நீலனாக வாழ்ந்தபோது தான் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளில், திருமங்கையாழ்வாராக மாறிய பின்னும் அவர் ஈடுபடவேண்டியிருந்தது. அதற்கு இந்த திருக்கண்ணங்குடி தலம் நிலைக்களனாக அமைந்தது. ஆமாம், தினமும் 1000 வைணவ அடியார்களுக்கு ‘ததியாரன்னம்’ செய்விக்க வேண்டும் என்று தனக்கு மனைவியாகப் போகிற குமுதவல்லி கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், அதற்காக களவிலும் இறங்க வேண்டியிருந்ததல்லவா? அதன் உச்சமாக ஸ்ரீ மன் நாராயணனிடமே கொள்ளையடிக்க வேண்டிய சந்தர்ப்பமும் அமைந்தது அல்லவா?அதேபோல, அந்தப் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி, குமுதவல்லியின் கரம் பற்றி, அவள் மணாளனாகி, அன்று முதல், முற்றிலும் வைணவ அடியாராக மாறி, பல திவ்ய தேசங்களை தரிசித்து, மங்களாசாசனம் செய்து, திருமங்கையாழ்வாராக வாழ்ந்துவந்த அவர், மீண்டும் களவுத் தொழிலில் இறங்கவேண்டியிருந்தது.
எதற்காக?ஸ்ரீ ரங்கத்துக் கோயிலுக்கு மதில் சுவர் எழுப்பும் பணிக்காக! அன்னதானத்துக்கு ஏற்பட்டாற்போல இந்தப் புனரமைப்புக்கும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது அவருக்கு. பணத்துக்கு எங்கே போவது? நாகப்பட்டினத்தில் தங்கத்தாலான புத்தர் சிலை ஒன்று இருப்பதாகவும், அந்தத் தங்கத்தை எடுத்து வந்து பணமாக்கி, மதில்சுவர் செலவை சரிகட்டலாம் என்று அவருக்கு ஒரு யோசனை சொல்லப்பட்டது. உடனே நாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றார் அவர். தகவல் சொன்னபடி அங்கே தங்க புத்தர் சிலை ஒன்று இருப்பதைப் பார்த்தார். அந்த சிலையை அப்படியே எடுத்துச் சென்றால், அது ‘நீலன்’ குணமாகிவிடும். மாறாக, அந்தச் சிலையை, தானே கொடுக்கும்படி செய்துவிட்டால்…? உடனே அச்சிலையை நோக்கிப் பாட ஆரம்பித்தார்:
ஈயத்தாலாகாதோ, இரும்பினா லாகாதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தா லாகாதோ
பித்தளை, நற்செம்புக ளாலாகாதோ
மாயப் பொன்னும் வேண்டுமோ
மதித்துன்னைப் பண்ணுகைக்கே
‘நீ ஈயத்தாலோ, இரும்பாலோ, மண்ணாலோ (பஞ்ச பூதங்களில் ஒன்று), பித்தளையாலோ, செம்பாலோ ஆக்கப்பட்டிருந்தால் உனக்கு ஏற்காதோ, பொன்தான் வேண்டுமோ?’ என்று அந்த சிலையைப் பார்த்து கேட்டார் அவர். இந்தப் பாடலிலிருந்து பலவகை உலோகங்களாலும் அக்காலத்தில் அர்ச்சாவதாரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று அறிய முடிகிறது. எல்லா உலோகங்களையும் விட்டுவிட்டு தங்கத்தால் செய்யப்பட்ட சிலையாக நிற்கிறாயே, உனக்கு இது தேவைதானா, என்று கேட்கிறார் ஆழ்வார். ‘மாயப் பொன்’ என்பதிலிருந்து இந்தப் பொன் மாயமாகப் போகப் போகிறது என்று வருமுன் பொருள் உரைக்கிறார். அல்லது மக்களை பொல்லாத (மாய) ஆசை கொள்ள வைப்பது என்று பொன்னை வர்ணிக்கிறார் என்றும் கொள்ளலாம்.
அதோடு, பகவானின் தசாவதாரங்களில் பத்தாவது இனி வரப்போகும் கல்கிதான் என்று ஒரு கருத்து நிலவ, அந்த பத்தாவது அவதாரம் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது, அதுதான் புத்தர் என்றும் சொல்லப்படுகிறது. (திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் கருவறைச் சுற்றில் காணப்படும் புத்தர் சிலையை இந்தக் கூற்றுக்கு சிலர் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்!) திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடியதும், புத்தர் சிலையிலிருந்து கவசமாகத் திகழ்ந்திருந்த அந்தப் பொன் அப்படியே கழன்று அவர் கரங்களில் வந்து விழுந்ததாம்! ‘உனக்கு ஈயமோ, இரும்போ, பித்தளையோ, செம்போ போதாதா’ என்று ஆழ்வார் கேட்டதையும் புத்தர் சகித்துக்கொண்டதற்குக் காரணம், தான் அந்த ஸ்ரீ ரங்கத்தானின் பத்தாவது அவதாரம் என்று உணர்ந்ததாலும் இருக்குமோ? அதனால்தான் அவருக்கு மதில்சுவர் கட்ட தன் பொன்னைத் தானே வழங்கினாரோ? சரி, பொன் கிடைத்துவிட்டது, ஸ்ரீ ரங்கம்போய் பணமாக்கி மதில்சுவரை எழுப்பலாம் என்று சுலபமாக எண்ண முடியவில்லை ஆழ்வாரால்.
என்னதான் புத்தர் தாமே முன்வந்து அந்தப் பொன்னை ஆழ்வாருக்கு வழங்கினார் என்றாலும், அதை மக்களிடம் எப்படி நிரூபிப்பது? ஆகவே அதைக் களவு செய்வதைத் தவிர வேறு வழி இல்லை அவருக்கு. ஆனால் அதை இந்த ஊரைவிட்டுப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டுமே! அந்த ஊரில் வயல் கரையில் பெருத்து வளர்ந்திருந்த ஒரு புளிய மரத்தைக் கண்டார். அதனருகே நாற்று நடுவதற்காகப் பதப்படுத்தி வைத்திருந்த நிலத்தைக் கைகளால் பறித்து அதனுள் தங்கத்தைப் புதைத்து வைத்தார். அதற்குள் இரவும் வந்துவிடவே, அயர்ச்சியும் சேர்ந்துகொள்ள அப்படியே அந்த புளிய மரத்தடியில் படுத்துக்கொண்டார். அப்போதும் சந்தேகம், தான் ஆழ்ந்து உறங்கிவிடுவோமோ, யாரேனும் தங்கத்தை ‘திருடி’ச் சென்று விடுவரோ என்று! உடனே மரத்தைப் பார்த்து ‘இன்றிரவு உன் இலைகளை மூடாமல், உறங்காமல், விழித்திரு.
‘என்’ தங்கத்தை நீதான் பாதுகாக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். மறுநாள் பொழுது புலர்ந்தபோது திடுக்கிட்டு விழித்தெழுந்த ஆழ்வார் தன் மீதும் தான் புதைத்து வைத்திருந்த பொக்கிஷத்தின்மீதும் புளிய இலைகள் ஒரு போர்வையாக உதிர்ந்து மறைத்திருந்ததைக் கண்டார். யாரும் எடுத்துச் சென்றுவிடாதபடி பக்குவமாகக் காத்த அந்தப் புளியமரத்தை, ‘உறங்காப் புளியே நீ வாழ்க,’ என்று மனதார வாழ்த்தினார். (தற்போது உறங்காப் புளிய மரம் அங்கே இல்லை என்றாலும், அது இருந்த இடம் சிறு மேடாகவும், பக்கத்தில் வயலும் இச்சம்பவத்துக்கு சாட்சிகளாக அமைந்திருக்கின்றன. இன்றும் இங்குள்ள புளியமரங்கள் வழக்கத்தைவிட வித்தியாசமாக, இரவில் இலைகள் மூடாதவையாக, ‘உறங்காப் புளியாக’ இருக்கின்றன என்கிறார்கள்.)யாரும் வருவதற்கு முன்னால் அந்த தங்கத்தை எடுத்துச் செல்ல அவன் முயன்றபோது, அந்த நிலத்துக்குச் சொந்தக்காரர் அங்கே வந்துவிட்டார்.
‘என் நிலத்தில் ஏன் படுத்துக்கொண்டிருக்கிறாய்? எழுந்து செல், நான் நாற்று நடவேண்டும்,’ என்று உரிமையுடன் பேசினார். ஆனால் திருமங்கையாழ்வாரோ, ‘இது எனக்குரிய நிலம்’ என்று வாதிட்டார். அதிர்ந்துபோன நிலத்துச் சொந்தக்காரர் வேறு வழியில்லாமல் ஊர்ப் பஞ்சாயத்துக்குப் போனார். அங்கும், ‘இந்த நிலம் எனக்குச் சொந்தம் என்பதற்கான ஆதாரமான, ஆவணப் பத்திரம், பத்திரமாக ஸ்ரீ ரங்கத்தில் இருக்கிறது, நான் போய்க் கொண்டு வருகிறேன்,’ என்று ஆணித்தரமாகக் கூறினார் ஆழ்வார். ஊரே அசந்துப் போய்விட்டது. ஆனாலும், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதற்காக, ‘போய்க் கொண்டு வாரும்,’ என்றார்கள், பஞ்சாயத்தார். (கடைசிவரை அவர் அதைக் கொண்டுவரவில்லை என்பதுதான் உண்மை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஊரில் எந்த வழக்கானாலும் மனித முயற்சியில் தீர்வாகாதவையாகவே, ‘தோலா வழக்காகவே’ உள்ளன என்கிறார்கள்.
லோகநாதப் பெருமாள் அருளால் மட்டுமே தீர்க்கப்படுகின்றனவாம்!)ஆனால் தங்கத்தை யாருமறியாமல் எடுத்துச் செல்ல வேண்டுமே! தனக்கு ஒருநாள் மட்டும் அந்த ஊரில் தங்க அனுமதி பெற்றுக்கொண்ட ஆழ்வார், அடுத்த திட்டம் தீட்டினார். அன்றையப் பொழுதில் தாகம் எடுக்கவே, ஊர்க் கிணறருகே நீர் இறைத்துக்கொண்டிருந்த சில பெண்களிடம் சென்றார்; குடிநீர் தருமாறு கேட்டார். ஆனால் அவர்களோ, ‘இவன் நம் ஊர்க்காரர்கிட்டேயே தகராறு செய்தவன். இவனுக்குத் தண்ணீர் தருவது பாவம்,’ என்று அவரை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டார்கள். உடனே கோபம் கொண்ட அவர், ‘எனக்குத் தண்ணீர் தர மறுக்கிறீர்களா, இந்தக் கிணறு இனிமேலும் ஊறாமல் போகட்டும்; உங்கள் ஊரில் எல்லா நீர்நிலையும் உப்பாக மாறட்டும்’ என்று சபித்து விட்டார். (இன்றளவும் அந்தக் கிணறு ‘ஊறாகிணறா’க இருக்கிறதென்றும், அப்படியே ஊறினாலும் அந்த நீர் கடுப்பதாகவும் சொல்கிறார்கள். ஊரின் எல்லா நீர்நிலைகளும் நீர் வற்றியோ, அல்லது அந்த நீர் உப்பாகவோதான் இருக்கிறது என்கிறார்கள்.
லோகநாதப் பெருமாள் கோயிலுக்குள் இருக்கும் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் நல்ல நீர் கிடைப்பதாகவும், ஊரிலுள்ளோர் தம் தேவைக்காக இந்தக் கிணற்றைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் சொல்கிறார்கள். திருமங்கை ஊரை சபித்தாலும், திருமால் அவர்களுக்கு ஓரளவாவது ஆதரவாகத்தான் இருக்கிறார்!) பிறகு பசி, தாக, மயக்கத்தில் சோர்ந்துபோய் ஒரு மகிழ மரத்தடியில் அமர்ந்தார் ஆழ்வார். அப்போது அங்கு வந்த ஒருவர் அவருக்கு அன்புடன் உணவும், நீரும் அளித்தார். பேருவகையுடன் அவற்றை ஏற்றுக்கொண்ட ஆழ்வார் நன்றி சொல்ல நிமிர்ந்தபோது அளித்தவர் அங்கிருந்து மறைந்துவிட்டார். பெருமாளே தனக்கு உணவளித்து ஆறுதல் படுத்தியதை உணர்ந்த அவர், தனக்கு நிழலளித்துக் காத்த மகிழ மரத்தைப் பாராட்டினார்:
‘நீ என்றும் காய்க்காமல், இளமை குன்றாமல், பசுமையாக வளர்வாயாக’. (இந்தக் காயா மகிழ் சமீப காலம் வரை செழித்து வளர்ந்து, ஒரு புயல் காரணமாக வீழ்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பிறகு அதே இடத்தில் நடப்பட்ட வேறொரு மகிழ மரம் அவர் பாராட்டைப் போலவே இன்றும் பசுமை குன்றாமல் வளர்ந்திருக்கிறது. கோயிலுக்குப் பின்னால் இந்தக் ‘காயா மகிழை’க் காணலாம். இந்த மரத்தடியில் அமர்ந்து மந்திரங்கள் ஜபித்தாலோ, தவம் இயற்றினாலோ மிகப் பெரும்பலன் கிட்டும் என்பது ஐதிகம்.)அன்றிரவே ஆழ்வார் தான் புதைத்து வைத்திருந்த தங்கத்தை எடுத்துக்கொண்டு ஸ்ரீ ரங்கத்துக்குச் சென்றுவிட்டார். போகிற போக்கில் தனக்கு சங்கு, சக்கரம் சகிதமாகக் காட்சியளித்த லோகநாதப் பெருமாளை பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துவிட்டுத்தான் போனார்! உதாரணத்துக்கு ஒரு பாடல்:
வங்கமா முன்னீர் வரி நிறப் பெரிய
வாளரவி னனை மேவிச்
சங்கமா ரங்கைத் தடமலருந்திச்
சாம மாமேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத
மருங்கலை பயின்றெரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில்
மனத்தோர் திருக்கண்ணங் குடியுள் நின்றானே ‘பிரமாண்டமான கப்பல்கள் மிதந்து செல்லும் மிகப் பெரிய கடலில், அழகிய வரிகள் கொண்ட எழில்மிகு ஆதிசேஷன் மீது அனந்தசயனம் கொண்டிருக்கிறான் எம்பெருமான். கரங்களில் சங்கு சக்கரம் திகழ, நாபியில் தாமரைக் கமலம் துலங்க, நீலமேனியனாகப் பொலிகிறான் அவன். ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்கள், இதிகாசங்களில் தேர்ச்சி பெற்று, ஐவகை வேள்விகளை நித்தமும் இயற்றி, நான்கு வேதங்களிலும் சொல்லியிருப்பதுபோல மூன்று நெருப்புகளையும் தம் வேள்விக்காக ஆராதனம் செய்யும் ஆன்றோர்கள் வாழும் திருக்கண்ணங்குடியில் எழுந்தருளியிருக்கிறான் எம்பெருமான்’ என்கிறார்.
திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம் ஆகியவற்றுடன் இந்த திருக்கண்ணங்குடியும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண தலங்களாகத் திகழ்கின்றன. கிருஷ்ணனின் பரம பக்தரான வசிஷ்டர், இந்தத் தலத்தில் வெண்ணெயைக் கைகளால் பிடித்து கிருஷ்ணர் உருவம் செய்து அதையே நாள்தோறும் பூஜித்து வந்தார். தன் உறுதியான பக்தியால் அந்த வெண்ணெய்ச் சிலை உருகாதபடி காத்தார். பலகாலங்கள் இவரது இந்த பூஜை தொடர்வதைக் கண்டு மகிழ்ந்த கிருஷ்ணன், நேரடியாக இத்தலத்துக்கு வந்தான். வசிஷ்டரை சோதிப்பதற்காக, வெண்ணெய்க் கிருஷ்ணனை அப்படியே எடுத்து விழுங்கிவிட்டு ஓட்டம் பிடித்தான்.
அதுகண்டு திகைத்துப்போன வசிஷ்டர் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார். அவரிடம் பிடிபடாமல் ஓடிய கிருஷ்ணனை அந்தப் பகுதியில் தவம் இயற்றிக்கொண்டிருந்த மாமுனிவர்கள் தம் பக்தியால் அப்படியே கட்டிப் போட்டனர். அந்த பக்தி வளையத்திலிருந்து மீள முடியாத கிருஷ்ணன், அவர்கள் விருப்பம்போலவே அங்கேயே சிலையாக நின்றான். பின்னாலேயே ஓடிவந்த வசிஷ்டர் அதுதான் சமயமென்று அவன் கால்களைப் பற்றிக்கொண்டார். அந்த கிருஷ்ணன் இங்கே நிலைத்தபடியால் இந்த தலம் திருக்கண்ணங்குடியாயிற்று. நின்ற கோலத்தில் திகழும் லோகநாதப் பெருமாள், கருவறையில் புன்னகை முகிழ்க்கிறார்.
இவருக்கு சியாமள மேனிப் பெருமாள் என்றும் ஒரு பெயர் உண்டு. ஸ்ரீ தேவி – பூதேவி சமேதராக விளங்கும் இவரது பாதத்தை, சற்றே எட்டிப் பார்த்து, பட்டர் காட்டும் ஒளி உதவியுடன் தரிசிக்க முடிகிறது! இவருக்கு முன்னால் கை கட்டியபடி பவ்யமாக கருடன் காட்சியளிப்பதும் விந்தையானது. வைகுண்டத்தில் திருமால் முன்னால் கருடன் இப்படித்தான் சேவை புரிகிறாராம்! ஏதேனும் பிரச்னை, வழக்கு என்றால் பெருமாளை இங்குவந்து தியானித்தாலே தீர்வு கிடைத்துவிடும் என்கிறார்கள். சிக்கலான வழக்கு என்றால், பதினொரு புதன்கிழமை பெருமாளுக்கு வில்வ அர்ச்சனை செய்து நிறைவாக சர்க்கரைப் பொங்கல் நிவேதனமும் செய்தால் சுமுகமான தீர்வு கிடைக்கிறது என்கிறார்கள்.தாயார் அரவிந்தவல்லி என்ற லோகநாயகி.
இவர் சந்நதியில் மூலவரும், உற்சவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பது அதிசயமானது. கல்லால் ஆன மூலவரைப் போலவே உலோகத்தால் ஆன உற்சவரும் அதே கண்கள், மூக்கு, வாய் என்று அச்சு எடுத்தாற்போல அமைந்திருக்கும் தோற்றம் உவகை கொள்ள வைக்கிறது. தாயார் சந்நதியைச் சுற்றிலும் அழகிய நந்தவனம் பசுமை பொங்க துலங்குகிறது.கோயிலுக்கு மேற்கிலும், தெற்கிலும் வாசல்கள் இருந்தாலும், அவை இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. கோயிலுக்கு சிரவண புஷ்கரணி தீர்த்தமாகிறது. இதன் தெற்குக் கரையில் ஆதிப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார்.
லோகநாதப் பெருமாளுக்கும் முந்தையவர் என்பதைத் தவிர இவரை பற்றிய வேறு விவரம் தெரியவில்லை. திருக்கண்ணங்குடி தலத்திலும், திருக்கண்ண புரம் கோயிலைப் போலவே திருநீரணி விழா கொண்டாடப்படுகிறது. ஒன்றே முக்கால் நாழிகைக்கு, பெருமாள், பட்டர்கள், பக்தர்கள் அனைவரும் நெற்றியில் திருநீறு துலங்கக் காட்சியளிக்கிறார்கள். வைகாசி பிரம்மோத்சவத்தின்போது ஒருநாள் இவ்வாறு சைவ சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. மஹாவிஷ்ணு மகாதேவனாகவும் பரிமளிக்கிறான் என்பதைச் சொல்லும் இந்த மத நல்லிணக்க முயற்சி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே வலியுறுத்தப்பட்டு வருவது வியப்பு தருகிறது.
தியான ஸ்லோகம்
நிர்நித்ரச்சதி திந்த்ரிணீ நஹிஜயோ யத்ராஸ்தி ஸம்வாதிநாம்
யத்கூபேந ஜலம் பலம் ந வகுலே யஸ்மிந் ஹரி: ச்யாமல:
திவ்யம் யத்ர விமாந முத்பல மயம் தத்ரார விந்தா, ரமா
க்ஷேத்ரம் தத் ச்ரவணாக்ய தீர்த்த நிலயம், வந்தே ப்ருகோர் முக்திதம் எப்படிப் போவது: திருவாரூர் – நாகை பாதையில் ஆழியூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கண்ணங்குடி திருக்கோயில். அதாவது திருவாரூரிலிருந்து 15 கி.மீ. ஆழியூரிலிருந்து கோயிலுக்குப் போக குறுகலான பாதை. கார், வேன் செல்ல முடியும். திருவாரூரிலிருந்து ஆழியூர்வரை பேருந்து வசதி உண்டு. ஆழியூரிலிருந்து ஆட்டோ அமர்த்திக்கொள்ளலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9 முதல் 12 மணிவரையிலும், மாலை 6 முதல் 9 மணிவரையிலும்.
முகவரி: அருள்மிகு லோகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, ஆழியூர் வழி, (சிக்கல் அருகே), கீவளூர் அஞ்சல், நாகை வட்டம் – 611104.
The post திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் appeared first on Dinakaran.