கர்ப்பிணிகளை ரிலாக்ஸாக்கும் ஓவியப் புத்தகங்கள்!

நன்றி குங்குமம் தோழி

கருவுற்றிருக்கும் நேரத்தில் பெண்களுக்கு பலவிதமான மூட் ஸ்விங் ஏற்படும். அந்த சமயத்தில் மனதினை ஒருநிலைப்படுத்த குரோஷே, பாட்டு கேட்பது, தியானம் என
தங்களுக்குப் பிடித்த வேலையில் ஈடுபடுவார்கள். இவை எல்லாம் அந்தத் தருணத்தில் கருவினை சுமக்கும் பெண்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதற்கான சிறப்பு மையங்களும் உள்ளன. அங்கு கர்ப்ப காலத்தில் செய்யப்படும் உடற்பயிற்சிகள், தியான முறைகளை மேற்கொள்ளலாம். இது போன்ற பல முறைகளில் எல்லோருக்கும் பிடித்தமானதுதான் ஓவியம் வரைவது மற்றும் வண்ணம் தீட்டுவது. எது வேண்டுமா னாலும் வரையலாம், வண்ணங்கள் தீட்டலாம் என்றில்லாமல் கருவுற்ற தாய்மார்களுக்கென பிரத்யேகமான வண்ணம் தீட்டும் புத்தகத்தை வடிவமைத்து பல தாய்மார்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் ஈரோட்டை சேர்ந்த சந்தியா தசரதன்.

‘‘ஓவியம் வரைவது என்னுடைய ஃபேஷன். ஆனால் அதுவே என்னுடைய வேலையாக மாறும்னு நான் அப்போது நினைக்கவில்லை’’ என்று பேசத் துவங்கிய சந்தியா, பல தடைகளை கடந்து ஓவியத் துறையில் தான் அடைந்த வெற்றி குறித்து விளக்குகிறார். ‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே ஓவியம் வரைய பிடிக்கும். பள்ளி படிப்பை முடிச்சிட்டு கட்டிட வடிவமைப்பாளராக விரும்பினேன். ஆனா, எங்க வீட்டில் என்னை என்ஜினியரிங் படிக்க சொன்னதால், கோவையில் படிச்சேன். இருந்தாலும் ஓவியம் வரைவதை நான் விடவில்லை. சொல்லப் போனால் நான் ஓவியம் வரைவதைப் பார்த்து பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களே என் பெயரை போட்டிக்கு கொடுத்திடுவாங்க.

அப்படித்தான் பள்ளியில் படிக்கும் போது, செய்தித்தாள் ஒன்றில் குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்த ஒரு பக்கம் இருக்கும். அதில் என் ஓவியம் முதல் பரிசை பெற்றது. அதுதான் என் ஓவியப் பயணத்தின் துவக்கம்னு சொல்லலாம். கல்லூரிக்குப் பிறகு நல்ல சம்பளத்தில் பிரபல நிறுவனத்தில் வேலை. அதன் பிறகு கல்யாணம், குழந்தை, குடும்பம் என என் வாழ்க்கை நகர ஆரம்பித்தது. இதற்கிடை யில் கணவரின் வேலை காரணமாக ஜெர்மனிக்கு சென்றோம்.

குழந்தையை பார்த்துக் கொண்டு அவனுடன் நேரம் செலவிட்டதால், என்னால் என் ஓவியம் வரைதலை தொடர முடியவில்லை. அவன் கொஞ்சம் வளர்ந்து அவனுக்கான வேலையை அவன் பார்த்துக் கொள்ள துவங்கிய பிறகு எனக்கு நேரம் இருந்த சமயத்தில் மீண்டும் வரைய ஆரம்பித்தேன்’’ என்றவர், ப்ரெக்னன்சி வண்ணம் தீட்டும் புத்தகம் துவங்கியதற்கான காரணம் குறித்து விவரித்தார். ‘‘வளர்ந்த மேலை நாடுகளில் பேறு காலத்தில் பெண்களுக்கென பலவிதமான ஆக்டிவிட்டீஸ் இருக்கும். அதில் ஓவியம், இசை, யோகா, உடற்பயிற்சிகள் அடங்கும். குறிப்பாக ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் என்பதைத்தான் பெண்கள் அதிகமாக செய்து வந்தார்கள். நம்மூரிலும் பெண்கள் இது ஒரு பயிற்சி என்று தெரியாமல் கர்ப்ப காலத்தில் செய்து வந்தார்கள். அதாவது, புத்தகத்தில் கோலம் போடுவார்கள், கதை புத்தகம் படிப்பாங்க.

சிலர் ஸ்வெட்டர் பின்னுவார்கள். ஆனால் இன்றைய சூழலில் நாம் பின்பற்றி வந்த பழமையான பல பழக்கவழக்கங்களை முற்றிலும் மறந்துவிட்டோம். நான் அங்கு அதை எல்லாம் பார்த்த போது, நம்மூர் கர்ப்பிணிகளுக்கும் இது போல் ஏதாவது ஒன்றினை கொண்டு வர முடிவு செய்தேன். அதனால் மீண்டும் ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். ஓவியங்களில் பல ரகம் உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு எந்த மாதிரியான ஓவியங்களை தேர்வு செய்கிறார்கள் என்பதை கவனித்தேன். மேலும் யூடியூப் பார்த்தும் கற்றுக் கொண்டேன். அந்த சமயத்தில் தான் இன்ஸ்டாகிராம் அறிமுகமானதால், நான் வரைந்த ஓவியங்கள், போர்ட்ெரயிட் படங்களை எல்லாம் அதில் பதிவு செய்ய துவங்கினேன்.

அதைப் பார்த்து, சென்னையில் இருந்து ஒரு ஆர்ட் டைரக்டர், அவர்களின் குறும் படம் ஒன்றுக்கு என்னை வேலை பார்த்து தரச்சொல்லிக் கேட்டார். நான் அப்போது ஜெர்மனியில் இருந்ததால், என்னால் அந்தவேலையை எடுத்து செய்ய முடியவில்லை. இதற்கிடையில் கொரோனா காலத்தில் நாங்க கோவையில் இருந்தோம். இரண்டு வருடம் கழித்து மீண்டும் நாங்க ஜெர்மனிக்கே சென்றோம். அங்கு சென்ற பிறகுதான் என் ப்ரெக்னன்சி புத்தகத்தினை என்னால் வெளியிட முடிந்தது.

பொதுவாக வண்ணம் தீட்டும் புத்தகம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதில் நான் என் புத்தகங்களை வித்தியாசமா இருக்கணும்னு நினைச்சேன். முன்பு செல்போன் பயன்பாட்டில் இல்லை. அதனால் கோலம் போடுவது, குழந்தைகளுக்கு ஸ்வெட்டெர் பின்னுவது போன்றவற்றை செய்து வந்தாங்க. இப்போது செல்போன் அவர்களின் உலகம் என்றாகிவிட்டது. பெரும்பாலான நேரம் செல்போனில்தான் செலவிடுகிறார்கள்.

பேறு காலத்தில் அதன் பயன்பாட்டினை குறைக்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும், அவர்கள் அதை கடைப்பிடிப்பதில்லை. அதனால்தான் வெளிநாடுகளில் கர்ப்ப காலத்தில் பெண்களை ஏதாவது ஒரு செயல்பாட்டில் பிசியாக வைத்துக் கொள்வதற்காகவே தனிப்பட்ட பயிற்சிகள் அளிக்கிறாங்க. அதில் வண்ணம் தீட்டுவதும் ஒரு பயிற்சி. வண்ணம் தீட்டும் போது, அம்மா மற்றும் கருவில் இருக்கும் குழந்தை இருவரும் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் போது, அவர்களின் கவனிக்கும் திறன் அதிகரிக்க உதவுகிறது.

மேலும் ஒரு விஷயத்தை பொறுமையாக செயல்பட வைக்கிறது. கர்ப்ப காலங்களில் பெண்களின் மனநிலை சந்தோஷமாக இருந்தால்தான் வயிற்றில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். பலவித வண்ணங்களை பார்க்கும் போது நம்மை அறியாமல் நம் மனதில் ஒருவித உற்சாகம் ஏற்படும். அதை முழுமையாக தீட்டி முடிக்கும் போது, கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.

என்னுடைய ப்ரெக்னன்சி கலரிங் புத்தகத்தில் ஒரு பெண் கருவுறுதல் முதல், குழந்தை பிறப்பது வரை குறித்து அனைத்தும் ஓவியங்களாக வைத்துள்ளோம். மேலும் ஒவ்வொரு ஓவியங்களும் கண்களை கவரும் வண்ணங்களால் தீட்ட வேண்டும். புத்தகம் மற்றும் அதில் என்ன மாதிரியான ஓவியங்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டேன். ஆனால் என்னால் என் புத்தகத்தை வெளியிட முடியவில்லை. அதனால் நான் ஒரு பர்த் எஜுகேட்டரை அணுகி அவர்கள் மூலமாக புத்தகத்தை வெளியிட கேட்டேன்.

ஆனால் அவர் அளித்த நிபந்தனை எனக்கான அடையாளம் நிராகரிக்கப்பட்டது போல் இருந்தது. அதனால் மறுத்துவிட்டேன். பிறகு இந்தியாவில் என் நண்பர் ஒருவர் புத்தகத்தை வெளியிட விரும்பினார். நானும் அவரிடம் ஓவியர் என்று குறிப்பிட்டு அதில் என் பெயரையும், இணை ஆசிரியரின் பெயரையும் சேர்த்து வெளியிட சொன்னேன். ஆனால் அவர் அந்த புத்தகத்தை அவரே எழுதி வடிவமைத்தது போல் வெளியிட்டிருந்தார். நான் ஜெர்மனியில் இருந்ததால் அவர் இப்படி செய்தது எனக்கு தெரியவில்லை. என் மற்ற நண்பர்கள் மூலம் அவர் செய்த தவறை அறிந்தேன். அவரிடம் அப்படி செய்ய வேண்டாம் என்று கூறியும் அவர் கேட்கவில்லை.

அதனால் அவரிடம் என் புத்தகத்தை வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டு நானே வெளியிட ஆரம்பித்தேன். தற்போது எங்களின் புத்தகத்திற்கு என தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனை கணவன் தன் மனைவிக்காகவும், அக்கா தங்கைக்காகவும், தோழிக்காகவும் பரிசாக தருகிறார்கள்’’ என்றவர் மேலும் அவர் அறிமுகம் செய்ய இருக்கும் புத்தகம் குறித்தும் விவரித்தார். ப்ரெக்னன்சி புத்தகத்தை வாங்கிய பல பெண்கள் அடுத்து தாய்மை குறித்த புத்தகம் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டாங்க. அவர்களுக்காக அந்த புத்தகத்தை தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

மேலும், குழந்தைகளுக்காக ஏற்கனவே தொட்டில் மொழி, சீவகன், தொடுதல், திருவிழா, மாற்றுத்திறன் சந்திப்போம் என்ற தலைப்பில் ஓவிய வடிவில் வெளியிட்டு இருக்கிறேன். அதைத் தொடர்ந்து கதை, பாட்டு, அறிவியல் போன்ற தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறோம். தற்போது சுற்றுப்புறச்சூழல் கேடு குறித்த புத்தகம் ஒன்றை தயாரித்து வருகிறோம். குழந்தைகளுக்கு பாடமா நடத்துவதைவிட, செயல் முறை விளக்கத்துடன் நடத்தினால் சுலபமாக புரியும்.

அதையே ஓவியம் மூலம் கற்கும் போது மேலும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். என்னுடைய முக்கிய நோக்கம் எல்லோருக்கும் ஓவியக் கலையினை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதுதான். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் என் புத்தகத்தினை கொண்டு செல்ல இருக்கிறேன். தற்போது 30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறோம். மேலும் பல தலைப்புகளில் வெளியிடும் எண்ணம் உள்ளது’’ என்று கூறும் சந்தியா சுயசக்தி மற்றும் வண்டர் வுமன் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post கர்ப்பிணிகளை ரிலாக்ஸாக்கும் ஓவியப் புத்தகங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: