திருவாசகத் தேன்

உலகில் கெடாத ஒரு சில பொருள்களில் தேனும் ஒன்று. அது தானும் கெடாது, தன்னுடன் சேர்ந்த ஒன்றையும் கெடவிடாது. அதுமட்டுமல்ல, நீரிழிவு நோய் (சர்க்கரை) இருப்பவர்கள் இனிப்புப் பொருள்கள் எவையாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது. ஆனால், தேனைச் சாப்பிடலாம். அதுவும் இனிப்புச் சுவையுடையதுதான் என்றாலும், அது உடலுக்கு ஊறு விளைவிக்காது. மாறாக, அது மருந்தாக மாறும். உணவும் மருந்துமாக இருக்கும் ஒப்பற்ற பொருள் தேன். இந்தத் தேனுடன் திருவாசகத்தைச் சேர்த்து ‘திருவாசகத் தேன்’ என்று கூறுவது மரபு. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், “வாதவூர் அண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத்தேன்” என்று குறிப்பிடுகிறார். அதை அப்படிக் குறிப்பிடக்காரணம், இனிப்பான பாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதற்காக மட்டுமல்ல. திருவாசகத்தைப் படிப்பவர்கள் என்றும் கெடாமல் இருப்பர். அதனாலும்தான். இந்தத் தேன் என்றும் அழியாத தேனாகும் அதற்குக்காரணம், இறைவனே இதை எழுதியதுதான். ஊழிக்காலத்தில் உலகமெலாம் அழிந்து ஒருவரும் துணைக்கு இல்லாமல் தனித்து இருக்கும் நிலை வரலாம் என்று உணர்ந்தார் சிவபெருமான். அதனால் தன் தனிமையைப் போக்கிக்கொள்ள, மாணிக்கவாசகர் சொல்ல, இறைவனே இறங்கிவந்து எழுத்தாணி தொட்டு இந்தத் திருவாசகத்தை எழுதிக்கொண்டார். இதை,

“கடையூழி வரும்தனிமை கழிக்க அன்றோ
அம்பலத்து உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி
கருதினதே”

– என்று பாடுகிறார் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை உலகமே அழியும் என்று நினைத்த இறைவன், அழியாதது திருவாசகம்தான் என்று அறிந்து, அதனை உலகுக்கு அறிவிக்கும் நோக்குடனும், அழியும் உலகில் அழியாதது திருவாசகம்தான் என்பதை அறிவித்தார். அதனால், இதைத் ‘தேன்’ என்று சொல்வது சிறந்த பொருத்தமாகும். சரி, இந்தத் தேனை மாணிக்கவாசகர் என்னும் மாணிக்கவண்டு; வாதவூரில் பிறந்த வண்டு; எந்த மலரிலிருந்து எடுத்தது? என்று ஆராய்ந்தால் அந்த வண்டு சிவபெருமானின் பாதம் என்ற மலரிலிருந்துதான் எடுத்தது எனலாம். இந்தத் திருவாசகத்தேனை இன்று பலரும் முற்றோதல் செய்கிறார்கள். சிறப்புதான். ஆனால், சிலர் திருவாசகத்தின் பொருளை நின்று, நிதானித்து உணர்ந்து பாடாமல் ‘வேகம் கொண்ட வேந்தனின்’ பாடல்களை வேகமாகப் பாடுகிறார்கள். அது தவறு. மாணிக்கவாசகரே திருவாசகத்தை எப்படிப் பாடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்” என்று உணர்ந்து அணுஅணுவாக அனுபவித்துப் பாடவேண்டும். அதை, துளித்துளியாகத்தான் சுவைக்க வேண்டும். அது தித்திக்கும் தேன்
அல்லவா!

முனைவர் சிவ. சதீஸ்குமார்

The post திருவாசகத் தேன் appeared first on Dinakaran.

Related Stories: