சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை

 

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 9: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் செங்குடி விலக்கில் இருந்து எட்டியதிடல் வழியாக முத்துப்பட்டிணம் செல்வதற்கு சாலை வசதி உள்ளது. இந்த சாலை மூலமாக போக்குவரத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் பயனடைகின்றனர்.

மேலும் இப்பகுதியல் மிகவும் பிரசித்தி பெற்ற புனித வனத்து அந்தோணியார் ஆலயம் முத்துப்பட்டிணத்தில் அமைந்துள்ளது. எனவே இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வளவு சிறப்புமிக்க திருத்தலம் அமைந்துள்ள இப்பகுதிக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ தூரத்திற்கு சாலையை பல ஆண்டுகளாக சீரமைப்பு செய்யாமல் குண்டும் குழியுமாக உள்ளன.  தார்ச்சாலையான இந்த சாலை லேசான சிறிய மழை பெய்தாலே ரோடு சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.

இதனால் இரவு நேரங்களில் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை முறையிட்டும் பலனில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போதைய திமுக ஆட்சியிலாவது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர் கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை விரைவில் சரி செய்து தர முன்வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: