நன்றி குங்குமம் தோழி
கோவிட் அரக்கன் நம்மை ஆண்ட அந்த இரண்டு வருட காலத்திற்குப் பிறகு பெரும்பாலான குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது, வீட்டில் அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடுவது, பேசுவது, ஏன் சாப்பிடுவதையும் தவிர்த்துவிட்டார்கள். அதற்கு காரணம் செல்போன். இது இல்லாமல் எதுவுமே இயங்காது என்ற நிலைக்கு நாம் மெதுவாக தள்ளப்பட்டு வருகிறோம். ஒவ்வொருவரின் கையிலும் செல்போன் இல்லாமல் இருப்பதில்லை. குழந்தைகளுக்கு பொம்மைகளை விட அதில் உள்ள வீடியோக்கள் மற்றும் விளையாட்டின் மேல் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு செல்போன் என்பது தனிப்பட்ட உலகமாகிவிட்டது. மறுபக்கம் செல்போனால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவே பல விளையாட்டு பொம்மை நிறுவனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் வகையில் பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளை அறிமுகம் செய்து வருகிறார்கள். இதன் மூலம் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும், கவனச்சிதறல்கள் குறையும், ஒரு விஷயத்தில் முழுமையாக ஈடுபட முடியும். ஒவ்வொரு வயதிற்கு ஏற்பவும், குழந்தைகளின் அறிவுத் திறன்களை அதிகரிக்கக்கூடிய வகையில் பல வித்தியாசமான மற்றும் சிந்திக்கக்கூடிய பொம்மைகள், விளையாட்டுகளை அறிமுகம் செய்துள்ளனர் பிரபல பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்களின் நிறுவனமான ஃபன்ஸ்கூல். இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்வன்த் இந்த நிறுவனம் ஆரம்பித்த காலம் முதல் அங்குள்ள விளையாட்டுப் பொருட்கள் குறித்தும் அதனால் குழந்தைகளின் மனநிலையில் ஏற்படும் மாற்றம் குறித்தும் விவரித்தார்.
‘‘ஃபன்ஸ்கூல் 1986ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1987ம் ஆண்டு முதல்தான் வணிக நிறுவனமாக செயல்பட துவங்கியது. ஆரம்பத்தில் அமெரிக்காவில் உள்ள பிரபல பொம்மை நிறுவனமான ஆஸ்ப்ரோ உடன் இணைந்து செயல்பட்டு வந்தது.எம்.ஆர்.எஃப் நிறுவனம் இதனை கைப்பற்றி கொண்ட நாள் முதல் இன்று வரை அதன் கீழ் ஃபன்ஸ்கூல் இயங்கி வருகிறது. BIS ஒழுங்குமுறைகள் கொண்டு வரப்பட்ட நாள் முதல் சீனாவில் இருந்து எந்த ஒரு பொருளும் அங்கீகரிக்கப்படாத காரணத்தால் அங்குள்ள பொம்மைகள் பெரிய அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதில்லை. அது இந்தியாவில் உள்ள பொம்மை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.
பொம்மைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் போது, அதன் விலை குறைவு என்பதால், அதனை எல்லோராலும் தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்க முடிகிறது. இதனால் இந்தியாவில் பல பொம்மை நிறுவனங்கள் தயாரிப்பினை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் பல வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களின் பொம்மைகளை அறிமுகம் செய்ய விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் வேலைவாய்ப்பினை அதிகரிக்க உதவும்.
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகளவில் பல நாடுகளில் விற்பனையில் உள்ளது. அதில் ஃப்ன் ஸ்கூல் பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் 33 நாடுகளில் விற்பனையாகிறது. மேலும் பொம்மைகளை கண்டுபிடிப்பவர்களுடன் நாங்க இணைந்து செயல்படுவதால், அதன் மூலம் உலகளாவிய தரத்தில் பொம்மைகளை தயாரிக்க முடிகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது வரும் காலத்தில் பலவித பொம்மைகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். அதற்கான வேலையிலும் ஈடுபட்டு வருகிறோம்.
நாங்க எல்லா விதமான விளையாட்டு பொருட்களையும் தயாரிக்கிறோம். போர்ட் கேம்ஸ், பசில்ஸ், கிளே விளையாட்டுகள், ஹாண்டிகிராப்ட்ஸ் விளையாட்டுகள், அனிமேஷன் கதாபாத்திரங்களின் பொம்மைகள்(சோட்டா பீம்) என பலவிதமான பொம்மைகளை நாங்க தயாரிக்கிறோம். எங்களிடம் பெரிய அளவில் எலக்ட்ரானிக் மற்றும் ரிமோட்கன்ட்ரோல் பொம்மைகள் இல்லை என்றாலும், வரும் காலத்தில் அதிலும் பல வித்தியாசமான விளையாட்டுகளையும் அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. போர்ட் கேம்கள் எங்களின் முக்கிய அடையாளம் என்றாலும், எங்களிடம் மற்ற விளையாட்டுப் பொருட்களும் உள்ளது’’ என்றவர் அவர்களின் தயாரிப்பில் உள்ள பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
‘‘நாங்க பொம்மைகளை ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப தயாரிக்கிறோம். அதற்கென தனிப்பட்ட பிராண்டும் அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு பிராண்டின் கீழ் பலதரப்பட்ட பொம்மைகள் அடங்கும். கிகில்ஸ் குழந்தைகள் முதல் ப்ரீஸ்கூல் வயதுள்ள குழந்தைகளுக்கு. அதில் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்ட ெபாம்மைகள் அடங்கும். அந்த வயதில் குழந்தைகள் விளையாடக்கூடிய பொம்மைகளைதான் நாங்க தருகிறோம். அதாவது, பிளாக்ஸ் இணைப்பது, வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் எழுத்துகளுக்கு ஏற்ப மேட்சிங் செய்வது போன்ற விளையாட்டுப் பொருட்கள் இருக்கும். மரத்தால் செய்யப்படும் பொம்மைகளுக்காகவே தனிப்பட்ட தொழிற்சாலை அமைத்திருக்கிறோம்.
பெரும்பாலான பெற்றோர்கள் மரப் பொம்மைகளைதான் விரும்புகிறார்கள். பண்டோ 3 முதல் 5 வயதினருக்கு. இதில் கிளே, பசில்ஸ், கார்ட்டூன் பொம்மைகள் என பல வகையான விளையாட்டுகள் அடங்கும். கிளே விளையாட்டில் பல வகைகள் இருப்பதால், அதன் மூலம் அவர்கள் விளையாட்டு முறையில் வடிவங்கள், வண்ணங்கள், எழுத்துக்களை எளிதாக கற்றுக்கொள்வார்கள். மேலும் கிளேயினை கைகள் கொண்டு தயாரிப்பதால் அவர்களின் மோட்டார் திறன்கள் மேம்படும். பசில் விளையாட்டு பெரும்பாலும் அறிவுத்திறன் சார்ந்து இருப்பதால் அவர்களின் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். இவை மட்டுமில்லாமல் எட்டு வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடக்கூடிய விளையாட்டும் உள்ளது.
அதில் குறிப்பாக நம்முடைய பாரம்பரிய விளையாட்டான பரமபதம், லூடோ, ஆடு புலி ஆட்டம், கில்லி தண்டால், செஸ் போன்ற விளையாட்டுகளும் உள்ளது. மேலும் கோகோ, கபடி, வெளியே விளையாடக்கூடிய விளையாட்டுகளை கூட போர்ட் கேம் வடிவில் அமைத்திருக்கிறோம். இவை தவிர பார்ட்டி விளையாட்டுகளும் உள்ளது. அதில் எண்களை ஒன்றாக இணைக்கும் ரம்மி விளையாட்டு, மரத்துண்டுகளை அழகாக அடுக்கும் விளையாட்டுகள் என எங்களிடம் 130க்கும் மேற்பட்ட பல விளையாட்டுகள் உள்ளன’’ என்ற ஜஸ்வன்த் வரும் காலத்தில் எலக்ட்ரானிக் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் விளையாட்டுகளிலும் பல புதுமையான விளையாட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
தொகுப்பு: ஷம்ரிதி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
The post குடும்பங்களை இணைக்கும் போர்ட் கேம்ஸ்! appeared first on Dinakaran.