மஞ்சூர் : கிண்ணக்கொரை மேலூரில் ‘தெவ்வ திருவிழா’ பாரம்பரிய உடையுடன் படுகரின மக்களால் கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தமிழக கேரளம் எல்லையில் உள்ளது கிண்ணக்கொரை மேலூர் கிராமம். இப்பகுதியில் படுகரின மக்களின் குல தெய்வமான ஹெரோடையா கோயில் உள்ளது. ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் இந்த கோயிலில் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
இத்திருவிழாவை, ‘தெவ்வ ஹப்பா’ என குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டிற்கான தெவ்வ திருவிழா கடந்த இரு தினங்களுக்கு முன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய அம்சமாக அரிக்கட்டுதல் மற்றும் குல தெய்வத்திற்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஊர் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மேலூர், பிக்கட்டி, ஒசாட்டி, இரியசீகை, அப்பட்டி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பாரம்பரிய வெள்ளை உடைகளை உடுத்தி வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகரின மக்கள் காணிக்கை செலுத்தினர்.
தொடர்ந்து பருவம் தவறாமல் மழை பெய்யவும், விவசாயம் செழிக்க வேண்டி புதியதாக விளைந்த கோதுமை, திணை உள்ளிட்ட பயிர்களை குல தெய்வத்திற்கு படைத்து வழிபட்டார்கள். இதனையடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
The post கிண்ணக்கொரை மேலூரில் தெவ்வ திருவிழா appeared first on Dinakaran.