தாம்பரம்: சேலையூரில் பஞ்சு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அது, அருகில் இருந்த பேக்கரி, ஓட்டலுக்கும் பரவியதால் பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால், பெரும் பரபரப்பு நிலவியது. தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பேக்கரி மற்றும் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளின் அருகிலேயே பஞ்சு கடை உள்ளது. பஞ்சு கடையின் அருகே நேற்று வெல்டிங் வேலை நடந்ததாக கூறப்படுகிறது. இதில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிலிருந்து வெளியேறிய தீப்பொறி பஞ்சு கடையில் இருந்த பஞ்சியில் பட்டு, திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. பஞ்சு கடை தீப்பற்றி எரிவதை கண்ட ஊழியர்கள் அலறிஅடித்து வெளியில் ஓடிவந்து உயிர் தப்பினர்.
பஞ்சு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி அருகிலிருந்த பேக்கரி மற்றும் உணவகமும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், 3 கடைகளிலும் ஏற்பட்ட தீயை சில மணி நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால், தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 கடைகளிலும் சேர்த்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
The post வெல்டிங் தீப்பொறி விழுந்து விபரீதம்: பஞ்சு கடையில் தீ விபத்து: பேக்கரி, ஓட்டலும் நாசம் appeared first on Dinakaran.