மாவை நல்லா பார்த்துக்கணும் பாட்டி!’காவ்யாவின் கண்ணீர் மொழி காதில் ரீங்கரித்தது.அதற்கு இந்த குழந்தை நடக்கணும்…உயிரோடிருக்கணும்…

‘உன் பிள்ளையை பார்க்க வேண்டாமா? அந்தப் பெண்ணை இறக்கிவிடு!’ பாசம் எச்சரித்தது… ஆனாலும் ஓடினாள்.வாசலை தொட்டுவிட்டாள். யாரோ ஒரு போலீசோ சிப்பந்தியோ, காவ்யாவை வாங்கிக் கொள்ள… விஜயா துவண்டு சரிந்தாள். கண்கள் நிலை குத்தின.உறைந்த கருவிழிகளுக்குள் தன் பிள்ளைகளும், அவர்கள் பெற்ற பிள்ளைகளும் வரிசைக்கட்டி நின்றிருந்தனர்.

தொகுப்பு: ஆர்.மணிமாலா

The post சிறுகதை-மனதில் என்ன நினைவுகளோ? appeared first on Dinakaran.

Related Stories: