சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* சென்னை மாநகராட்சி முழுவதும் 392 அம்மா உணவகங்கள் உள்ளன. இதில் பணிபுரிபவர்களுக்கான தினகூலியை ரூ.300ல் இருந்து ரூ.325 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* நாவலர் நகர் – லாக்நகர் பகுதியில் ரூ.61.87 லட்சம் செலவிலும், வாலாஜா சாலை – பாரதி சாலையில் ரூ.1.21 கோடியிலும், பாலாண்டியம்மன் கோயில் தெருவில் ரூ.21.64 லட்சத்திலும், சிங்காரவேலர் பாலத்தில் இருந்து கைலாசபுரம் பாலம் பகுதியில் ரூ.56.8 லட்சத்திலும், முண்டகக்கண்ணி அம்மன் பாலம் பகுதியில் ரூ.21.56 லட்சத்திலும், கெனால்பேங்க் ரோடு மயிலாப்பூர் பாலம் மந்தைவெளி பாலம் பகுதியில் ரூ.50.19 லட்சத்திலும், பக்கிங்காம் கால்வாய் ஒட்டியுள்ள இடங்களில் ரூ.4.50 கோடியிலும் பூங்கா அமைக்கப்படும்.
* கடந்த வருடம் டிசம்பர் 9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த திட்டமிட்டு அதற்காக ரூ.13 கோடியை மாநகராட்சி செலவு செய்தது. திடீரென கார் ரேஸ் நிறுத்தப்பட்டது. இந்த ரேஸ் நடத்த முதற்கட்ட தொகையாக தமிழக அரசு ரூ.6.42 கோடி வழங்கியது. மீதமுள்ள ரூ.7.27 கோடியை தர வேண்டியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.8.25 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும்.
* 1, 2, 3, 4, 7, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய 10 மண்டலங்களில் மாடுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்த தலா 5 மாடு பிடிக்கும் பணியாளர்ககள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
* அட்டெண்டர் என்ற பணியில் நிர்ணயித்த குறைந்தபட்ச ஒரு நாள் ஊதியத்தை நபர் ஒருவருக்கு ரூ.687 என நிர்ணயம் செய்யவும், இதன் மூலம் பணியாளர் ஒருவருக்கு மாதம் ரூ.20,610 ஊதியம் வழங்கப்படும், உள்ளிட்ட 85 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பள்ளிகளில் சாதி பாகுபாட்டை தடுக்கும் அறிக்கையை கிழித்த பாஜ உறுப்பினர்
கூட்டத்தில் மேயர் பேசும்போது, குறுக்கிட்டு பேசிய பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த், பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை களைய வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்த முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கையை மாநகராட்சி மாமன்றத்தில் மேயர் முன்னிலையில் கிழித்து வீசி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மாமன்ற நடவடிக்கைக்கு தொடர்பில்லாமல் பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் பேசிய கருத்துகளை அவைகுறிப்பில் இருந்து நீக்க மேயர் பிரியா உத்தரவிட்டார்.
The post சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: பார்முலா 4 கார் ரேஸ் நடத்த செலவு செய்த பணத்தை தமிழக அரசிடம் கேட்க தீர்மானம் appeared first on Dinakaran.