திருவள்ளூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார்.
இதேபோல் சட்டம் ஒழுங்கு புதிய கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தமிழக அரசு நியமித்தது. இந்தநிலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் முதல் டிஎஸ்பி.க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் 4 உட்கோட்டத்தில் உள்ள டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள 24 காவல் நிலையங்களில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு துப்பாக்கி பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி அழகேசன் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர்கள் திருவள்ளூர் டவுன் அந்தோணி ஸ்டாலின், திருவள்ளூர் தாலுகா வெற்றிச்செல்வன், மணவாளநகர் ரவிக்குமார் மற்றும் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
The post மாவட்டத்தில் உள்ள 24 காவல் நிலையங்களில் துப்பாக்கி பயன்பாடு குறித்து போலீசாருக்கு பயிற்சி appeared first on Dinakaran.