மதுரை: மதுரை ஆவின் நிறுவனத்தில் நேற்று ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 10 ஆயிரம் கால்நடை பண்ணைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தனியார் பால் பண்ணைகளைவிட ஆவின் நிறுவனம் நாள்தோறும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பால் கொள்முதல் 8.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆவினில் இணைக்கப்படாத கால்நடைகளுக்கும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடை தீவனம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் முகவர்களுக்கு பால்களை விநியோகம் செய்வதற்கு புதிய நடைமுறைகள் திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.
The post 10 ஆயிரம் கால்நடை பண்ணைகள் அமைக்க திட்டம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.