நீட் குளறுபடிகள்.. குற்றச்சாட்டுகள்..

நன்றி குங்குமம் தோழி

மருத்துவம் படிக்க நுழைவுத் தேர்வு அவசியம் என மத்தியில் ஆளும் ஒன்றிய அரசால் புகுத்தப்பட்ட நீட் தேர்வு 2019ல் இருந்தே தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்டு வருகிறது. இது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமைப்பு.

தேர்வு மையத்துக்கு செல்வதற்கு முன்பு மூன்றடுக்கு பரிசோதனை என்கிற பெயரில் மாணவர்கள் அரை கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். மாணவிகள் கம்மல், கொலுசு, வளையல், செயின் போன்ற ஆபரணங்களை அணியக்கூடாது, கூந்தலை பின்னக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்ததுடன், மாணவிகளின் உள்ளாடைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, மருத்துவ சீட்டுக்கு பேரம், பயிற்சி மைய தரகுத்தனம், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் எனத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு மாணவர்களும், கல்வியாளர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி கல்வியாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மோசடியான தேர்வு என்பதை இன்று வட மாநிலங்களும் உணர ஆரம்பித்துள்ளன. தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, கொல்கத்தா, சத்தீஸ்கர், மேகாலயா, ஹரியானா போன்ற மாநிலங்களில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. மாணவர்கள் #justiceforNeet, #ReNeet போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். 2024-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி 4750 தேர்வு மையங்களில், 13 மொழிகளில் நடைபெற்றது. 23,33,297 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 14ல் வெளியாகும் என அறிவிப்பு செய்திருந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்த தினமான ஜூன் 4ல், பத்து தினங்களுக்கு முன்பாகவே நீட் தேர்வு முடிவுகளும் வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

1 லட்சம் மருத்துவ இடங்களுக்கு 13,16,268 பேர் தேர்ச்சிப் பெற்றிருந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 67 பேர் முழு மதிப்பெண்களான 720ம் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இதில் ராஜஸ்தான், ஹரியானா, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிகம். இதில் 6 பேர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களாகவும் இருக்கின்றார்கள். அதே தேர்வு மையத்தில் இருவர் 719, 718 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கும் தலா 4 மதிப்பெண்கள். அதாவது, 180 X 4 = 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு. பதில் அளிக்காத கேள்விக்கு மதிப்பெண்கள் இல்லை. உதாரணத்திற்கு ஒரு விடை தவறெனில் 5 மதிப்பெண் குறைக்கப்பட்டு 720-5=715 கிடைக்கும். அல்லது 4 மதிப்பெண்கள் குறைந்து 720-4=716 கிடைக்கும். இதில் 718, 719 மதிப்பெண்கள் எவ்வாறு வரும் என்கிற சந்தேகமும் கிளம்பியுள்ளது.

‘‘NCERT பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், தேர்வு மையங்களில் சில தேர்வர்கள் நேர விரயம் ஏற்படுத்தியதாலும், 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 70ல் இருந்து 80 வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்தது. 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் கொடுத்தது ஏன்? எந்தெந்த தேர்வு மையங்களில் காலதாமதம் ஏற்பட்டது? யார் யாருக்கு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது? மற்ற மாணவர்களுக்கு ஏன் வழங்கவில்லை? போன்ற கேள்விகளுக்கு NTA தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

இது பெற்றோர், மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கி விவாதங்களை எழும்பிய பின்னரே, UPSC முன்னாள் தலைவர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. தற்போது 1563 பேரின் கருணை மதிப்பெண்களை ரத்து செய்கிறோம் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பதுடன், இந்த மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 23 மறு தேர்வை நடத்தவுள்ளதாகவும், அதன் முடிவுகள் ஜூன் 30ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மீள் தேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் நீக்கம் செய்து இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத் தில் இரண்டு தேர்வு மையங்களில் வினாத்தாள் முற்றிலும் மாறுபட்டு, மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தேர்வாணையத்திடம் கேட்கப்பட்டும் எந்த பதிலும் வரவில்லை எனவும், இதனால் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குநரான சுபோத் குமார் சிங் நீட் தேர்வு முறைகேடு குறித்த எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன் தெளிவான விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. நீட் குளறுபடியால் அதன் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வினாத்தாள் கசிவு குறித்து தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்து, தீர்ப்பை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

நீட் மோசடிகள்…

ராஜஸ்தானில் 11 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மற்றும் பீகாரில் நீட் தேர்வுக்கு முன்பு வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்து பெரும் சர்ச்சையை கிளம்பிய நிலையில், தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்தது. பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியான பின்பு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு 5 மாணவர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீட் மோசடிகள்…

டெல்லி மற்றும் ராஜஸ்தானில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத வந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு 10 லட்சம் பேரம் பேசப்பட்டிருக்கிறது.

நீட் மோசடிகள்…

ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்ட்ரா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 16 பேர் 1000 கி.மீ. பயணித்து கோத்ரா தேர்வு மையத்தை தேர்வு செய்து, தேர்ச்சிப் பெற 10 லட்சம் தந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

நீட் மோசடிகள்…

*குஜராத்தின் கோத்ராவில் ராய் ஓவர்சீஸ் என்கிற பயிற்சி மையத்தில் பயிற்சி மைய அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே ரூ.2.68 கோடி
பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

*குஜராத்தில் நீட் தேர்வு எழுதிய ஒரு பெண் 705 மதிப்பெண் பெற்றிருக்கிறார். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மூன்றிலும் தேர்ச்சி அடையவில்லை.

*அரசு ஒதுக்கீடுகளைத் தவிர்த்து, கல்லூரி ஒதுக்கீட்டிற்கான சீட்டாக மாற்றும் மோசடி நடப்பதாகவும், 50 லட்சம் முதல் 1 கோடி வரை கல்லூரி நிர்வாகத்திற்கும், பயிற்சி மையத் தரகர்களுக்கும் இடையே உடன்பாடுகளுடன் முறைகேடுகள் தொடர்வதாகவும் அதிர்ச்சியான செய்திகளும் வெளிவருகின்றன.

நீட் மோசடிகள்…

பீகாரில் மருத்துவ இடத்துக்கு எட்டு லட்சம் பேரம் பேசும் ஆடியோவும் வெளியானது. வினாத்தாள்களை முன்கூட்டியே பெற 30 லட்சத்துக்கும் மேல் கொடுத்தது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் நீட் தேர்வு எழுதியவர்கள்.பீகாரில் உள்ள பள்ளி ஒன்றில் 35 பேர் கொண்ட குழு தேர்வுக்கு முன்னரே போலித் தேர்வு நடத்தி விடைகளுடன் கூடிய நீட் வினாத்தாள்களை வழங்கியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post நீட் குளறுபடிகள்.. குற்றச்சாட்டுகள்.. appeared first on Dinakaran.

Related Stories: