×
Saravana Stores

சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற ₹1.11 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: 2 கடத்தல் குருவிகள் அதிரடி கைது; தங்கக் கட்டிகளாக மாற்றி வர முயற்சி

மீனம்பாக்கம், ஜூலை 11: சென்னையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்துக்கு கடத்த முயன்ற ₹1.11 கோடி மதிப்பு அமெரிக்க டாலர், சவுதி ரியால் வெளிநாட்டு பணம், விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் பயணிகள் 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இது, ஹவாலா பணம் என்றும், வெளிநாட்டுக்கு பணத்தை கடத்தி சென்று, அங்கிருந்து தங்கக் கட்டிகளாக சென்னைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட தயாராகிக்கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளையும், பயணிகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக்கொண்டு இருந்தனர்.

அந்த நேரத்தில், சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள், சுற்றுலாப் பயணிகள் விசாவில் தாய்லாந்துக்கு செல்வதற்காக வந்தனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த நேரத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் அந்த இரு பயணிகளையும், தற்போது அமலுக்கு வந்துள்ள பிஎஸ்ஏ புதிய சட்ட விதிகளின்படி இரு பயணிகளின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது, இவர்கள் பெருமளவு ஹவாலா பணத்தை வெளிநாட்டுக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து, இரு பயணிகளின் சூட்கேஸ்களும் விமானத்தில் ஏற்றுவதற்கு கன்வேயர் பெல்ட் மூலமாக சென்று கொண்டு இருந்ததை தடுத்து நிறுத்தி சூட்கேஸ்களை திறந்து சோதனை நடத்தினர். அதில் ரகசிய அறைகளுக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு பணம் பெருமளவு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் இருவரின் பயணங்களையும் ரத்து செய்த சுங்க அதிகாரிகள், சூட்கேசுகளில் ரகசிய அறைகளில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பணக்கட்டுகளை எடுத்து எண்ணிப் பார்த்தபோது, ₹1.11 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர், சவுதி ரியால் இருந்தது.

அவற்றை பறிமுதல் செய்து, பயணிகள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். அப்போது இந்த 2 பயணிகளும், ஹவாலா பணத்தை வெளிநாட்டிற்கு கடத்துவது தெரிய வந்தது. இவர்கள் கடத்தல் குருவிகள். ஹவாலா பணத்தை இவர்களிடம் வேறு யாரோ ஒருவர் கொடுத்து அனுப்பியதும் தெரிந்தது. இதையடுத்து ஹவாலா பணத்தை வெளிநாட்டுக்கு கொடுத்து அனுப்பிய மர்ம ஆசாமி யார் என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இதேபோல், ஹவாலா பணத்தை வெளிநாட்டுக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து தங்கக் கட்டிகளாக இந்தியாவுக்கு கடத்தி வர திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்தது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ₹1.11 கோடி மதிப்புடைய ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் குருவிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற ₹1.11 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: 2 கடத்தல் குருவிகள் அதிரடி கைது; தங்கக் கட்டிகளாக மாற்றி வர முயற்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meenambakkam ,Saudi ,Thailand ,Dinakaran ,
× RELATED தீபாவளி மின் அலங்கார பணியின்போது 40 அடி...