- தெலுங்கானா
- திருமலா
- குமாரி
- ராம்நகர், எங்கூர் மண்டல், கம்மம் மாவட்டம், தெலுங்கானா
- ரகுநாதபாலம் மாவட்டம்
- பீதி
திருமலை: கள்ளக்காதலியுடன் வாழ மனைவி, 2 குழந்தைகளை கொன்று கார் விபத்தில் இறந்ததாக நாடகமாடிய டாக்டர் மற்றும் செவிலியரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் எண்குரு மண்டலம் ராம்நகரைச் சேர்ந்த குமாரி (28). இவருக்கும் ரகுநாதபாலம் மண்டலம் பாவ்ஜி தாண்டாவைச் சேர்ந்த டாக்டர் போடா பிரவீன் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிரவீன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறார். பிரவீன் மற்றும் குமாரி தம்பதிக்கு கிருஷிகா(5), கிருத்திகா(3) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பிரவீன் தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் தங்கி குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரவீன் மருத்துவமனையில் இரவுப் பணி செய்யும்போது அங்கு பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த சோனி பிரான்சிஸ் என்ற செவிலியருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதுபற்றி அவரது மனைவி குமாரிக்கு தெரிய வந்ததும், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்- மனைவியின் இரு குடும்பத் உறவினர்கள் பெற்றோர் பஞ்சாயத்து நடத்தி இருவரையும் சேர்த்து வைத்தனர். கள்ளகாதலியுடன் வாழ்வதற்காக மனைவி மற்றும் குழந்தைகளை கொல்ல பிரவீன் திட்டமிட்டார். இதற்காக சொந்த ஊரில் வீட்டில் வேலை இருப்பதாகச் கூறிய பிரவீன் கடந்த மே மாதம் பத்து நாட்கள் லீவு போட்டுவிட்டு, மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு பாவ்ஜி தாண்டாவுக்கு சென்றார். அதன் பிறகு தான் ஏற்கனவே மயக்கவியியல் நிபுணர் என்பதால் கூகுளில் தேடி, அதிக அளவு மருந்து செலுத்தினால் எவ்வளவு நேரத்தில் இறப்பார்கள் என்று திட்டம் தயாரித்து வைத்திருந்தார்.
அதன்படி கடந்த மே 26ம் தேதி குமாரிக்கு ஊசி போட முயன்று தோல்வியடைந்தார். அதன் பிறகு மே 28ம் தேதி ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறி மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் கம்மா சென்றார். திரும்பி வரும் வழியில், குமாரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பல்லேப்பள்ளியில் உள்ள மருத்துவக் கடையில், கால்சியம் ஊசியும் அத்துடன் தான் ஏற்கனவே திட்டமிட்ட மருந்தை வாங்கி கொண்டார். சுமார் 3 கிலோ மீட்டர் சென்றதும் கொயசெலக்கா அருகே காரை நிறுத்தி மனைவியை பின் இருக்கையில் படுக்க வைத்து இரண்டு ஊசி போட்டதும் குமாரி சுயநினைவை இழந்தார்.
பிறகு ஒன்றன் பின் ஒன்றாக இரு குழந்தைகளின் மூக்கையும், வாயையும் மூடி மூச்சு விடாமல் கொன்றுவிட்டார். குமாரியும் இறந்துவிட்டதை உறுதி செய்துவிட்டு, சடலங்களுடன் காரில் புறப்பட்டார். சொந்த ஊர் செல்லும் வழியில் மஞ்சுகொண்டா என்ற பகுதியில் காரின் இடது பக்கத்தை சேதப்படுத்த திட்டமிட்டபடி சாலையோரம் இருந்த மரத்தில் வேகமாக சென்று மோதினார். இதில் பிரவீன் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்ததும், குமாரி மற்றும் அவரது இரு குழந்தைகளும் சிறு காயம் ஏதுமின்றி உயிரிழந்திருப்பதும் அவரது உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால், சம்பவம் நடந்த மறுநாள் குமாரியின் உறவினர்கள் கம்மம் அரசு மருத்துவமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மகள் மற்றும் பேரக்குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குமாரியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையை துவக்கிய போது காரில் ஊசியின் சிரிஞ்ச் காலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குமாரியின் சடலத்தின் கைகளில் சிறிய தழும்புகள் இருந்ததால், அவை ஊசி மருந்துகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் மாதிரிகளைப் பெற்று பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில், மூவரும் கொலை செய்யப்பட்டு விபத்தாக சித்தரித்ததை போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர் பிரவீனிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரவீன் மற்றும் அவரது காதலி சோனி மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். திருமணத்திற்கு புறம்பான தொடர்பு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விபத்தாக சித்தரித்த வழக்கை போலீசார் சவாலாக எடுத்துக்கொண்டு 48 நாட்களுக்குப் பிறகு உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்த சம்பவத்தை அப்பகுதி மக்களும் போலீஸ் உயர் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.
The post கள்ளக்காதலியுடன் வாழ முடிவு செய்து மனைவி, 2 குழந்தைகளை கொன்று கார் விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடிய டாக்டர் கைது: தெலங்கானாவில் பயங்கரம் appeared first on Dinakaran.