பல்லாவரம் அருகே பரபரப்பு; பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: உயிர் தப்பிய வடமாநில தொழிலாளர்கள்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே பிளாஸ்டிக் குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறி பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. தீவிபத்தின்போது வெளியில் ஓடிவந்ததால் வடமாநில தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர். பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ஓய்யாளி அம்மன் கோயில் தெருவில் சுரேஷ் மற்றும் ஜெயராஜ் ஆகியோருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்காக குவித்து வைப்பது வழக்கம். இங்கு 20க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் குடோனில் பழைய பொருள் வைத்திருந்த பகுதியில் இருந்து குபுகுபுவென கரும்புகை வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். இதனால் அங்கு தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் அலறியடித்துகொண்டு வெளியில் ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.

தீ கட்டுக்குள் அடங்காமல் தொடர்ந்து எரிந்ததால் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடினர். முடியாததால் உதவிக்கு கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அசோக் நகர் மற்றும் மேடவாக்கம் ஆகிய பகுதியில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 9 வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தபோதிலும் பிளாஸ்டிக் குடோன் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீ விபத்தால் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. குடோன் அருகில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் சதிச்செயலா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது உரியநேரத்தில் வடமாநில தொழிலாளர்கள் வெளியில் ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்தால் நேற்று நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.

 

The post பல்லாவரம் அருகே பரபரப்பு; பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: உயிர் தப்பிய வடமாநில தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: