தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடிக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பம்புசெட் மோட்டார் உள்ள பகுதிகளில் இயந்திர நடவுப்பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பாசாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். வழக்கமாக குறுவை சாகுபடி ஜூன், ஜூலை மாதங்களில் சாகுபடி செய்யப்படும்.
இந்த பருவத்தில் குறுகிய கால ரகங்கள் அதாவது 100 முதல் 120 நாட்கள் வரையிலான பயிர்கள் சாகுபடி செய்யப்படும். இவ்வாறு நடவு செய்யப்படும் பயிர்கள் அக்டோபர், நவம்பர் காலங்களில் அறுவடை செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக மேட்டூர் அணை இதுவரை திறக்கவில்லை. கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத நிலையிலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் அணை திறக்கவில்லை. இதனால் ஆழ்துளை கிணறு மூலம் பம்புசெட் மோட்டார் உள்ள பகுதிகளில் மட்டும் சாகுபடி பணிகள் நடை பெற்று வருகின்றன. அதன்படி முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி, குறுவை என தஞ்சை மாவட்டத்தில் 82 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரப்பளவு சாகுபடி நடைபெறும். கடந்த ஆண்டு 1 லட்சத்து 16 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
ஏற்கனவே பெரும்பாலான பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு சம்பா அறுவடை செய்த வயல்களில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டது. அவை அறுவடை செய்யப்பட்ட இடங்களில் தற்போது உழவு செய்து குறுவை நெல் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அடுத்து சூலியகோட்டை பகுதியில் பம்புசெட் மூலம் பாசன பகுதிகளில் எந்திரன் மூலம் நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏற்கனவே விவசாயிகள் பாய் நாற்றங்கால் தயார் செய்து வைத்திருந்தனர். உளுந்து அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உழவு செய்து தற்போது இயந்திரங்கள் மூலம் நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
The post தஞ்சையில் குறுவை சாகுபடி இயந்திர நடவுப்பணிகளில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.