காயல்பட்டினத்தில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற வாலிபர்கள் இருவர் கைது

*பைக் பறிமுதல், வங்கி கணக்கு முடக்கம்

ஆறுமுகநேரி : காயல்பட்டினத்தில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற வாலிபர்கள் இருவரை கைதுசெய்த போலீசார், இருவரிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரது வங்கிக் கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. காயல்பட்டினம் அருணாசலபுரம் காட்டுப் பகுதியில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக ஆறுமுகநேரி எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆறுமுகநேரி எஸ்.ஐ. சுகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு பைக்கில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாலிபர்கள் இருவர் நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து இருவரையும் சோதனையிட்டபோது இருவரும் 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததும் மேலும் அவற்றை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் வசித்துவரும் ஷேக் முகமது நாசரின் மகன் செய்யது முகமது கோயா (26) மற்றும் சதுக்கை தெருவைச் சேர்ந்த கமாலின் மகன் அபூபக்கர் சித்திக் (38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், இருவரையும் கைதுசெய்தனர். மேலும் இருவரிடம் இருந்து செல்போன், பைக், விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது.

The post காயல்பட்டினத்தில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற வாலிபர்கள் இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: