×
Saravana Stores

சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் இனி அபராதம் கிடையாது; பறிமுதல் மட்டுமே: 16ம் தேதி முதல் அமல் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருவள்ளூர், ஜூலை 13: சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் இனிமேல் அபராதம் கிடையாது. அவை பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூலிருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. அதேபோல் தலைநகர் திருவள்ளூர் வழியாக பள்ளி, கல்லூரி பேருந்துகளும்,  பெரும்புதூர் மற்றும் ஒரகடம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பேருந்துகள், வேன்கள், ஆட்டோக்கள், கார்கள் போன்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சாலைகளில் படுத்துக்கொண்டும், சுற்றித்திறியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில் சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டாலோ, விவசாய நிலங்களை சேதப்படுத்தினாலோ அவற்றினை உள்ளாட்சி மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு கடும் அபரதாதம் விதிக்கப்படும். மேலும், எச்சரிக்கை மீறி, செயல்பட்டால் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கோசாலையில் ஒப்படைக்கப்படும் என கலெக்டர் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையினை திருவள்ளூர் நகராட்சியில் கால்நடைகளை வளர்ப்போர் மீறி வருகின்றனர்.

இதனையடுத்து, மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில், நகராட்சி ஆணையர் தலைமையில் ஊழியர்கள், ஏற்கனவே 219 மாடுகளை பிடித்து, ₹1,12,000 அபராதம் விதித்துள்ளனர். மேலும், நகராட்சி முழுதும், சுகாதார ஊழியர்கள் கால்நடை உரிமையாளர்களுக்கு, கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும். சாலையில் சுற்றித்திரிய விடக்கூடாது. அப்படி, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும். அவற்றினை திருப்பி ஒப்படைக்க முடியாது. மேலும் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டு, பொது ஏலம் விடப்படும்’ என எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு கூறியதாவது: திருவள்ளூர் நகராட்சியில் கால்நடைகளை வளர்ப்போர், நகர சாலைகளில், போக்குவரத்துக்கு இடையூறாக அவற்றினை சுற்றித்திரிய விடக்கூடாது. இதுவரை, கால்நடைகளை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. கால்நடைகளை வளர்ப்போர் இனிமேல் சாலைகளில் கால்நடைகளை சுற்றித் திரியவிட்டால், மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் வருகிற 16ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் படுத்துக்கிடக்கும் கால்நடைகள் மற்றும் சுற்றி திரியும் கால்நடைகள் அனைத்தையும் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும். மேலும் உரிமையாளர்களிடம் கால்நடைகளை திருப்பி ஒப்படைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் இனி அபராதம் கிடையாது; பறிமுதல் மட்டுமே: 16ம் தேதி முதல் அமல் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Municipal ,Commissioner ,Tiruvallur ,Chennai ,Chengalpattu ,Kanchipuram ,Vellore ,Tiruthani ,Ponneri ,16th Municipal ,
× RELATED “ரங்கநாதன் தெருவை சுற்றிலும் 66...