கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூராட்சி 2வது வார்டில் நேரலகோட்டை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்ட அப்பள்ளியில், அதன் பின் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 120 மாணவர்கள் பயின்ற பள்ளியில், தற்போது 96 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாணவ, மாணவிகள் யாரும் பள்ளிக்கு வராமல் வகுப்பை புறக்கணித்தனர். மேலும் மாணவர்களின் பெற்றோர் அனைவரும், பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமியை பணியிடமாற்றம் செய்தால்தான், பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவோம் என்றனர்.
தகவல் அறிந்த பர்கூர் வட்டார கல்வி அலுவலர்கள் பென்சிகா மேரி, முருகன், பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமத்ரா, 2வது வார்டு உறுப்பினர் அனுராதா உள்ளிட்டோர் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர் கூறுகையில், ‘கடந்த 2020ம் ஆண்டு வரை 5 ஆசிரியர்களுடன் பள்ளி சிறப்பாக செயல்பட்டது. அப்போது குமார் என்ற ஆசிரியர் பணியிட மாற்றமானார். தலைமை ஆசிரியராக பணியாற்றிய ஜோதி, 2023ல் ஓய்வு பெற்றார். இதனால் மூன்று ஆசிரியர்கள் மட்டுமே பள்ளியில் இருந்தனர்.
அதன்பின் பள்ளி மேலாண்மை குழுவால் முருகேஷ் என்பவரும், கடந்தாண்டு எலன் என்ற ஆசிரியையும், நேற்று முன்தினம் சிலம்பரசன் என்ற ஆசிரியரும் சேர்ந்துள்ளனர். தற்போது லட்சுமி என்பவர் தலைமை ஆசிரியர் பொறுப்பை வகிக்கிறார். இவர், சரியாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவது இல்லை. அதனால் அவரை பணியிட மாற்றம் செய்தால்தான், எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம்’ என்றனர். தற்போதுதான் புதிதாக ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். இன்னும், 20 நாட்கள் கால அவகாசம் கொடுத்தால் அவர்களும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என அதிகாரிகள் கூறிய போதும், பெற்றோர் அதை ஏற்கவில்லை.
இதையடுத்து அடுத்து, 15 நாட்களில் தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்கிறோம் என உறுதியளித்ததை அடுத்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் சம்மதித்தனர்.
The post பர்கூர் அருகே அரசு பள்ளியின் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்: பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.