ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல்..!!

மதுரை: போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். கரூரில் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில் 7பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த முன்ஜாமீன் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே கடந்த மாதம் 14ம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அதே நாளில் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் நகர காவல்நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் உள்ளிட்ட 13பேர் தன்னை மிரட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் சொத்துக்களை அபகரித்து விட்டதாக புகார் தெரிவித்தார். இந்த புகார் வாங்கல் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22ம் தேதி 13பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மற்றும் இடைக்கால ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் ஆகியோர் இந்த வழக்கிற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கில் தங்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

The post ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: