மதுரை, ஜூலை 12:மதுரையை அடுத்த ஒத்தக்கடை காந்தி நகர் பகுதியில் 40 ஆண்டுகள் பழமையான மந்தை அம்மன், ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நடப்பாண்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள், ஒரு மாதங்களுக்கு முன் துவங்கின. இதையடுத்து நேற்று காலை கும்பாபிஷேகத்திற்கான முதல் கால பூஜைகள் நடந்தன. மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடந்தன.
இதையடுத்து சுவாமிக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பிலால் ராஜா தலைமையில் இஸ்லாமியர்கள், 33 தட்டுக்கள் கொண்ட சீர்வரிசை பொருட்களை கோயில் நிர்வாக குழு தலைவரும், ஒத்தக்கடை ஊராட்சியின் 12வது வார்டு திமுக கவுன்சிலருமான ராஜசேகரிடம் வழங்கினர். சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக வழங்கப்பட்ட, இந்த சீர்வரிசையில் மா, பலா, வாழை, சுவாமிக்கான சித்தாடைகள், மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்டவை இருந்தன. இது பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
The post கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள் appeared first on Dinakaran.