ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது அப்பல்லோவில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள், சந்தேகங்கள் : சிபிஐ விசாரணை கோரி மனு!!

சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5ம் தேதி இரவு மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம், புலன் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகவும் உணவு எடுத்துக் கொண்டதாகவும் அறிக்கைகள் வெளியிட்ட நிலையில், திடீரென அவர் உடல்நிலை மோசமடைந்து மரணம் அடைந்ததாக முரணான அறிக்கை வெளியாகியது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாத சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா மருத்துவமனையில் செயற்கை சுவாசம் பெற்று இருந்த காலத்தில், அதிகாரிகள், அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடந்தாக அறிவிப்புகள் வெளியாகின. இது எவ்வாறு சாத்தியம். அதே போல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை மருத்துவமனைக்குள் அனுமதிக்காதது ஏன்?. 7 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் சந்தேகம் நீடிப்பதால் அது குறித்து உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அடுத்த 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது அப்பல்லோவில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள், சந்தேகங்கள் : சிபிஐ விசாரணை கோரி மனு!! appeared first on Dinakaran.

Related Stories: