ஈசன் உவக்கும் கீத கோவிந்தம்!

ஜெய தேவர் என்ற பெரிய மகான், கீத கோவிந்தம் என்ற அற்புத காவியத்தை இயற்றினார். அதில் ராதைக்கும் கண்ணனுக்கும் இடையில் நடந்த காதல் விளையாட்டை அழகாக வர்ணித்து இருக்கிறார். அந்த காவியத்தை அவர் படைக்கும்போது ஒரு கட்டத்தில் ராதையின் பாதத்தை தனது தலையில் வைக்கும் படி கிருஷ்ணன், ராதையைக் கேட்பதாக எழுதினார். பிறகு, இறைவன் பக்தனின் பாதத்தை, தனது தலையில் வைத்துக் கொள்வதா? என்று பதறி எழுதிய அந்த ஓலையைக் கிழித்துவிட்டு குளிக்கச் சென்றார். ஆனால் இறைவன் அடியவர்க்கு அடியவன் இல்லையா? ஆகவே ஜெயதேவர் எழுதிய அந்த வரிகளை அவன் மனமார ஏற்றான்.

எனவே அவர் குளிக்கச் சென்றபோது, அவர் வடிவிலேயே வந்து, அவர் கிழித்து எறிந்த அதே வரிகளை மீண்டும் எழுதி சென்றான். இதை அறிந்த ஜெயதேவர் கண்ணன் கருணையை எண்ணி கண்ணீர் வடித்தார். ஆனாலும் என்ன தான் கண்ணனே அங்கீகரித்த வரிகளாக இருந்தாலும் ஒரு பக்தையின் திருவடியை தன் திருமுடியில் வைக்கும் படி கண்ணன் கேட்பதாக எழுதிவிட்டோமே என்று அவருக்கு ஒரே மனக்கவலை. ஆகவே அந்த வரிகள் அடங்கிய அஷ்டபதி பாடலை மட்டும் அவர் உலகிற்கு வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தார். ஆனால் கண்ணன் விடுவானா அவன் ஒரு லீலை செய்ய எண்ணமிட்டான்.

காசியில் தங்கிஇருந்த ஜெயதேவர் பெரும் அபச்சாரம் செய்தவர் போல உணர்ந்து, மனம் புழுங்கினார். மனக் கவலையும், குற்ற உணர்வும் சேர்ந்து அவரை வாட்டி வதைத்தது. அப்படியே கண்ணயர்ந்தார். அப்போது அவரது கனவில் தோன்றினார் காசி விஷ்வநாதர். முக்கண்ணும் விரிசடையும், கொண்டு விடையேறி காட்சி தந்த, மறை பொருளைப் போற்றி வணங்கினார் ஜெயதேவர்.

‘‘அப்பனே! ஜெய தேவா! மாலவன் மீது அழகழகான அஷ்டபதி பாடல்களை பாடிய நீ என் மீது ஒன்றும் பாடவில்லையே! உனது உன்னத கவியால் என்னையும் பாடக் கூடாதா?’’ என்று சுந்தரர் காதலுக்காக திருவாரூரில் தூது சென்றவன், இன்று ஒரு பாடலுக்காக ஜெயதேவர் முன் மன்றாடினான். அதைக் கண்ட ஜெயதேவர் பதறினார். ‘‘ஹே பிரபோ! அபச்சாரம். அபச்சாரம். மன்னித்து அருள வேண்டும். இதோ இக்கணமே ஈசன் பெருமையைப் போற்றி என்னால் முடிந்த கவிதைகளைப் படைக்கிறேன்’’ என்று பணிவாக சொல்லி பரமன் பதம் பணிந்தார். அதைக் கண்ட முக்கண் முதல்வன், முறுவல் பூத்தார்.

‘‘நீ பாடி முடித்ததும் உன் மனதில் நீண்ட நாளாக இருந்து வரும் கவலை நீங்கும்’’ என்று ஆசி வழங்கி, சட்டென மறைந்து போனார். கனவில் கண்ட அற்புதக் காட்சியால் திடுக்கிட்டு எழுந்தார் ஜெயதேவர். கண்ணன் கருணையையும் முக்கண்ணன் மகிமையையும் எண்ணி வியந்தார். ஈசன் மீது ஐந்து அஷ்டகங்களை நொடியில் படைத்தார். விஷ்வநாதர் பாதத்தில், பாடல்களை வைத்து பணிந்து நின்றார்.அப்போது பல சிஷ்யர்கள் சூழ அங்கே வந்து சேர்ந்தார் குடாதர பண்டிதர். பண்டிதரின் பாதம் பணிந்தார் ஜெயதேவர்.

அவர் அந்த வணக்கத்தை அலட்சியம் செய்தபடியே ‘‘இங்கே யாரது ஜெயதேவன்’’ என்று கூச்சலிட்டார். திடீரென்று வந்த நபர், தன்னைக் கேட்டு கூச்சல் போடுவதால், ஜெய தேவர் பதறினார். ‘‘அடியேன் தான் ஜெய தேவன்’’ என்று பணிவாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.‘‘ஓ நீதானா அந்த மூடன்! வேதங்கள் அனைத்தும் அந்த பரந்தாமன் காலடியில் கிடக்க, அந்த பரந்தாமன் ஒரு பாமரப் பெண்ணின் பாதத்தை தலையில் வைத்துக் கொண்டதாக எழுதிய அதி மேதாவி நீ தானா? உன்னால் மாலவன் புகழ் பாடும் திருமால் அடியார்களுக்கு எல்லாம் தலை குனிவு’’ என்று கண்டபடி ஏசினார்.

தான் ரகசியமாக வைத்திருந்த ஒரே ஒரு அஷ்டபதியின் கருத்து, இந்த பண்டிதருக்கு எப்படி தெரிந்தது என்று விளங்காமல் திகைத்தார் ஜெய தேவர். அவர் செய்த ஏசல் அனைத்தும் நியாயமானது என்று எண்ணிய ஜெயதேவர், அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நாணி கோணினார்.‘‘ஏனப்பா உனது சம்சாரத்திடம் இப்படித் தான் கேட்பாயா? நன்றாக இருக்கிறதே உனது கவிதா விலாசம்’’ ஏசல், நகைப்பாக மாறியது. ஜெயதேவர் கூனிக் குறுகிக் கொண்டே போனார்.‘‘என்ன அய்யா பதில் சொல்லாமல் சிலை போல நிற்கிறீர்’’ அந்த பண்டிதர் விடுவதாக இல்லை.

என்ன செய்வது என்று விளங்காமல் தவித்தார் ஜெயதேவர். ‘‘அடியேன் செய்த பிழைக்கு தேவரீர் என்ன தண்டனை தந்தாலும் ஏற்க தயார்’’ என்று பணிவோடு சொன்னார்.‘‘சரி கொண்டுவா நீ எழுதிய அஷ்டபதி அடங்கிய ஓலையை’’ சிங்கம் போலக்கட்டளை பிறப்பித்தார் அவர். நொடியில் ஓலையைக் கொண்டு வந்தார் ஜெயதேவர்.‘‘நீ எழுதிய இந்த அஷ்டபதியை நான் இப்போது கங்கையில் விட்டு எறிகிறேன். கங்கையின் பிரவாகத்தை எதிர்த்துக் கொண்டு இந்த ஓலை எதிர்த் திசையில் வந்தால், நீ எழுதிய அஷ்டபதியை நான் ஏற்கிறேன். இல்லையேல், அஷ்டபதியோடு நீ எழுதிய அத்தனை நூல்களையும். கங்கையிலே விட்டு விடவேண்டும். புரிகிறதா’’ மிரட்டினார் பண்டிதர். பணிந்தார் ஜெயதேவர்.

அந்த பண்டிதர், ஜெயதேவரின் கைகளில் இருந்த அஷ்டபதி ஓலையை வாங்கி கங்கையில் வீசினார். கூடி இருந்த அனைவரும், கண் கொட்டாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. கங்கையின் பிரவாகத்தை எதிர்த்துக் கொண்டு வேகமாக எதிர்த் திசையில் அஷ்டபதி அடங்கிய ஓலை மிதந்து வந்தது. சட்டென்று கங்கையின் மத்தியில் தோன்றிய ஒரு தெய்வீக பெண் மணி, கங்கையை எதிர்த்துக் கொண்டு மிதந்து வந்த அஷ்டபதி அடங்கிய ஓலையை எடுத்துக் கொண்டு கரைக்கு வந்தாள். பண்டிதரிடம் அந்த ஓலையை கொடுத்தாள்.

‘‘கங்கையாகிய எனது பாதங்கள், எனது கணவரான ஈசனின் தலையில் இருக்கும் போது, இராதையில் பாதங்கள் கண்ணன் தலையில் இருக்கக் கூடாதா?’’ என்று கேட்டபடி அந்த பெண் சட்டென மறைந்தாள். அப்போது தான் அனைவருக்கும் உறைத்தது வந்தது சாட்சாத் கங்கா தேவியே என்று. கூடி இருந்த அனைவரும் கண்ட காட்சியை நம்ப முடியாமல் ‘‘ஹாக்” என்று வாயைப் பிளந்து பிரமை பிடித்து நின்று இருந்தார்கள். அந்த சமயம் கொதித்து எழுந்தார் பண்டிதர். ‘‘என்ன ஜெய தேவரே, நாடக நடிகையை எல்லாம் கூட்டி வந்து நன்றாக நாடகமாடுகிறீர்களே? உங்கள் நாடகத்தை இந்த மக்கள் நம்பலாம், நான் நம்ப மாட்டேன்’’ என்று கர்ஜித்தபடியே மீண்டும் கங்கையில் அஷ்டபதி அடங்கிய ஓலையை வீச எத்தனித்தார்.

அப்போது கிண்கிணி மணி சத்தம் சப்திக்க, நீல மேக வண்ணத்தில் ஒரு தெய்வீகக் கை திடீரென்று தோன்றி, அந்த பண்டிதரின் கைகளைப் பற்றி தடுத்தது. ‘‘கைலாச பதே! போதும் உங்கள் விளையாட்டு! ஜெயதேவனை சோதித்தது போதும்! அவனது அஷ்டபதியை நான் மனப் பூர்வமாக ஏற்கிறேன். எனது அடியார்கள், எனக்கு அடியவர்கள் என்று சொல்கிறார்கள். உண்மையில் என் அடியவருக்கு நான் அடியவன். இதை நீங்கள் அறிய மாட்டீர்களா? ஏன் இந்த விபரீத விளையாட்டு?’’ செந்தேனைப் பழிக்கும் கம்பீரக் குரலில் கேட்டான் மாலவன்.

அனைவரது முன்னேயும் சங்கு சக்கர கதாதாரியாக வந்தே விட்டான் அவன். அவனது அற்புத திரு உருவை கண்டதும் அனைவரும் கண்ணன் புகழ் பாடி அவன் பாதம் பணிந்தார்கள். கண்ணன் இப்படி பேசிய அடுத்த நொடி அந்த பண்டிதர் அங்கிருந்து மறைந்தார். அவர் மறைந்த இடத்தில், விடையேறி, விரிசடையோடு, உமை ஒரு பங்கன் காட்சி தந்தான். ஒரே நேரத்தில் அரியையும், அரனையும் கண்டு தரிசித்து ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார் ஜெயதேவர். தான் செய்த பாக்கியம் என்ன என்று விளங்காமல் திணறினார். இருவரையும் போற்றி வணங்கினார். திருமாலும், முக்கண்ணனும், ஜெயதேவரைப்போற்றி ஆசிர்வதித்து மறைந்தார்கள்.

இப்படி அரியும் அரனும் சேர்ந்து அங்கீகரித்த பெருமை, ஜெயதேவர் இயற்றிய அஷ்டபதியையே சேரும். வேறு எந்த நூலும் இப்படி ஒரு மேன்மையைப் பெற்றது இல்லை என்றால் அது மிகையல்ல. இப்படி பெரும் பெருமை வாய்ந்த கீத கோவிந்தத்தை பாடி, கோவிந்தன் திருவடியை அடைவோம்.

ஜி.மகேஷ்

The post ஈசன் உவக்கும் கீத கோவிந்தம்! appeared first on Dinakaran.

Related Stories: