நன்றி குங்குமம் தோழி
‘‘சிறுதானியங்கள் நம் வாழ்வின் அன்றாட உணவு மட்டுமில்லை, அது ஒரு மருந்தாகவும் நம் உடலில் வேலை செய்கின்றன’’ என்கிறார் ரெய்ஸா. இயற்கை விவசாயியான திருநெல்வேலியைச் சேர்ந்த ரெய்ஸா சிறுதானியங்களிலிருந்து விதவிதமான உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இதற்கென தனியாக ஒரு கடையை தொடங்கி அங்கும் ஆதரவற்ற பெண்களுக்கு வேலை கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தந்து மேலும் மிளிர்கிறார். இது குறித்து அவரிடம் பேசிய போது…
‘‘எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி. நான் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். படிப்பு முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டு இருந்தேன். அந்த காலகட்டத்தில்தான் என் வீட்டில் உள்ளவர்களுக்கு புதுவிதமான உடல் சார்ந்த பிரச்னை ஏற்பட்டது. அதனால் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர். என் அப்பா அந்த உபாதையால் இறந்தும் போயிட்டாங்க. அவரின் இழப்பு எனக்கு பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. அப்பா மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் உடலில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
அதற்கான சிகிச்சை பெற நாங்க அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போதுதான் தெரிந்தது, அவங்களுக்கு போதுமான ஊட்டச்சத்துகள் இல்லை என்பது. அவர்களை பரிசோதித்த மருத்துவர்களும் அதை உறுதி செய்தது மட்டுமில்லாமல், ஆரோக்கிய உணவுகளை கொடுக்க சொல்லி வலியுறுத்தினார்கள். நம் உணவுகளில் ஏன் ஊட்டச்சத்து இல்லைன்னு என்னை யோசிக்க வைத்தது. அதில் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே செயற்கை உரங்களை கொண்டு பயிர் செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் ஆரம்ப காலத்தில் நலிவு அடைந்து இருந்தாலும், இப்போது பலரும் அதனை பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்.
அதனால், நானும் அதையே செய்ய முடிவு செய்து, எங்க நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய தொடங்கினேன்’’ என்றவர் சிறுதானிய உணவுகள் குறித்து சொல்லத் தொடங்கினார். ‘‘2010 கால கட்டத்தில் ‘இயற்கை விவசாயமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்’ என்ற பெயரில் ஒரு திட்டம் ஒன்றை தொடங்கினார்கள். அதில் நான் கலந்து கொண்டு இயற்கை விவசாயம் குறித்து பேசினேன். அதனால் என்னை அந்த திட்டத்தின் நிர்வாகியாக நியமித்தாங்க. அந்த திட்டத்தில் என்னுடைய வேலையே விவசாயிகளை சந்தித்து, அவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வும் அதற்கான பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். அதன் மூலம் பல விவசாயிகளையும் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் காப்பகங்களுக்கு சென்று அங்கு அவர்கள் காய்கறி மற்றும் மூலிகைத்தோட்டம் அமைப்பது குறித்தும் சொல்லிக் கொடுத்தோம். இதன் மூலம் அவர்கள் இயற்கை முறையில் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கு பயிர் செய்து கொள்ளலாம். அந்த அனுபவம் இருந்ததால், எங்க நிலத்தில் நான் இயற்கை விவசாயம் செய்யத் துவங்கினேன். ஆனால் எனக்கு நிலத்தில் விளையும் பயிர்களை எங்கு எவ்வாறு விற்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
செயற்கை உரங்கள் கொண்டு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் இயற்கை உரங்களால் விளையும் பயிர்கள் இரண்டையும் சந்தைப்படுத்துவதில் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. அதனால் நான் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய முடிவு செய்தேன். முதலில் எனக்கு தெரிந்தவர்களிடம் நான் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்து விவரித்தேன். அவர்கள் என்னிடம் வாங்கத் தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து என்னை போல இயற்கை விவசாயம் செய்பவர்களின் தொடர்பு கிடைத்தது.
அவர்களை ஒருங்கிணைத்து திருநெல்வேலி இயற்கை விவசாயிகள் சங்கம் என்ற ஒன்றை அமைத்து, இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். இதனால் விவசாயிகள் நேரடியாக பயனடைந்தார்கள். மேலும் ரசாயன உரங்களை பயன்படுத்தி வந்தவர்களுக்கும் இயற்கை விவசாயம் பற்றி புரிய வைத்து அவர்களையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்றினோம். நேரடி விற்பனை என்பதால், பொருட்களும் நல்ல விலைக்கு கொடுக்க முடிந்தது. அதனால் பல விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறத் தொடங்கினார்கள்.
ஏற்கனவே காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக அவர்களை சந்தித்த போதுதான் அங்கு பலர் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை இல்லாமல் இருந்தனர். சிலர் சோர்வாக காணப்பட்டனர். இதற்கு முக்கிய காரணம் ரத்த சோகை. அவர்களின் உணவில் போதிய ஊட்டச்சத்து இல்லாததுதான் காரணம். இது குறித்து மதுரை தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் ஆம்லா பயிற்சி அளித்து வந்த பார்வதி அவர்களிடம் கருத்து கேட்ட போது, அவர் குழந்தைகளுக்கு எலும்புகள் வலுவடைய கால்சியம் சத்து அவசியம் என்றார். மேலும் அவை நுண்ணூட்டச்சத்துள்ள உணவுகளில் கிடைக்கும் என்றார்.
நுண்ணூட்டச்சத்து சிறுதானிய உணவுகளில் இருக்கிறது. அதை அப்படியே குழந்தைகள் சாப்பிட விரும்பமாட்டார்கள் என்பதால், சத்து மாவு, பிஸ்கெட், ஸ்நாக்ஸ் வடிவத்தில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் என்றார். அதன் செய்முறைகளையும் சொல்லியும் கொடுத்தார். அவரிடம் கற்றுக் கொண்டு சிறுதானியத்தில் அது போன்ற உணவுகளை தயார் செய்தது மட்டுமில்லாமல் காப்பக குழந்தைகளுக்கு சத்து மாவு பால் கொடுக்கத் தொடங்கினோம்.
குழந்தைகளிடம் நல்ல மாற்றம் தெரிந்தது. இதைத் தொடர்ந்து சிறுதானிய உணவுகளில் இருந்து உளுந்து களி, தோசை மிக்ஸ், ஹெல்த் மிக்ஸ், ரெடி மிக்ஸ், மில்லட் மில்க், கம்பு அவுல் மிக்சர், நட்ஸ், உலர் பழங்கள், காய்கறி விதைகள் கொண்டு கடலை மிட்டாய், சிறுதானிய பிஸ்கெட்டுகள், ஸ்நாக்ஸ்கள் எல்லாமே தயாரித்து சந்தைப்படுத்த துவங்கினோம். இதில் எந்த வித கலப்படமும் நாங்க சேர்ப்பதில்லை. பிஸ்கெட் மற்றும் கடலைமிட்டாய்க்கும் வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை தான் பயன்படுத்தினோம்.
சிறுதானியம் பொறுத்தவரை உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் நம் உடலுக்குத் தேவையான அனைத்தும் கொடுக்கும். அதனால்தான் மருத்துவர்கள் மற்ற உணவுகளுடன் சிறுதானியத்தையும் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள். உதாரணத்திற்கு, வரகு உடலில் ஏற்படும் காயங்களை மறைய செய்யும். கம்பில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு சிறுதானியத்திற்கும் தனிப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது. அப்படிப்பட்ட சிறுதானிய உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இதில் வேறு என்ன புதிய உணவுகளை தயாரிப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறேன்’’ என்கிறார் ரெய்ஸா.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post நுண்ணூட்டச் சத்துகளில் அடங்கி உள்ளது ஆரோக்கியம்! appeared first on Dinakaran.