நன்றி குங்குமம் தோழி
கப்பலில் மிதந்து கொண்டே சாப்பிட வேண்டும்… எக்ஸாட்டிக் இடங்களில் பிறந்த நாள் கொண்டாடணும்… இப்படி பலருக்கு பலவிதமான பக்கெட் லிஸ்டுகள் இருக்கும். அந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளது வானில் பறந்து கொண்டே சாப்பிடுவது. இதில் உணவு சாப்பிடுவது மட்டுமில்லாமல் பிறந்தநாள், திருமண நாள், நண்பர்களுடன் என அந்த ஒரு மணி நேரத்தினை பறந்து கொண்டே செலவிடலாம். அதுவும் ஒரு அடி இரண்டு அடியில்லை.
160 அடி உயரத்தில். கேட்கும் போதே பிரமிப்பாக இருக்கிறதா? ஆச்சரியம் இல்லை உண்மைதான். ஒரு கிரேன் மூலமாக 160 அடி உயரத்தில் ஒரு பக்கம் நகரத்தின் அழகையும், மறுபக்கம் கடலின் பிரமிப்பையும் கண்டுகளிக்கலாம். இதனை சென்னையில் அறிமுகம் செய்துள்ளனர் சகோதரர்களான வினோத் மற்றும் பரத். இதுகுறித்து வி.ஜி.பி குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவரான பரத் விவரித்தார்.
‘‘என் அப்பா, பெரியப்பா என அவர்களின் உழைப்பில் உருவானதுதான் வி.ஜிபி குழுமம். தவணை முறையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம் என்ற திட்டத்தை நாங்கதான் அறிமுகம் செய்தோம். அதன் பிறகு ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு பூங்கா என எங்களின் பிசினஸ் வளர்ந்தது. சென்னைக்கு வருபவர்கள், சென்னையில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் செல்லக்கூடிய ஒரு தளம் எங்களின் பொழுதுபோக்கு பூங்கா. இங்கு ஏற்கனவே பலவித விளையாட்டுகள் உள்ளது. அதே போல் இல்லாமல், வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வர விரும்பினோம். அதன் அடிப்படையில் வி.ஜி.பி வண்டர் வேர்ல்டில் அமைக்கப்பட்டதுதான் இந்த ‘ஃபிளை டைனிங்’.
முதலில் இங்கு என்ன மாதிரியான கேளிக்கை விளையாட்டுகளை அமைக்கலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டோம். அந்த சமயத்தில்தான் ஃபிளை டைனிங் நிறுவனம் குறித்து எங்களுக்கு தெரிய வந்தது. இவங்க இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளிலும் இதனை அமைத்துள்ளனர். சென்னைக்கு இது புதுசு என்பதால், இதனை இங்கு அமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. இவர்கள் பிரான்சைசி முறையில் இதனை அமைத்து தருகிறார்கள். மேலும் அதற்கான பராமரிப்பு முழுதும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
ஒரு பிரமாண்டமான கிரேன் அதில் 25 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டு, தரையில் இருந்து 160 அடி உயரத்தில் தூக்கி நிறுத்துவார்கள். அவ்வளவு உயரத்தில் அமர்ந்து சாப்பிடும் போது அந்த உணர்வே தனி. இந்த கிரேன் சுமார் 160 டன் எடையினை தூக்கக்கூடியது. ஆனால் பார்வையாளர்கள் 25 பேர், பணியாட்கள் 5 பேர் என 30 நபர்கள் மற்றும் பொருத்தப்பட்டுள்ள சேரின் எடை என்று கணக்கிட்டால் சுமார் எட்டு டன் எடைதான் இருக்கும். இந்த கிரேன் முழுக்க முழுக்க அதிநவீன ஜெர்மன் டெக்னாலஜி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் இதில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோமேட்டிக் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஒவ்வொருவரின் எடை மற்றும் காற்றின் வேகம் அனைத்தும் கணக்கிடப்படும். இதில் காற்றின் வேகத்தினை ஒரு குறிப்பிட்ட அளவு கணித்து வைத்துள்ளனர். அந்த அளவினை தாண்டினால், கிரேன் இயங்கவே இயங்காது. அடுத்து சீட்டின் அமைப்பு, பார்க்க அந்தரத்தில் தொங்குவது போல் காட்சியளிக்கும். ஆனால் அதற்கான பாதுகாப்பு அமைப்பு மிகவும் கவனமாக பொருத்தப்பட்டுள்ளது. அதற்கென தனிப்பட்ட நபர்களை நியமித்து இருக்கிறோம்.
அவர்களால் மட்டுமே சீட் பெல்டினை பொருத்தவோ, கழட்டவோ முடியும். மேலும் பார்வையாளர்களின் பாதுகாப்பு அவசியம் என்பதால், அவர்களால் எந்த முறையிலும் சீட் பெல்டினை இயக்க முடியாத வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து கிரேன் பொருத்தப்பட்டு இருக்கும் முறை. இதனை மண்ணில் நிறுத்தி வைக்கவில்லை. நான்கு ஸ்டீல் பீம்கள் கொண்டு பொருத்தி இருக்கிறோம். வீடு கட்டும்போது, அதன் அடித்தளம் உறுதியாக இருக்க வேண்டும். அதே போல்தான் இதனை மிகவும் ஸ்ட்ராங்காக பொருத்தி இருக்கிறோம். கிரேனில் இருந்து நான்கு இரும்புக் கம்பிகள் கொண்டு இருக்கை அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரும்புக் கம்பிகளும் எட்டு டன் எடையினை தாங்கக்கூடியது.
முதலில் இதனை அமைக்க முடிவு செய்த பிறகு, அதற்கான இடம் மற்றும் கடற்கரை அருகே என்பதால் காற்றின் வேகம் என அனைத்தையும் ஆய்வு செய்தோம். கிட்டத்தட்ட ஒரு மாதம் இதற்கான டிரையல் நடத்திய பிறகுதான் மக்களுக்கான பயன்பாட்டிற்கு அனுமதித்தோம். தற்போது மாலை, இரவு என மூன்று பேக்கேஜ் ஒரு மணி நேரம் இயக்குகிறோம். கூடிய விரைவில் விடியற் காலையில் இரண்டு பேக்கேஜ் கொண்டு வர இருக்கிறோம். இங்கு இதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான டிராம்போலின் பார்க்கும் அமைத்திருக்கிறோம். அடுத்து இதில் மேலும் புதுமையான விளையாட்டுகள் என்ன கொண்டு வரலாம் என்று நான், அண்ணா மற்றும் அப்பா ஆலோசித்து வருகிறோம்’’ என்றார் பரத்.
வி.ஜி.செல்வராஜ் (வி.ஜி.பி குழுமத்தின் தலைவர்)
‘‘இது இந்தியாவில் பல இடங்களில் உள்ளது என்றாலும் தமிழகத்திற்கு புதுசு. இதற்கான பிரைன் என் இரு மகன்கள்தான். குறிப்பாக மூத்தவரான வினோத்… அவர் உலகம் சுற்றுபவர். உலகின் தீம் பார்க்கில் உள்ள புதுமையான விஷயங்களை கொண்டு வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அதன்படிதான் எங்க குடும்பச் சொத்தான மூன்று ஏக்கர் நிலத்தில் அதனை நிறுவிஉள்ளோம். ஏற்கனவே எங்களின் பொழுதுபோக்கு பார்க் ஒன்று இருப்பதால், அதில் இல்லாத புதுமையான விளையாட்டுகளை இதில் அமைத்திருக்கிறோம்.
வானத்தில் பறந்து கொண்டே சாப்பிடுவது, டிராம்போலின் பார்க், சிப்லைன் சைக்கிளின், சாகச விளையாட்டுகள் என ஒவ்வொன்றும் வித்தியாசமாக 20 ஆயிரம் சதுர அடியில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சிட்டியில் ஒரு சில இடங்களில் டிராம்போலின் பார்க் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களின் ஒரு நாள் முழுதும் இங்கு குடும்பமாக வந்து பொழுது கழிப்பதற்கு ஏற்ப அமைத்திருக்கிறோம். சென்னையில் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளதால், அதே போல் இல்லாமல் இங்குள்ள இடத்தில் வேற என்ன புதுமையாக அமைக்க முடியும் என்பதைப் பார்த்து அதற்கு ஏற்ப செயல்படுத்த இருக்கிறோம்.’’
தொகுப்பு: ஷம்ரிதி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
The post வானத்தில் பறந்து கொண்டே பர்த் டே கொண்டாடலாம்! appeared first on Dinakaran.