எட்டயபுரம் : கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவி தொகையை பெறுவதற்கு உயிரோடு இருப்பதாக சான்று வாங்கி வருமாறு அலுவலர்கள் கட்டாயப்படுத்தி அலைக்கழிப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா வாலம்பட்டி ஆர்சி தெருவைச் சேர்ந்த கருப்பசாமியின் மனைவி அந்தோனியம்மாள் (70). இவரது கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவரது மூத்த மகனும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டனர். மற்றொரு இளைய மகன் கேரளாவில் வசித்து வருகிறார். இதனால் வாலம்பட்டியில் தனியாக இருந்து வந்த அந்தோனியம்மாள், கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் முதியோர் உதவிதொகை பெற்று வாழ்ந்து வந்தார்.
இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் வசித்து வரும் இளையமகனை பார்க்கும்பொருட்டு அந்தோனியம்மாள் அங்கு புறப்பட்டுச் சென்றநிலையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டதாம். குறிப்பாக கடந்த 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டதாலும் வயது முதுமையால் வேலைக்கு செல்லமுடியாத வறுமை நிலையாலும் சாப்பாட்டிற்கே வழியின்றி திண்டாடி வருகிறார். அத்துடன் கழுத்தில் ஏற்பட்ட கட்டியோடு நடக்க கூட முடியாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவிதொகையை வழங்க வேண்டி எட்டயபுரம் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடையாய் நடந்தும் பயனில்லை.
சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஏதாவது ஒருகாரணத்தை கூறி அவரை அனுப்பி விடுகின்றனர். முதியோர் உதவிதொகை பெற்றால்தான் வாழ்க்கை நடத்த முடியும் என்ற நிலையில் நேற்றும் எட்டயபுரம் தாலுகா அலுவலகம் வந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். தினம்தோறும் ஏதாவது காரணம் சொல்லும் அதிகாரிகள் நேற்று அந்தோனியம்மாளிடம் வாலம்பட்டி விஏஓவிடம் உயிருடன் இருப்பதாக சான்று வரச்சொல்லி அனுப்பி விட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் அந்த மூதாட்டி தள்ளாடியபடி திரும்பி சென்றார். வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
வங்கியில் சான்று வாங்கி வந்தால் நடவடிக்கை
இதனிடையே இதுகுறித்து எட்டயபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மல்லிகாவிடம் ேகட்டபோது கூறுகையில் ‘‘அந்தோனியம்மாள் ஏற்கனவே முதியோர் உதவித்தொகை பெற்று வந்த நிலையில் கேரளாவில் வசிக்கும் தனது 2வது மகனை பார்க்கும்பொருட்டு அவரது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அந்நேரத்தில் முதியோர் உதவிதொகை நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தோனியம்மாள் கேரளாவில் இருந்து திரும்பி வந்தபோது முதியோர் உதவி பெறமுடியவில்லை .
இந்நிலையில் மீண்டும் முதியோர் உதவிதொகை கேட்டு எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அவர் எத்தனை மாதம் உதவித்தொகை பெறவில்லை என வங்கியில் சான்று வாங்கி வந்தால் அவருக்கு புதிதாக முதியோர் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.
The post நிறுத்தப்பட்ட முதியோர் உதவி தொகையை பெற எட்டயபுரம் தாலுகா அலுவலகத்திற்கு 6 மாதமாக மூதாட்டி அலைக்கழிப்பு appeared first on Dinakaran.