தேனி : தேனி நகரில் உள்ள சாலைகளில் மாடுகள் சுதந்திரமாக சுற்றித்திரிவதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன. மாவட்ட தலைநகராக உள்ளதால் தேனியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதிதாக குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் முக்கியச் சாலைகளில் இறைச்சிக்கடைகள் ஆங்காங்கே உள்ளன. இக்கடைகளில் இருந்து சாலைகளில் எறியப்படும் கழிவு இறைச்சிகளை திண்பதற்காக ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் குவிந்து விடுகின்றன.
இதேபோல, சாலையோரத்தில் நகராட்சி நிர்வாகமே சேகரிக்கும் குப்பைகளை கொட்டி வைக்கும் பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. அப்போது இச்சாலைகளில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.நாய்கள் ஒருபுறம் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், சமீபகாலமாக தேனி நகராட்சிக்குட்பட்ட பொம்மையக்கவுண்டன்பட்டி, அல்லிநகரம் பகுதியில் உள்ள தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சாலைகளில் திரிந்து வருகின்றன.
சாலைகளின் நடுவே படுத்துக்கொள்வதும், சாலைகளில் வாகனங்களில் செல்வோரை மிரட்டுவதுமாக மாடுகள் உள்ளன. இச்சாலையில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் சென்று வரும் நிலையில், மாடுகள் சில நேரங்களில் மிரண்டு ஓடுவதால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இச்சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் ஒரு புறம் தெருநாய்களை சமாளித்திடவும், மற்றொரு புறம் சாலைகளில் சுற்றித் திரியும் தெருமாடுகளால் விபத்து ஏற்படுமோ என அச்சத்துடன் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தேனி-அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தினர், தெரு நாய்கள் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் தேனி நகரில் பொதுமக்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கும் வகையில் சுற்றித்திரியும் மாடுகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனவும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post தேனி நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.