கள்ளக்குறிச்சி, ஜூலை 12: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் தம்பதியின் உறவினர்கள் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சாராயம் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இருவரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 229 பேர். அதில் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை 66 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் இதுவரை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், முக்கிய குற்றவாளியான புதுவை மடுகரை மாதேஷ் உள்பட 22 பேர்களை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 11 பேர்களை சிபிசிஐடி போலீசார் 3 நாள் காவல் விசாரணைக்கு எடுத்தனர். அதில் சாராய வியாபாரி கோவிந்தராஜிடம் விசாரணை மேற்கொண்டதில், தன்னுடன் சேர்ந்து விஷ சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை தெரிவித்துள்ளார். அதாவது கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் பரமசிவம்(43). இவர் சாராய வியாபாரி கண்ணுக்குடியின் மைத்தனார் ஆவார். மற்றொருவர் கருணாபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் முருகேசன் (36). இவர் கண்ணுக்குட்டியின் சித்தாப்பா ஆவார்.
இவர் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்தவர். சாராய வியாபாரியான கோவிந்தராஜி கள்ளச் சாராயம் விற்க, இருவரும் உடந்தையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் உயிரிழப்புக்குபின் மேற்கண்ட சாராய வியாபாரிகள் இருவரும் கள்ளக்குறிச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் சிபிசிஐடி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பரமசிவம் மற்றும் முருகேசனை போலீஸ் காவல் விசாரணைக்கு எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், பரமசிவம் மற்றும் முருகேசன் இருவரையும் ஒருநாள் காவலில் விசாரிக்க நீதிபதி ஸ்ரீராம் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் இருந்த 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் தங்களது வழக்கில் கைது செய்து, அவர்களை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர். பின்னர் அவர்களை உடனடியாக காவல் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இன்று விசாரணையை முடித்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். விஷசாராய விவகாரத்தில் ஏற்கனவே 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைதாகி இருப்பதால் கைது எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
The post தம்பதியின் உறவினர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.