செங்கல்பட்டு, ஜூலை 10: செங்கல்பட்டு அருகே குழந்தைகளை கடத்திய வழக்கில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயே இதில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கடத்தப்பட்ட குழந்தைகள் நெமிலியில் மீட்கப்பட்டனர். இதில் கள்ளக்காதலன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலன் (35), ஆட்டோ டிரைவர். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த கிளக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி (31). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது மகளும், 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது மகனும் உள்ளனர். இருவரும் ஒழலூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
ஆர்த்தி செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் அசிஸ்டென்ட்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆர்த்தி தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். வேலன் தனது குழந்தைகளுடன் ஒழலூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். வேலன் தனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, நான் அல்லது எனது தாய்-தந்தை வந்தால் மட்டுமே குழந்தைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், எனது மனைவி அல்லது உறவினர் யார் வந்தாலும் அனுப்பக் கூடாது என்று பள்ளி நிர்வாகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வேலனின் மகளும், மகனும் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். மதிய உணவு இடைவேளையின்போது பள்ளிக்கு வந்த பெண் ஒருவர், நான் வேலனின் தங்கை என்றும், பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்றும் ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்த பள்ளி தலைமையாசிரியை 2 குழந்தைகளையும் அழைத்து வந்து அப்பெண்ணிடம் காண்பித்தார். அப்போது, அந்த பெண் செல்போன் மூலமாக குழந்தைகளின் தாயிடம் பேச வைத்தார். இதில், ஆர்த்தி தன்னுடன் வந்துவிடுமாறு குழந்தைகளிடம் பேசினார். அதற்கு குழந்தைகள் தந்தையை விட்டு பிரிய மாட்டோம் என்று கூறினர்.
இதையடுத்து அந்தப் பெண் வலுக்கட்டாயமாக 2 குழந்தைகளையும் காரில் ஏற்றி கடத்திச் சென்றார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளித் தலைமையாசிரியை எழிலரசி, குழந்தைகள் மாயமானதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கும், குழந்தைகளின் தந்தை வேலனுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெண் ஒருவர் குழந்தைகளை காரில் ஏற்றிச் சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு டிஎஸ்பி புகழேந்தி கணேசன், மதுராந்தகம் டிஎஸ்பி சிவசக்தி ஆகியோர் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பாணாவரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகளை அடைத்து வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அப்பகுதிக்குச் சென்று குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். மேலும், குழந்தைகளை கடத்திய தாய் ஆர்த்தி, கோகுல் (36), சரவணன் (36), உறவுக்கார பெண் மற்றும் 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 6 பேரை செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. ஆர்த்திக்கும், சென்னையைச் சேர்ந்த கோகுலுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கோகுலுக்கு ஏற்கனவே கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாத காரணத்தால் கோகுலை விட்டு அந்த பெண் பிரிந்து சென்றுவிட்டார். இதனிடையே செங்கல்பட்டில் உள்ள தனியார் பேருந்து ஓட்டுநராக கோகுல் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது, செங்கல்பட்டு அடுத்த நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கோகுல் 2வது திருமணம் செய்துகொண்டார்.
மணப்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். கோகுலின் அக்கா குடும்பத்தினர் கிளக்காடி பகுதியில் வசித்து வந்த நிலையில், கோகுல் அடிக்கடி அங்கு சென்று வந்தார். அப்போது கோகுலுக்கும், ஆர்த்திக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதன் காரணமாக வேலன் மற்றும் 2 குழந்தைகளும் தனக்கு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு ஆர்த்தி தனது தாய் வீட்டில் தங்கியிருந்தபடி கோகுலுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து ஆர்த்தி மற்றும் கள்ளக்காதலன் கோகுல் ஆகிய இருவரும் திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொண்டு பாணாவரம் பகுதியில் உள்ள, கோகுலின் நண்பர் சரவணன் என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், குழந்தைகளை பள்ளியில் இருந்து கடத்திச் சென்ற வழக்கில் ஆர்த்தியின் கள்ளக்காதலன் கோகுல், அவரது நண்பர் சரவணன் இருவர் மீது செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் கடத்தலுக்கு உதவிய உறவினர் பெண்ணிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குழந்தைகளுடன் வாழ முடியாத காதலி குறையை தீர்க்க கடத்தல்
ஆர்த்தி செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்தபோது, தினமும் தனியார் பஸ்சில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பஸ் டிரைவரான கோகுல்ராஜ்(34) என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் வேலனுக்கு தெரியவந்து, தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன் கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்த ஆர்த்தி, திருமணமாகாத கோகுல்ராஜூடன் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே பொன்னப்பந்தாங்கல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். கோகுல்ராஜ் பனப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெமிலி அடுத்த புன்னை கிராமத்திற்கு சென்று வாடகை வீட்டில் வசிக்க தொடங்கினர். ஆனால் குழந்தைகளுடன் வாழ முடியவில்லையே என ஆர்த்தி அடிக்கடி வேதனையடைந்துள்ளார். இதனால் காதலியின் குறையை தீர்க்க கோகுல்ராஜ் குழந்தைகளை அழைத்து வர சம்மதித்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று குழந்தைகளை கடத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கார் பறிமுதல்
குழந்தைகளுடன் ஆர்த்தி, கோகுல்ராஜ் ஆகியோர் யாரும் அறிமுகமில்லாத இடத்திற்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி புன்னை பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறினர். தொடர்ந்து காவேரிப்பாக்கத்திற்கு சென்று குழந்தைகளை அழைத்து வர வேண்டும் எனக்கூறி, வாடகை காரில் டிரைவருடன் பள்ளிக்கு சென்று குழந்தைகளை கடத்தினர். இதனால் போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
The post செங்கல்பட்டு பள்ளியில் இருந்து குழந்தைகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயே கடத்தியது அம்பலம்: நெமிலியில் மீட்கப்பட்டனர் கள்ளக்காதலன், நண்பர் கைது appeared first on Dinakaran.