அதேநேரம் தமிழ்நாட்டின் மேட்டூர் அணையில் வெறும் 14 டிஎம்சி அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கூறி இருந்தார். மேலும், தமிழகத்திற்கு காவிரி நீரை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் 16ம் தேதி (நேற்று) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசின் சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். நீர்வளத்துறை செயலாளர் மணிவாசகம், திமுக சார்பில் பி.வில்சன், ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி, சதாசிவம், பாஜ சார்பில் கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, மதிமுக சார்பில் சதன்திருமலைகுமார், பூமிநாதன் மற்றும் நாகை மாலி, பி.சண்முகம் (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன், மு.வீரபாண்டியன், (இந்திய கம்யூ.), ஜவாஹிருல்லா, புதுமடம் அலீம் (மனிதநேய மக்கள் கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன், சூரியமூர்த்தி (கொமதேக), திருமால்வளவன், வேணுகோபால் (தவாக), பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சிபாரதம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆணையின்படி நமக்கு கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரை கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பற்றி பல ஆக்கப்பூர்வமான கருத்துகளை இங்கு நீங்கள் தெரிவித்தீர்கள். அதற்கு எனது நன்றி. தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடி தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக் கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
* காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
* காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
* காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு, தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது. மேற்கண்ட இந்த தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
* தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்.
* காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும்.
* தேவையானால் உச்சநீதிமன்றத்தை நாடி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
The post காவிரி நீரை பெறுவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.