பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், பாலீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(63), விவசாயி. இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில், மகன் வெங்கடேசன் (26), சொந்தமாக வேன் வைத்து டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். ராஜேந்திரனுக்கு சொந்தமாக 4 சென்ட் நிலம் உள்ளது. அதனை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு வெங்கடேசன் வற்புறுத்தி வந்துள்ளார். அதனை ஏற்க மறுத்த ராஜேந்திரன், சொத்தில் எனது 3 மகள்களுக்கும் பங்கு உள்ளது. எனவே, அனைவரும் சரிசமமாக பரித்து கொடுப்பதாக கூறியுள்ளார். சொத்து முழுவதையும் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டு சந்தோஷமாக வாழலாம், என்று திட்டமிட்ட வெங்கடேசனின் ஆசை நிறைவேறாமல் போனதால் தந்தை ராஜேந்திரன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இது தொடர்பாக தந்தை ராஜேந்திரனுக்கும், மகன் வெங்கடேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே, ராஜேந்திரன் 4 சென்ட் நிலத்தை தனது வாரிசுகளுக்கு சமமாக பிரித்து கொடுக்க முடிவு செய்தார். அதற்காக நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே, சொத்து பிரச்னையில் கடும் கோபத்தில் இருந்த வெங்கடேசன், தனது வேனை வேகமாக ஓட்டிச் சென்று நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரனின் மீது மோதினார். இதில், ராஜேந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர், வேனில் இருந்து கீழே குதித்த வெங்கடேசன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து தலைமறைவான வெங்கடேசனை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து பிரச்னையில் தந்தையை மகனே வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post சொத்து பிரச்னையில் தந்தையை வேன் ஏற்றி கொன்ற மகன்: பூந்தமல்லியில் பரபரப்பு appeared first on Dinakaran.