ஒருவனுக்கு நல்ல ஆசார்யன் அமைவது அவன் செய்த பூர்வ ஜன்ம புண்ணியம் என்பார்கள். ஆனால் பகவானே ஆசார்யானாக அமைவானானால் அதுதான் எத்தனை ஜன்மத்து பாக்கியம்! இந்தப் பேறு பெற்றவர் திருமங்கையாழ்வார். பிறந்தது முதல் நீலனாக அறியப்பட்ட இவர், ஒரு குறுநில மன்னனாகத் திகழ்ந்தார். திருவெள்ளக்குளம் என்ற திருத்தலத்தில் குமுதவல்லியைக் கண்டு, காதல் கொண்டு, அவளை மணக்கும் தன் விருப்பத்தையும் தெரிவித்தார். ஆனால் குமுதவல்லியோ, வைணவக் குறியீடுகளைத் தாங்கிய ஒரு வைணவரைத்தான் தான் மணப்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டாள்! அந்த இலைச்சினைகளை தரித்து அவன் வந்தானானால் அவனைத் தான் மணப்பது உறுதி என்றும் தெரிவித்தாள்.உடனே நீலன் அவ்வாறு தனக்கு குறியீடுகளைத் தன் உடலில் பதிக்கத் தக்கவர் திருநறையூர் நம்பி ஒருவரே என்று பெரிதும் நம்பினார். பிற ஆசார்யர் யாரையும் அணுகாமல் அவர் நேரடியாகப் பெருமாளையே நாடியதற்குக் காரணமும் உண்டு.
இவரிடம் இலைச்சினைகளைப் பெற்றுக் கொண்டு சென்றால், ‘அது சாஸ்திரப்படி இல்லை, இந்த இலைச்சினை சரியில்லை’ என்று எந்த சாக்கையும் சொல்லி குமுதவல்லியால் தன்னை நிராகரிக்க முடியாதல்லவா?பெருமாளும் சற்றும் தயங்காது அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்தார். இந்த நீலன் வெகு விரைவில் திருமங்கையாழ்வாராக மாறி, வைணவத் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்று அவர்தான் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டாரே! பஞ்ச சம்ஸ்காரம் என்ற, உடல் குறியீடுகள் உள்ளிட்ட ஐந்து நிலைகளை ஒரு வைணவன் கடைபிடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். அவை என்னென்ன?ஒன்று, உடலில் பன்னிரண்டு இடங்களில் திருமண் இட்டுக்கொள்வது. எந்தெந்த இடங்களில் என்பதோடு, அவ்வாறு இட்டுக்கொள்ளும்போது என்ன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும், எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது. இரண்டாவது, தனக்குப் பெற்றோர் என்ன பெயர் வைத்திருந்தாலும், ஒரு வைணவனாக மாற்றம் பெறும்போது, அதாவது விஷ்ணுவுக்கு அடியவனாக மாறும்போது, அந்த விஷ்ணுவின் பெயரையோ, அல்லது அவருடைய அடியார்களில் ஒருவர் பெயரையோ, தான் ஏற்பது.மூன்றாவது, வலது புஜத்தில் சக்கரத்தையும், இடது புஜத்தில் சங்கையும் தீயில் பழுக்கக் காய்ச்சிய அச்சு மூலமாகப் பதித்துக்கொள்வது.
நான்காவது, தினமும் திருமாலுக்கு ஏதேனும் பிரசாதம் தயாரித்து நிவேதனம் செய்வது. முறையாக பூஜை செய்துவிட்டு, நிவேதனமும் செய்துவிட்டு, அதற்கப்புறமே தான் உணவு எடுத்துக்கொள்வது.ஐந்தாவது, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தை உள்வாங்கி, முழுமையாக உணர்ந்து ஓதுவது.இப்படியாக ஐந்து நிலைகளையும் ஏற்று தூய வைணவனாகத் திகழவேண்டும் என்றுதான் குமுதவல்லி நிபந்தனை விதித்தாள். ஆகவே, நீலன் பெருமாளையே குருவாக ஏற்று, தனக்கு பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைக்குமாறு வேண்டிக்கொண்டான். பெருமாளும் மிகுந்த விருப்பத்துடன் அவனுக்கு அவன் கோரிய சாங்கியங்களைச் செய்து வைத்தார். திருநறையூர் என்றும், நாச்சியார் கோயில் என்றும் விளங்கும் இந்த திவ்யதேசத்தில் பெருமாள் ஒரு காலை முன்வைத்து பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க முனைவது போலவே காட்சியளிக்கிறார்! என்ன அற்புதமான தோற்றம் இது! இந்த பெரும் பாக்கியத்தைத் தனக்கு அருளியதாலோ என்னவோ திருமங்கையாழ்வாராகிவிட்ட நீலன், இந்தப் பெருமாளை மட்டும் பெரிய திருமொழி என்று மட்டும் அல்லாமல், திருநெடுந்தாண்டகத் திலும், பெரிய திருமடல், சிறிய திருமடல் களிலுமாகச் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட பாசுரங்களால் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
இதனை ததியாராதனம் என்று குறிப்பிடுவார்கள். ததி என்றால் வைணவ அடியார்கள்; ஆராதனம் என்றால் அவர்களுக்கு அளிக்கப்படும் அன்ன தானம். இந்த மாபெரும் செலவுக்கு பணத்துக்கு எங்கே போவது. உடனே, தான் சோழ மன்னனுக்குக் கட்ட வேண்டிய கப்பத்தை நிறுத்தினார் ஆழ்வார். அந்தத் தொகையை ததியாராதனத்துக்குச் செலவிட்டார். இதனால் கோபம் கொண்ட சோழன், ஆழ்வாரை இதே கோயிலில் சிறைவைத்தான். அவருக்கு அன்ன, ஆகாரம் எதுவும் கொடுக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டான். உடல் சோர்வடைய, பெரிதும் வருந்திய ஆழ்வார் பெருமாளிடம் மனமுருகி வேண்டிக்கொண்டார். ‘கவலைப்படாதே,’ பெருமாள் அவருக்கு ஆறுதல் கூறினார். ‘காஞ்சிபுரத்திலுள்ள வேகவதி நதிக்கரையில் காணக் கிடைக்கும் பொக்கிஷத்தை எடுத்து உன் கப்பத்தைச் செலுத்திவிடு.’ அதன்படி, காவலர்களை அழைத்த ஆழ்வார் கப்பத் தொகையைத் தான் கட்டிவிடுவதாகவும், தன்னுடன் அவர்கள் காஞ்சிபுரம் வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
அவரை நம்ப முடியாவிட்டாலும், போய்த்தான் பார்ப்போமே என்று அவருடன் காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரைக்குப் போனவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி! ஆமாம், அங்கே ஆழ்வார் சொன்னதுபோலவே பொக்கிஷம் அவர்களுக்காகக் காத்திருந்தது! கப்பமும் தீர்ந்தது; மீதித் தொகையில் வைணவ அடியார்களுக்கான கைங்கர்யமும் தொடர்ந்தது! ஸ்ரீதேவிக்கு ஸ்ரீரங்கத்தில் முக்கியத்துவம்; பூமிதேவிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் முக்கியத்துவம்; நீளாதேவிக்கு இந்த திருநறையூரில் முக்கியத்துவம்! நறை என்றால் தேன் அல்லது நறுமணம் என்று பொருள். ஆகவே திருநறையூர். இதனை, திருவாகிய தேனை பெருமாளே தேடிவந்து இங்கு காணக்கிடைத்ததாலும் திருநறையூர் என்றும் சொல்லலாம். அது என்ன சம்பவம்?தன் நாயகனுக்கு எப்போதும் கால் பிடித்துவிட வேண்டிய பணி தவிர வேறெதுவும் செய்ய இயலாத ஏக்கத்தால் வருந்தினாள் ஸ்ரீதேவி. அதைவிட, என்றென்றும், எப்போதும் ஆதிசேஷன் என்ற மஞ்சத்தில் ஆனந்தமாக அவன் துயில் கொள்வதும் அவளுக்கு கோபத்தை அளித்தது.
தன்னைவிட ஆதிசேஷனுக்கே பகவான் முக்கியத்துவம் தருகிறான் என்பதை உணர்ந்து கவலைப்பட்ட அவள், அந்தப் பொறாமையால் வைகுண்டத்தை விட்டு பூவுலகம் வந்தாள். தென் தமிழ்நாட்டில், மணிமுத்தா நதி தீரத்தில் இருந்த மேதாவி என்ற முனிவரின் குடிலை அடைந்தாள். உடனே சிறு குழந்தையாக உருமாறி, அங்கிருந்த வஞ்சுள மரத்தடியில் கிடந்தாள். முனிவரின் கவனம் தன்பால் ஈர்க்கப்பட்டு, அவருக்கு மகளானாள். வஞ்சுள மரத்தடியில் கிடைத்தவள் என்பதால் வஞ்சுளவல்லி ஆனாள்.வைகுண்டத்திலிருந்து பிராட்டி வெளியேறிவிட்டதால் அவளுடன் எல்லா சக்திகளும் உடன் சென்றுவிட்டன. இதனால் அங்கே தேவர்களுக்கு அசுரர்கள் பெரும் அச்சுறுத்தல்களாக மாறினார்கள். ஸ்ரீதேவி திரும்ப வந்தால்தான் வைகுண்டம் மீண்டும் சீரடையும் என்ற நிலை. உடனே பரந்தாமன் பூவுலகிற்கு விரைந்தார். தான் ஒரே உருவினனாகச் சென்றால் பிராட்டியைத் தேடுவது எளிதாக இருக்காது என்றுணர்ந்த வைகுண்டவாசன், தன்னை ஐந்து உருவங்களாகப் பிரித்துக்கொண்டார். வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், சாம்பன் என்ற ஐந்து வடிவங்களில் பல திக்குகளிலும் தேடிச் சென்றார். பல திசைகளில் இருக்கும் இரும்புத் துண்டுகளை காந்தம் ஒரே இடத்தில் இருந்தபடி அப்படியே அவை அனைத்தையும் ஈர்த்துவிடுவதுபோல பிராட்டியார் இந்தத் திருத்தலத்தில் பகவானின் ஐந்து உருவங்களையும் ஈர்த்தார்.
ஐவரும் இங்கே ஒன்று சேர்ந்து மேதாவி முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றார்கள். அவர்களை வரவேற்ற முனிவரிடம், அவர்கள், தாங்கள் கன்னிப் பெண்ணின் உபசரணையால்தான் மகிழ்வோம் என்று கூறினார்கள். அதிதிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு மேதாவி, மகள் வஞ்சுளவல்லியை அழைத்து அவர்களுக்கு சிரமப் பரிகாரம் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த ஐவரில் வசுதேவர், அவளைக் கண்டு தன் உணர்வினைக் கட்டுப்படுத்த இயலாமல், அவளுடைய கரத்தைப் பளிச்சென்று பற்றினார். இந்த ‘வன்முறை’யைச் சற்றும் எதிர்பாராத வஞ்சுளவல்லி உடனே பயந்து கூச்சலிட, மேதாவி முனிவர் அங்கே ஓடோடி வந்தார். நிலைமை விபரீதமானதை உணர்ந்த அவர், அந்த ஐவரும் அயோக்கியர்கள் என்ற முடிவுக்கு வந்தார். உடனே அவர்களை சபிக்க அவர் முனைந்தபோது, அந்த ஐவரும் ஒருவராகி, சங்கு&சக்கரதாரியாக, பிரமாண்ட திருக்கோலத்தில் மஹாவிஷ்ணுவாகக் காட்சி தந்தனர். அதுகண்டு திகைத்த முனிவர், பரந்தாமனின் தரிசனம் கண்டு ஆனந்தித்து அவரடி தொழுதார். எம்பெருமான் தனக்கு வஞ்சுளவல்லியைத் திருமணம் செய்து கொடுக்குமாறு கோரினார். தான் அதற்குப் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று தண்டனிட்டுப் பணிந்த முனிவர், பெருமான் அதே கோலத்தில் நிலையாக இத்தலத்தில் கோயில் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
அதோடு, தன் குடிலில் வஞ்சுளவல்லி முதன்மை அங்கீகாரம் பெற்றவள், அவளுக்குத் தனி உரிமைகளும், சலுகைகளும் உண்டு என்றும், அதே போக்கில் அவளுக்கு முதன்மை அந்தஸ்தை பெருமான் தர வேண்டும் என்றும் யாசித்தார். அவ்வண்ணமே அனந்தன் அருளியதால், திருநறையூர் என்ற பெயரோடு நாச்சியார்கோயில் என்றும் இத்தலம் வழங்கப்பட்டது. நாச்சியார் கோயில் என்று வழங்கப்பட்டதாலேயே இந்தக் கோயிலில், தினமும் தாயாருக்குதான் முதல் மரியாதை செய்விக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, எம்பெருமான் உலா வரும்போது, முதலில் தாயார் செல்ல, பின்னால் பெருமான் தொடரும் வழக்கமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு பெருமாளின் கருவறையில் திருமணக் கோலத்தில் வஞ்சுளவல்லித் தாயார் அருள்பாலிப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதே கருவறையில் பெருமானுடன் வந்த பிற நான்கு அம்சங்களும், திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மனும் காட்சி தருவது பார்க்க சிலிர்ப்பூட்டுகிறது. இத்திருத்தலத்தில் தரிசனம் தரும் சக்கரத்தாழ்வார் தனிப் பெருமை கொண்டவர். மேதாவி முனிவருக்கு ஸ்ரீதேவி குழந்தையாகக் கிடைத்தது போல, இவரும் விக்ரகமாக மணி முத்தாற்றில் கிடைத்தவர்தான். தனது வழக்கமான நீராடலின்போது இவ்வாறு இந்த சக்கரத்தாழ்வார் கிடைக்கப்பெற, அப்போது ஒரு அசரீரி, இந்த விக்ரகத்தை அவருடைய ஆசிரமத்திலேயே வைத்து முனிவர் வழிபடலாம் என்று கூறியது.
அதன்படியே முனிவரும் பெருமகிழ்ச்சி கொண்டு சக்கரத்தாழ்வாரைத் தன் குடிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டார். அவரே இப்போது நம் தரிசனத்துக்காக இந்தக் கோயிலில் தனி சந்நதி கொண்டிருக்கிறார். வித்தியாசமான சக்கரத்தாழ்வார் இவர். ஆமாம், இவரது காலடியில் நவகிரகங்களும், மேற் பகுதியில் திருமாலின் தசாவதாரங்களும் பொலிகின்றன. இந்தக் கோயில் மேலும் சில வித்தியாசமான அமைப்புகளைக் கொண்டிருக்கிறது: 1. கருவறை விமானம் வழக்கமான அமைப்பாக இல்லாமல், கோபுர வடிவமாக இருக்கிறது (இத்தலம் தவிர, 108 திவ்ய தேசங்களில் சென்னை திருவல்லிக்கேணியில் தான் இப்படி அமைந்திருக்கிறது); 2. இத்தலத்தில் வெவ்வேறு உயரங்களில், மொத்தம் 16 கோபுரங்களை தரிசிக் கலாம்; 3. பொதுவாக வடக்கு நோக்கி இருக்கும் பரமபத வாசல் இங்கு தெற்கு நோக்கி உள்ளது.கோச்செங்கண்சோழன், மிகச் சிறந்த மன்னன். ஆழ்ந்த சிவபக்தி கொண்டவன். அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவராக, சோழ நாயனார் என்றும் சிறப்பிக்கப்பட்டவன்.
ஒருசமயம் ஒரு போரில் தன் நாட்டை இவன் இழக்க வேண்டி வந்தது. பகைவரிடமிருந்து மறைந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம். மீண்டும் தன் நாட்டை கைக்கொள்வோமா என்ற ஏக்கத்திலும், துக்கத்திலும் அலைந்துகொண்டிருந்த அவன், மணிமுத்தா நதிக் கரையில் சில முனிவர்களை சந்தித்தான். அவர்களிடம் தன் ஆற்றாமையைக் கூறி அழுதான். அவனைத் தேற்றிய அவர்கள், அந்த மணிமுத்தா நதியில் நீராடி, அருகே கோயில் கொண்டிருக்கும் திருநறையூர் நம்பியை வழிபடுமாறுஅறிவுறுத்தினார்கள். அவர்களுடைய வழிகாட்டலின்பேரில் மனம் முழுவதும் நம்பியையே நினைந்து நீரில் மூழ்கி எழுந்த அவன் திகைத்தான். ஆம், அவனது வலது கை ஒரு வாளினைப் பற்றியிருந்தது. ‘நாந்தகம்’ என்ற ஆற்றல் மிகுந்த வாள்! நம்பியின் தெய்வீக அருள்தான் அது என்று நம்பிய அவன், அந்த வாளால், எதிரிகளை நிர்மூலமாக்கித் தன் நாட்டை மீண்டும் தன்வசப்படுத்திக்கொண்டான்.
இழந்தேவிட்டோமோ என்று கவலைப்பட்ட தன் வீரம் தன்னுள் பேரூற்றாகப் பெருகி, அந்த வேகத்தில் எதிரியை ஒடுக்கி, விரட்டியதற்கு அந்த தெய்வ வாள்தான் காரணம் என்பதை உளமார உணர்ந்த கோச்செங்கண் சோழன், இதற்கெல்லாம் மூலமான இப்பெருமானுக்கு, நன்றியறிதலாக தங்கத்தால் விமானம் அமைத்தான். பூஜை செலவுக்கு உதவும்படி நிலங்களை தானமாக அளித்தான். தன் பெயரில் ஒரு திருமண மண்டபத்தையும், பொது மக்கள் நலனுக்காக உருவாக்கினான். இத்தனைக்கும் அதற்கு முன் 70 சிவாலயங்களை நிர்மாணித்தவன் இந்த சோழன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன் இந்தக் கோயிலை அமைத்தான். அதுமட்டுமல்ல, வெளி கோபுரத்திலிருந்து பார்த்தாலும், பெருமாளை தரிசிக்கும் வகையில் மாடக் கருவறையாக, படிகளுடன் கூடியதாக உருவாக்கினான். இந்தச் சம்பவத்தை திருமங்கையாழ்வார் மிகவும் சிறப்பித்துப் பாடுகிறார்:
செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
தெய்வவாள் வளங்கொண்ட சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
நாச்சியார் கோயில் திருநறைநம்பி பெருமாளுக்கு திருவாராதனம் முடிந்ததும் கருடாழ்வாருக்கு அமுத கலசம் நிவேதிக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஆறு வேளைகள் இப்படி அமுத கலசத்தை சமர்ப்பிப்பதாலேயே இவரை மோதக மோதர் என்றும் அழைக்கிறார்கள். அது என்ன அமுத கலசம்? அதுதான் மோதகம், அதாவது கொழக்கட்டை! இதனால்தானோ என்னவோ கோயில் ராஜகோபுரத்துக்கு வலதுபக்கம் பிள்ளையாருக்கென சிறு சந்நதி ஒன்று அமைத்திருக்கிறார்கள்! ‘உள்ளேயும் ஒரு மோதகப் பிரியர் இருக்கிறார், போய் தரிசனம் செய்யுங்கள்’ என்று இந்தப் பிள்ளையார் பக்தர்களை வழி நடத்தி வைப்பது போல இருக்கிறது!ராஜகோபுரத்துக்குள் நுழைந்ததும் நந்தவனத்துக்குப் போகும் வழி என்று ஒரு அறிவிப்பு சொல்கிறது. இந்த நந்தவனத்துக்குள் வித்தியாசமான ஒரு சமாதி காணப்படுகிறது. அது இரண்டு கருடப் பறவைகளுக்கானது. இந்தத் தலத்திலேயே வெகுநாட்கள் வாழ்ந்த அவை, தம் இறுதி காலத்தில் இரண்டும் ஒன்றாக, இக்கோயிலின் தல விருட்சமான மகிழ மரத்துக்கு அடியில் மோட்சம் அடைந்தன. இணைபிரியாத தம்பதி என்ற வகையில் இவற்றுக்கு சிறப்பு காரியங்கள் செய்யப்பட்டு அடக்கமும் செய்யப்பட்டன.
அருகிலேயே நம்மாழ்வார் சந்நதி. அவரை தரிசித்துவிட்டுச் சென்றால், பிரமாண்டமான கல் தூண்கள் தாங்கி நிற்கும் அழகிய மண்டபத்தை அடையலாம். அந்தத் தூண்களின் உறுதி, தொன்மையின் கம்பீரத்தை உணர்த்துகிறது.கருவறை மண்டபத்தில் வலது பக்கம் ராமர் சந்நதி. மிக நேர்த்தியான, கலைநயம் மிக்க தூண்கள் இந்த மண்டபத்துக்கு அழகு சேர்க்கின்றன. மணவாள மாமுனிகள், தேசிகன் ஆகிய ஆசார்யார்கள் நமக்கு ஆசியளிக்கிறார்கள். கருவறை பிராகாரத்தில் யோக நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகியோரைத் தனித்தனி சந்நதிகளில் கண்டு, வணங்கி மகிழலாம். மூலவரின் விமான கோஷ்டத்தில் தசாவதாரத் திருவுருவங்கள் நம்மை ஆசிர்வதிக்கின்றன. ஸ்ரீவேணுகோபாலன், சௌரிராஜப் பெருமாள், வரதராஜப் பெருமாள், ஸ்ரீரங்கநாதர், லட்சுமி நரசிம்மர் ஆகியோர் சுதை சிற்பங்களாக சுற்றுச் சுவர்களில் எழிலுடன் காட்சியளிக்கிறார்கள். பன்னிரண்டு படிகள் ஏறி மூலவர் பெருமாளை தரிசிக்கலாம். கிழக்கு நோக்கிய திருமணக் கோலம். வலது கையில் சக்கரம், இடது கையில் சங்கு.
ஒரு காலை முன் வைத்த தோற்றம். திருமங்கையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வதற்காக மட்டுமல்ல; தன் பக்தர்கள் அனைவரின் துயரங்களையும் விரட்டியடித்து, அவர்கள் வாழ்வில் நன்மைகளைப் பெருக்க, தானே அடியெடுத்து, முன்வரும் அருள் அது!நாச்சியார் கோயில் என்றவுடனேயே எல்லோரும் உடனே நினைவுக்குக் கொண்டு வருவது, கல்கருடனைத்தான். சுமார் பத்தடி சதுரத்தில் தனி சந்நதி கொண்டிருக்கிறார் இந்த பிரமாண்டமான கருட பகவான். சாளக்கிராமத்தால் ஆனவர். ‘கவலைகள் நீங்கிட கல்கருட பகவான் தரிசனம்’ என்று இவர் சந்நதி முன் எழுதி வைத்திருக்கிறார்கள். திருநறையூர் பெருமாளுக்குத் திருமணம் செய்து வைத்தவர். திருமகளைத் தேடி திருமால் பூவுலகிற்கு வந்தபோது, அவரைச் சுமந்து வந்த கருடன், இத்தலத்தில் தாயாரைத் தேடுமாறு சூசகமாக அறிவித்ததாகவும், அதன் பிறகே நாராயணன் ஐந்து நிலைகளாக உருக்கொண்டு தேவியைத் தேடியதாகவும் சொல்கிறார்கள். இந்த வகையில், இந்த தலத்தில் தன் தலைவனுக்குத் திருமணம் செய்துவைத்த மேன்மையால் இங்கேயேதானும் கோயில் கொண்டிருக்கிறார். இவரை வழிபட்டால், திருமணப் பேறு கிட்டும், தோஷங்கள் நிவர்த்தி ஆகும், உத்யோகப் பிராப்தம் கிட்டும் என்றும் சொல்கிறார்கள்.
இங்கே இந்த கருடன் அமைந்ததற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. பிரமாண்ட அளவில் கருடனுக்கு சிலை வடிக்கும் ஆவல் கொண்ட சிற்பி ஒருவன் அந்த முயற்சியில் ஆழ்ந்து ஈடுபட்டான். இரு புறங்களிலும் நீண்ட சிறகுகளைக் கொண்ட கருடனை உருவாக்கிய அவன், முழு திருப்தியுடன் அதற்கு பிராண பிரதிஷ்டை செய்தான். அதாவது வெறும் சிற்பமாக வடிக்கப்பெற்ற ஒரு உருவத்துக்கு அதை உருவாக்கிய சிற்பியே பிராணபிரதிஷ்டை செய்தாரென்றால், அந்த சிற்பம் தோற்றத்தில் அப்படியே உயிர் கொண்டதாகக் காணப்படும். சில சமயம் அதன் அருகே போய் நின்றால் அதன் மூச்சுக் காற்றும் நம் மீது படும்! அப்படி இந்த சிற்பி உயிர் கொடுத்தபோது, அந்த கருடன், நிஜமாகவே உயிர்பெற்று ஜிவ்வென்று விண்ணில் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதுகண்டு வியந்த சிற்பி, உடனே தன் கையிலிருந்த உளியை அதை நோக்கி எறிய, அது கருடனின் மூக்கில் பட்டு சற்றே மூளியாக்க, கருடன், புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்து நிலையாக, கம்பீரமாக அமர்ந்து கொண்டது! இந்த கருடன் இன்னொரு அற்புதத்தையும் இந்தக் கோயிலில் புரிகிறார். இங்கே ஆண்டிற்கு இரண்டு முறை கருடன் புறப்பாடு நடைபெறுகிறது. அச்சமயம் அவர் கருவறையிலிருந்து முதலில் நான்கு பேர், நான்கு மூலைகளில் அவரைத் தாங்கி வெளியே கொண்டு வருவார்கள்.
அங்கிருந்து புறப்பட்டு கோயில் வாசலருகே வரும்போது அவருடைய கனம் கூடிவிடும். சுமப்பவர்கள் நான்கு பேர் என்பது எட்டு, பதினாறு என்றாகும் வகையில் அவர் பாரமாக உணரப்படுவார். உலாவிற்காக வீதியில் இறங்கும்போது இன்னும் கனம் அதிகரிக்க, மேலும், மேலும் பக்தர்கள் அவரைச் சுமக்க வேண்டிய நிலைமை உருவாகும். ஆமாம், பதினாறு, முப்பத்திரண்டு, அறுபத்து நான்கு என்றுகூட போய்விடும்! ஊர்வலம் முடிந்தபின், மீண்டும் கோயிலுக்குத் திரும்பும்போது கனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சுமக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்து, நிறைவாக நான்கு பேர்களால் அவர் சந்நதியில் அமர்த்தப்படுவார். இவ்வாறு கனம் கூடுவதற்கும், குறைவதற்கும் என்ன காரணம் என்று இன்றுவரை யாராலும் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. திருநறையூர் பெருமாள் கோயிலை விட்டு வரும் கருடன், பெருமாளுடைய பக்தர்களின் பாவங்கள், தோஷங்கள் எல்லாவற்றையும் தான் சுமப்பதால் அவர் எடை கூடியவராக உணரப்படுகிறார். அந்த கருட சேவையைப் பார்ப்போர், பார்க்காதோர், மனதால் நினைத்துக்கொண்டோர் அனைவரது திருஷ்டிகளையும் தான் தாங்கிக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் கோயிலுக்குத் திரும்பும்போது, அங்கிருந்தபடியே அவர், பெருமாளிடம், அந்தப் பாவங்களையும், தோஷங்களையும் நிவர்த்தி செய்யுமாறு வேண்டிக்கொள்கிறார்.
உடனே எம்பெருமானும் அந்த வேண்டுகோளை நிறைவேற்றிவிடுவதால், கொஞ்சம், கொஞ்சமாக அவர் எடை குறைந்து, கோயிலுக்குள் நுழையும்போது இயல்பான கனம் கொண்டவராக ஆகிவிடுகிறார். அதாவது, திருநறையூர் நம்பியை எங்கிருந்து வேண்டிக் கொண்டாலும், அவர் அருள் நேரடியாக, உடனடியாக நம்மீது பாயும், நம் துயரங்கள் எல்லாம் களையப்படும் என்பது இந்தச் சம்பவத்தின் உட்கருத்து. அதோடு, இன்னொரு அதிசயமும் இச்சம்பவத்தின்போது நிகழ்கிறது. அது, ஊர்வலம் வரும் கருடனுக்கு வியர்ப்பதுதான். ஆமாம், அவ்வப்போது அவர் முகத்தில் வியர்வை அரும்பி வரும்; அதை உடனிருக்கும் ஒரு பட்டர் பட்டுத் துணியால் துடைத்துவிட்டுக்கொண்டே வருவார்! உலக பாவ பாரத்தின் சுமையை அவரால் தாங்க முடியவில்லையோ!திருமணக் கோலத்தில் நம்பியுடன் அவர் கருவறையிலேயே தாயார் வீற்றிருப்பதால், இவருக்குத் தனியே சந்நதி இங்கே இல்லை. இவ்விருவரையும், தினந்தோறும் பிரம்மன் பூஜிப்பதாக ஐதீகம்.
இக்கோயிலில் 108 திவ்ய தேசப் பெருமான்களையும் உற்சவ மூர்த்திகளாக ஒருசேர தரிசிக்கலாம். ஆமாம், கருவறை மண்டபத்தில் ஒரு கண்ணாடிப் பேழையில் இந்த விக்ரகங்களைக் காணலாம். இதை இங்கே கொண்டு வந்து சேர்த்தது யார்? இந்த ஊரைச் சேர்ந்த ஒரு வைதிக பிரம்மசாரி வாலிபனுக்கு, 108 திவ்ய தேச பெருமாள்களையும் தரிசித்துவிடவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. ஆனால், காலம், தொலைவு போன்ற அசௌகரியங்களால் அது கைகூடவில்லை. மிகுந்த ஏக்கத்துடன் அவன் திருநறையூர் நம்பியை மனமுருகி வேண்டிக்கொள்ள, அவர் இவன் கனவில் தோன்றி அந்தப் பெருமான்களின் விக்ரகங்களை வழங்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்ட அவன், தன் இல்லத்திலேயே வைத்து பூஜித்து வந்தான். பிறகு தன் அந்திமக்காலம் நெருங்கியதை உணர்ந்து, அவற்றை இந்தக் கோயிலுக்கு சமர்ப்பித்துவிட்டான். அந்த விக்ரகங்கள்தாம் இவை!
தியான ஸ்லோகம்
ஊடா வஞ்சுள நாயகீ கலு நிஜப்ராதாந்ய சுல்கா புரா
சுத்தம் கேஹ விமாந மத்ர ஸமணீ முக்தாநதீ ப்ராங்முக:
அத்ரார்த்தீச ஸுரத்ருகல்ப பகவாந் பூர்ணாஹ்வய: ஸ்ரீநிதி:
ப்ரத்யக்ஷேண சதுர்முகேந ரிஷிணா மேதாவி நா ராத்யதே.
எப்படிப் போவது: கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது நாச்சியார் கோயில். ஒப்பிலியப்பன் கோயிலிலிருந்தும் செல்லலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 முதல் 12.30 மணிவரையிலும், மாலை 4.30 முதல் 9 மணிவரையிலும்.
முகவரி: அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோயில், நாச்சியார் கோயில் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612602.
The post நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி appeared first on Dinakaran.