செங்கல்பட்டு: திருப்போரூர் கூட்ரோடு அருகே மேலேரிப்பாக்கம் பகுதியில் அட்டை கம்பெனி இயங்கி வருகிறது. செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழைய இரும்பு வியாபாரிகள் ஆங்காங்கே சேகரிக்கப்படும் பழைய அட்டைப் பெட்டிகளை சேகரித்து அட்டை கம்பெனி தொழிற்சாலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், மேலேரிப்பாக்கம் அட்டை கம்பெனியில் இருந்து லாரி ஒன்று அட்டை பெட்டிகள் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. லாரியை கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி (29) என்பவர் ஓட்டிச் சென்றார்.
லாரியில் அதிக பாரத்துடன் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. செங்கல்பட்டு வேம்பாக்கம் பகுதியில் வந்தபோது, லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், முரளி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இந்த விபத்து காரணமாக மதுராந்தகம் – செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்திற்கு இடையூறாக கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலமாக மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post அட்டை பெட்டிகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.