×

ஒரே காவல்துறை, ஒரே போலீஸ் நிர்வாகம் வேண்டும் என வலியுறுத்தல் போராட்டத்தை தூண்டியதாக 39 சிறப்பு போலீசார் சஸ்பெண்ட்: தெலங்கானா டிஜிபி அதிரடி உத்தரவு

திருமலை: ஒரே காவல்துறை, ஒரே போலீஸ் நிர்வாகம் கோரி நடைபெற்று வரும் போராட்டத்தை தூண்டியதாக 39 சிறப்பு போலீசாரை சஸ்பெண்ட் செய்து தெலங்கானா டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் காவல்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு போலீசார் ஒரே காவல்துறை ஒரே போலீஸ் நிர்வாகம் வேண்டும், ஆயுத ரிசர்வ் மற்றும் சிவில் காவல்துறையில் தங்கள் சக ஊழியர்களுடன் சமமாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களாக குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தெலங்கானா டிஜிபி ஜிதேந்தர் வெளியிட்ட அறிக்கை: சிறப்புக் காவலர்களின் (டிஜிஎஸ்பி) பணியாளர்களின் பிரச்னைகளை காவல்துறை உன்னிப்பாக கவனிக்கும். மற்ற எந்த அரசுத் துறை ஊழியர்களைப் போல் அல்லாமல் அவர்களுக்கு சரண்டர் விடுப்பு மற்றும் கூடுதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மாநிலத்தில் காவல்துறையினருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகள் அதிகம்.

இந்த சூழ்நிலையில் சிறப்பு போலீசார் போராட்டங்களில் ஈடுபடுவது நியாயமானதல்ல. சீருடை அணிந்த சிறப்பு போலீசார் தங்கள் கடமைகளை மிகுந்த ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும். காவல் துறையின் நற்பெயரைக் காக்க வேண்டிய போலீசார், தொழில் நெறிமுறைகளை ஒழுக்கத்துடன் பேணிக் காக்க வேண்டும். பணியாளர்கள் வழக்கம்போல் தங்கள் வழக்கமான பணிகளைச் செய்ய வர வேண்டும். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தர்பார் நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் தங்கள் அதிகாரிகள், துறை தலைவர்கள், டிஜிபிக்கு தெரிவிக்க வேண்டும்.

அதனை தவிர்த்து உங்களது போராட்டத்தை தொடர்ந்தால் தீவிரமாக எடுத்துக்கொள்ள நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் தெலங்கானா மாநில அரசு, தெலங்கானா சிறப்புக் காவலர் பிரிவில் பல்வேறு பதவிகளில் இருந்து உடன் பணி புரியும் ஊழியர்களை போராட்டத்தை தூண்டி சாலைகளில் இறங்கி பேரணி, பட்டாலியன் அலுவலகம் முன்பு தர்ணா உள்ளிட்டவை முன்னின்று நடத்தியதாக பல்வேறு பதவிகளில் உள்ள 39 சிறப்பு போலீசாரை சஸ்பெண்ட் செய்து டிஜிபி உத்தரவிட்டார்.

The post ஒரே காவல்துறை, ஒரே போலீஸ் நிர்வாகம் வேண்டும் என வலியுறுத்தல் போராட்டத்தை தூண்டியதாக 39 சிறப்பு போலீசார் சஸ்பெண்ட்: தெலங்கானா டிஜிபி அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Telangana DGP ,Tirumala ,Telangana ,
× RELATED தியேட்டர் கூட்ட நெரிசலில் இறந்த பெண்...